யூடியூப்பில் உங்களது கணக்கிற்குள் செல்லாமல், பெயரற்று, அவ்வப்போது பயன்படுத்திப் பாருங்கள்.

பொதுவாக, நமது பெயரில் இருக்கும் கணக்கில் தான், நாம் யூடியூப்பைப் பயன்படுத்துவோம், அது தான் நல்லமுறையும் கூட. அப்படிச் செய்யும் போது, உங்களுக்கென்று, நீங்கள் விரும்பும் (அல்லது கோபப்படும்) விஷயங்களைப் பற்றிய காணொளிகளை மட்டும் தான் கூகிள் கணினிகள் தேர்ந்தெடுத்து உங்களுக்குக் காட்டும். மற்றவைகள் எவ்வளவு சிறந்தாகயிருந்தாலும், முக்கியமானவையாகவிருந்தாலும் யூடியூப் அவற்றைப் பற்றி உங்களுக்கு மூச்சுக்கூடவிடாது. இதற்கு Personalization (தனிப்பயனாக்கம் என்று கூகிள் சொல்கிறது, பிரத்தியேகமான என்று புரிந்துக் கொள்ளலாம்) என்பது அதன் மென்பொருள் பெயர். சுருக்கமாகச் சொல்ல, நீங்கள் உங்கள் கணக்கில் பார்ப்பதும், நான் என் கணக்கில் பார்ப்பதும் வேறு வேறாக இருக்கும். இது தான் யூடியூப்புக்கும், தொலைக்காட்சிக்கும் இருக்கும் மிகப் பெரிய வேறுபாடு.

இதைச் செய்ய, இதற்குப் பின்னால் மிக நுணுக்கமான, கணித வித்தைகள் (செயற்கை நுண்ணறிவு) இருக்கிறது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும், இது நம்மை ஓரிக் கொக்குகளாக, முட்டாள்களாக வைக்கிறது என்று சமூக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள் – இதற்கு இன்ஃபர்மேஷன் பபுல் (தகவல் குமிழி) என்பது பெயர்.

இன்று நான் இப்படி ( கணக்கிற்குள் செல்லாமல், பெயரற்று) பயன்படுத்தியப் போது, இலங்கையில் பிரபலமாக (பல லட்சம் பார்வை) இருக்கும் இவர்களது (RJ Chandru Menaka comedy) நகைச்சுவை துணுக்குகளைப் பார்க்க முடிந்தது. தனிப்பட்டுச் சொல்ல எதுவுமில்லை, டிக்-டாக்கில் வருவது போன்ற நுண்படங்கள் தான். நான் பார்த்த ஒருசில துணுக்குகளில் தெரிந்த நகைச்சுவை கூறுகள் தான், சலிப்பாகயிருந்தாலும், ஆனால் அறுவருப்பாகயில்லை. இலங்கைப் போன்ற சிறிய நாட்டில் இருக்கும் இவர்களைப் போன்ற படைப்பாளிகளுக்கு யூடியூப் போன்ற செயலிகள் வரப்பிரசாதம், இல்லையென்றால் இலங்கைக்குள், இலங்கைத் தமிழர்களுக்குள் மட்டுமே இவர்களின் படைப்புகள் போய்ச்சேரும் – இந்தியப் போன்ற மிகப் பெரிய நாட்டில் (மக்கள் தொகையில்) இருக்கும் எனக்கும்கூட அவ்வப்போது இந்த நிலை மறந்துவிடுகிறது.

#இலங்கை #நகைச்சுவை #Youtube #shortsvideos

Tagged in: