சென்னைவாசிகளுக்கு எது முக்கியம்? விடை: சாலையோ பொதுப் போக்குவரத்தோ இல்லை!

⛔தென் சென்னை சாலைகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக தோண்டி, குத்தி குதறி தான் இருக்கிறது. பலவும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கவே படவில்லை, அதனால் தோண்டவே வேண்டாம், அவையே உள்வாங்கி விடுகிறது. இதில் மெட்ரோ வேலை காரணமாக நகரத்தின் முக்கிய சாலையில் ஒன்றான (கோடம்பாக்கம் முதல் போரூர் வரை) ஆற்காடு சாலை, அதன் அகலத்தில் தொண்ணூறு சதம் அடைக்கப்பட்டு விட்டது. மீதம் இருப்பதில் எப்படியோ பேருந்துகளும் கார்களும் ஊர்ந்து செல்கிறது, ஒரு நூறு மீட்டரைக் கடக்க இருபது நிமிடம் என்கிற அதி வேகத்தில்.

🚧 இந்த ஞாயிறு சாலிகிராமத்தில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. பிரசாத் ஸ்டுடியோ அருகில் அவரின் வீடு. ஆற்காடு சாலை இப்போது ஒரு வழிப் பாதை (போரூரில் இருந்து வடபழனி தான் போக முடியும்), அதனால் அசோக் நகர் லக்ஷ்மன் ஸ்ருதி சென்று, கே. கே. நகர் சிவன் பூங்கா, எண்பது அடிச் சாலை, ஆவீச்சி பள்ளி அருகே ஆற்காடு சாலையில் வலது திரும்பி சிறிது தூரத்தில் சூர்யா மருத்துவமனை அருகில் அருணாசலம் சாலையில் இடது திரும்பி செல்ல திட்டமிட்டு சென்றேன். என் அதிர்ஷ்டம், சூர்யா மருத்துவமனை வாசலில் அடைத்துவிட்டார்கள். எங்கேயும் இடது திரும்பவே முடியவில்லை. மீண்டும் வடபழனி, லக்ஷ்மன் ஸ்ருதி வரை வந்துவிட்டேன். திரும்ப சிவன் பூங்கா சென்று, அங்கே வண்டியை நிறுத்தி, அங்கே இருந்து ஆற்காடு சாலை நோக்கி நடந்து சென்றேன்.

👮🏾‍♂️போகும் வழியில் காவலில் இருந்த போலீஸை, என்ன சார் அருணாசலம் சாலைக்கு எப்படி செல்வது, ஒரு வழிகாட்டும் பதாகைக் கூட இல்லையே, வடபழனி போய் ஒரு முழு சுத்தி வந்தேன் என்று மெதுவாக கேட்டேன். அக்கறையான குரலில் அவர், அது என்ன சார் பண்ணுவது இன்றைக்குக் காலையில் தான் சூர்யா மருத்துவமனை வாசலில் சாலையே உள்வாங்கி கொண்டுவிட்டது, பாதுகாப்பு கருதி முடியிருக்கிறோம், நீங்க அருணாசலம் சாலைக்கு முன்னால் ஒரு சந்து வரும், அதில் இடது திரும்பி, சுற்றிச் செல்லவும் என்றார். நன்றி கூறிவிட்டு நடந்தே நண்பரைப் பார்க்க சென்றேன். எனக்கு நடை நல்லது தான், ஆனால் என் அம்மாவைக் கூட்டிக் கொண்டு சென்றிருந்தேன் என்றால் எப்படி போயிருப்பேன் என்று தெரியவில்லை. இந்த அழகில் இந்த ஒரு அரை கிலோமீட்டரில் சென்னையில் பிரபலமான நான்கு பெரிய மருத்துவமனைகள் (போர்டிஸ், விஜயா ஹார்ட், விஜயா, எஸ். ஆர். எம்) மற்றும் சூர்யா போன்ற சிறிய மருத்துவமனைகள் பல இருக்கிறது – அவசரக் காலத்தில் எவ்வளவு பேர்கள் சிரமப்படுகிறார்களோ, பாவம்.

🚇மக்களான நாம் பொதுப் போக்குவரத்து, மழை நீர் வடிகால் இதற்காக சில வருட கஷ்டங்களை அனுபவிக்க தான் வேண்டும். அதுவும் இதெல்லாம், தனி வாகன வைத்திருப்பவர்களான, கொஞ்சம் வசதியானவர்களின் கஷ்டம். இதையெல்லாம் நான் தவறாக சொல்லவில்லை. ஆனால், ஓர் இடத்தில் வேலை நடந்தால் அல்லது அடைக்கப்பட்டால், மாற்று பாதை எந்த வழி என்று கேட்காமலேயே அரசுத் துறைகள் வழி செய்ய வேண்டாமா? இன்றைக்கு இருக்கும் வசதியில், ஒரு பிளெக்ஸ் பதாகை வைப்பது என்பது மாநகராட்சிக்கு அவ்வளவு கடினமா? இல்லை இதெல்லாம் அதீத, மேட்டுக்குடி எதிர்ப்பார்ப்பா?

🍾இறுதியில் எங்கே நொந்து போனேன் தெரியுமா? இணைப்பில் உள்ள படத்தை எடுத்த இடத்தில் இருந்த விளம்பர பதாகையைப் பார்த்தவுடன் தான் – எதற்கு மட்டும் வழி பலகை வைத்திருக்கிறார்கள் பாருங்கள். என்ன கொடுமை சரவணன் இதெல்லாம் என்று மைண்டு வாய்ஸ் சொல்ல, வாழ்க மக்களாட்சி என்று வாழ்த்தி நடந்தேன்.

பின்குறிப்பு: இது ஒரு அரசியல் கட்சியின் தவறு, அல்லது இன்னொரு அரசியல் கட்சியின் தவறு என்று சொல்வது எளிது. எனக்கு தோன்றுவது இது மாநிலங்கள், நாடு, அரசியல் கட்சிகள் என்றெல்லாம் வித்தியாசப்படும் விஷயம் இல்லை. எல்லா இடத்திலும் இப்படி தான் இருக்கு. பெங்களூரு வெள்ளம், பாகிஸ்தான் வெள்ளம், அமெரிக்கா நியூ அர்லன்ஸ் புயல், சென்னை வெள்ளம் என்று எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான். இதெல்லாம் பார்க்கும் போது சீனா மேல் என்று தோன்றுகிறது (இதை வெறுப்பில் தான் சொல்கிறேன்). அவர்கள் பதிலாக கேட்பது நம் பேச்சுருமை – அதை வைத்து கொண்டு மட்டும் நாம் என்ன சாதிக்கிறோம்!

#ChennaiCorporation #arcotroad #ChennaiMetro

Categorized in:

Tagged in: