கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மெட்ராஸ் விமானநிலையத்தில், அதாவது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன், சமீபத்தில் ஏர்போர்ட் வளாகத்தில் திறந்துள்ள பி. வி. ஆர். திரையரங்கில் சில படங்களையும் போய் பார்த்துவிட்டேன். இருந்தும் அங்கே வளாகத்தினுள் இருக்கும் புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததில்லை. இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ சக்தி சந்தியம்மன் ஆலயம் என்ற இந்தக் கோயிலில் அம்மன் சன்னிதியோடு திரு ஐயப்பன், திரு கணபதி, திரு சிவன், நவக்கிரகம் என்று சில துணை சன்னிதிகளும் இருக்கிறது. நல்ல முறையில், சுத்தமாக பராமரிக்கப்படுவது போலத் தோன்றுகிறது. அடுத்த முறை, வாய்ப்பு இருப்பின் அவசரப்படாமல், சீக்கிரம் புறப்பட்டு சென்று அம்மனைத் தரிசிக்கவும்.

இந்தியாவில் இருக்கும் வேறு எந்த விமான நிலையத்திலும் வளாகத்தினுள் கோயில் எதுவும் கிடையாது என்று சில ஆண்டுகளுக்கு முன் நாளிதழில் படித்த நினைவு. அந்த இடத்தில் விமானநிலையம் கட்டப்பட இடம் கையகப்படுத்திய போது, அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் வேண்டிக்கொண்டதால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படும் கோயில் இது.

இருக்கும் இடம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வந்திறங்கும் தரைத் தளத்தின் எதிரில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்தகத்தின் முன்னர் இருக்கிறது. இதை ஒட்டி ஒரு சங்கீதா துரித உணவகம் இருக்கிறது. இந்தியத் தேசியக் கொடிமரத்திலிருந்து தெற்காக ஒரு நூறு ஆடித் தூரத்தில் இருக்கிறது.

Categorized in:

Tagged in:

,