இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இப்போது மெட்ரோ பணிகள் வேறு, கேட்கவே வேண்டாம்.

காலை எட்டு மணி தானே, கடைகள் திறந்திருக்காது பார்க்கிங் கிடைக்கும் என நினைத்து காரை எடுத்துக் கொண்டு சென்றது என் முதல் தவறு. அங்கே கிழக்கு மாட வீதியில், பாரதிய வித்யா பவன் வாசலில் நிறுத்திவிடலாம் என்பது என் திட்டம். ஆனால் எனக்கு முன்பே பல நூறு வாகனங்கள் எப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்பது தெரியாமல் நான் போய் இடம் கிடைக்காமல் திண்டாடினேன். அதற்குள் என் அன்பு மனைவி “இதற்குத் தான் கார் வேண்டாம் என்று சொன்னேன்” என ஆரம்பிக்க, எனக்குப் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கோயிலை காரில் ஒரு சுற்றுச் சுற்றினால் அந்த ஈசன் மனமிறங்கி ஒரு நிறுத்தக இடம் கிடைக்கச் செய்வார் என நம்பி ஒரு சந்தில் திரும்பினேன். அவசரத்தில் திரும்பியது பொன்னம்பல வாத்தியார் தெரு, அதாவது ஜன்னல் (வடை) கடை இருக்கும் தெரு. சரி, வந்தது வந்தாச்சு எனக்கு முன்னால் வண்டியெதுவும் இல்லை, அப்படியே போய் கோயிலின் பெரிய கோபுரம் வாசலில், வலது பக்கம் திரும்பி ராசி பட்டுகள் கடை வழியாக மீண்டும் கிழக்கு மாட வீதிக்குச் சென்றுவிடலாம் எனத் தொடர்ந்தேன்.

அப்போது தான் கவனித்தேன்.

கோயிலுக்குப் போகும் முன் செருப்புகளை விடும் இடத்துக்கு வாசலில் ஒரு போக்குவரத்து தடுப்பு. ஈசன் தொண்டையில் மாட்டிய ஆலகால விஷம் போன்ற நிலையில் என் நீல நிற கார். சரி, இறங்கிப் போய் தடுப்பை எடுத்து வைத்து விட்டு வலது பக்கம் திரும்பலாம் எனப் பார்த்தால் கோயில் எதிரே சன்னிதித் தெரு முழுவதும் தடுப்புகள், அலங்காரச் சாமான்கள், சவுக்கு கட்டைகள். கார் என்ன, நடக்கக் கூட முடியாது என அறிந்து கீழே வைத்த காலை திரும்ப காரிலேயே வைத்து, வேறு வழியில்லாமல், எந்த வண்டியும் எனக்குப் பின்னால் அந்த அகலம் குறைந்த தெருவில் வரக் கூடாது என்று இந்த முறை கற்பகாம்பிகையை மனத்தில் நினைத்து ரிவர்ஸ்ஸில் வர ஆரம்பித்தேன். அந்த இருபது அடிகள் என் இதயம் இருந்தது காரின் பின் புறத்தோற்றக் கண்ணாடியில். இடது புறம் வந்த ஒரு சந்தில் (பொந்து என்று தான் சொல்ல வேண்டும்) காரை திருப்பி வந்த வழியே வந்து தெற்கு மாட வீதியை அடைந்தேன், உயிர் திரும்ப வந்தது. வலது பக்கமாகக் குளத்தை ஓர் அரை சுற்று சுற்றி, புதிதாகத் திறந்திருக்கும் நித்ய “அமிர்தம்” உணவகத்தின் முன்னர் ஒரு கார் பின்னால் எடுக்க, பார் கடலில் தேவர்கள் திணறியது போல, பார்க்கிங்க்கு சிக்கிய எனக்கு அமிர்தம் கிடைத்த நிம்மதி. ஹர ஹர சிவனே!

குறிப்பு: புகைப்படங்கள் எடுத்தது போக வேண்டிய இடம் போய்விட்டு, காரை எடுக்க நடந்து சென்ற போது, ஓர் அரை மணி இடைவேளைக்குப் பின்னர் அதே இடங்கள், சரித்திரப் பதிவுக்காக. நடுவில் இருக்கும் படத்தில் காணும் கார், போட்டோஷாப் உதவியால் வந்தது.

#ChennaiTraffic #Mylapore

Categorized in:

Tagged in:

, ,