
தமிழ்நாட்டில் வரும் தமிழ் வாசகங்கள்
தமிழ்நாட்டில் வரும் விளம்பரங்களில் தங்கிலீஷ் அதிகம் வருகிறது, கேட்டால் மக்களை ஈர்க்கும் வகையில், ஆங்கிலத்தில் (ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு) தான் கவர்ச்சியாக வாசகங்கள் அமைகின்றன என்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரு பெரியக் கட்சிகளும் தங்களின் (விளம்பரப் பாடல்) வாசகங்களை அழகாக, நினைவில் நிற்கும்படி தான் அமைத்திருந்தார்கள் – அதுவும் தமிழில்! (இதைச் சொல்லும் போது இதில் இருக்கும் முரணை நான் மறக்கவில்லை). நிறுவனங்களும் மற்றவர்களும் சொல்பவற்றை விடப் பிரபலமான கட்சிகளும், தமிழக (ஊராட்சிகள், மத்திய) அரசும் சொல்லும் வாசகங்கள் பட்டிதொட்டித் தொறும், பாமரனையும் சென்றடையும். அவர்கள் தமிழில் சொல்வதால் ஆங்கில மோகம் குறையும், அந்தத் தமிழ் வாசகங்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும், அடுத்தவர்கள் அதையே பயன்படுத்தும் போது அந்த வார்த்தைகள் எளிதாக மக்கள் நாவில் மனதில் போய் நிற்கும்.
இதற்கு சமீப கால உதாரணங்கள் சொல்லலாம் (உங்களுக்குத் தோன்றுவதைக் கீழே கருத்துப் பெட்டியில் பகிரலாம்):
- விலையில்லா மடிக்கணினி
- காணொளிக் காட்சி
- செல்பேசி
- (அம்மா) உணவகம் – (அம்மா) ஹோட்டல் என்று யாரும் சொல்பதில்லை
- சமத்துவபுரம்
- உழவர் சந்தை
- (கலைஞர்) முதல்வர் காப்பீட்டுத் திட்டம்
நேற்று என் அறையில் இருந்த ஒரு ‘கிறுக்கல்’ (குறிப்பு) புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பித்தேன் – கிறுக்கினேன் என்று தானே சொல்ல வேண்டும். சட்டென்று அதன் மேல் அட்டையில் இருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது. சில ஆண்டுகளுக்கும் முன் ஒரு மென்பொருள் போட்டிக்கு நடுவராகச் சென்றிருந்த போது, தமிழக அரசின் தொழில் முனைவோர்க்கான அமைப்பு கொடுத்த புத்தகமிது. அதிலிருந்த வாசகம் சொல்லவந்த விசயத்தை நேராக, அவர்கள் யார் என்பதைத் தெளிவாகவும், என்ன உதவ முடியும் என்பதையும் ஆறே வார்த்தைகளில் சொல்லியிருந்தவிதம் என்னைக் கவர்ந்தது, அதனால் இங்கே பகிர்கிறேன்.
தொழில் தொடங்க வாருங்கள், தோள் கொடுக்க நாங்கள்.


