கணினியில் தமிழை முதல் தர மொழியாகக் கொண்டு வர வேண்டும் எனப் பலர் முப்பது/நாற்பது வருடங்களாகப் பாடுப்பட்டு வந்துள்ளார்கள். உத்தமத்தின் (INFITT) மூலமாக அவர்களின் அருகில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்னால் முடிந்தச் சிறிய வேலைகளும் (பங்கையும்) செய்துள்ளேன். அந்த பின்னணியில் இந்த விளம்பரம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஏன் என்றால்? உலகத்தின் மிக அதிக மதிப்புக் கொண்ட ஐந்து நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், அவர்களின் (அதிகமாக) பெரு நிறுவனங்களுக்கானப் படைப்பான டீம்ஸ் (Microsoft Teams) சேவையைப் பற்றி தமிழில் ஒரு பெரிய விளம்பரத்தை இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் கொடுத்துள்ளார்கள்.

இதில் தொழில்நுட்பமான விசயம் புதிதாக இல்லையென்றாலும், இது ஒரு முக்கிய குறியீடு – பெரு நிறுவன அதிகாரிகளிடம் தமிழ் மொழியில் பேசலாம், ஆங்கிலம் மட்டும் உதவாது – தமிழில் பேசினால் வியாபாரம் கூடுதலாக ஆகும் என்பது. விற்பனைக்கு பின்னர் தமிழ் பயனாளர்களின் தேவைகளை தமிழில் சிறப்பாகக் கொடுக்கப்பார்கள், கொடுத்தாக வேண்டும். இது உடனே நடக்காது, ஆனால் படிப்படியாக நடக்கும், ஏற்கனவே நடந்துக் கொண்டிருப்பது வேகம் பெரும்.

இது ஏதோ புதிது என்று எண்ண வேண்டாம். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னே மைக்ரோசாப்ட் “பாஷா இந்தியா” (BhashaIndia.com) என்ற இணையத்தளத்தில் இந்திய மொழியில் அவர்களின் படைப்புகளைப்பற்றிய தகவல்களைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் அதெல்லாம் சிறிய அளவிலான முயற்சி, வல்லுனர்களுக்கான முயற்சி.அவர்கள் மட்டுமில்லை, சில வருடங்களுக்கு முன் கூகுள் அவர்களின் விளம்பர சேவையைத் (Google Adsense, இதன் வெளியீட்டு நிகழ்ச்சியைப் பற்றி என் பதிவு இங்கே) தமிழில் விரிவாக்கியப் போது சூடுப்பிடித்தது இத்தகைய முயற்சிகள். இதில் செல்பேசியின் வரவு ஒரு பெரிய உந்துதல் என்பதை மறுக்க முடியாது.

இப்போது இத்தகைய முயற்சிகள் முதலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் பேச தமிழ் உகந்தது எனக் காட்டுகிறது. இந்தப் பெரிய நிறுவனங்கள் (மைக்ரோசாப்ட் மற்றும் கூகில்) இத்தகைய முயற்சிகளை சாதாரணமாகச் செய்ய மாட்டார்கள் – அதற்கு முன் பல பல கணக்கெடுப்புகள், கணிப்புகளைப் பார்த்துவிட்டுத் தான் செய்வார்கள். தமிழ் சோறு மட்டும் போடாது, கோடீஸ்வர நிறுவனங்களின் அதிகாரிகளிடம் தொழில்முறை மொழியாகவும் வந்துக் கொண்டிருக்கிறது. சந்தேகம் வேண்டாம்!

[நான் மேலே கூறியது தமிழுக்கு மட்டுமில்லாமல் எல்லா பெரிய இந்திய மொழிகளுக்கும் பொருந்தும்]

Categorized in: