கோமல் தியேட்டர் நாடகக்குழுவின் “அவள் பெயர் சக்தி” நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இந்த ஆண்டு கோடை நாடக விழாவின் இறுதி நாடகமாக நாரத காண சபாவில் அரங்கேறியது, நன்றாகயிருந்தது. திருமதி தாரிணி கோமல் (Dharini Komal) எழுதி, இயக்கியிருந்தார். நான்கு தலைமுறை பெண்களை மையமாக வைத்து, இன்றையக் காலத்துக் குடும்பப் பிரச்சனைகளை அலசுகிறது நாடகம்.

Aval Peyar Sakthi drama by Komal Theatre
சென்னையில் வசிக்கும் அன்பான கணவன் மனைவிக்கு இரண்டு மகள்கள், ஒரு வயதான பாசக்கார அம்மா. குடும்பத்தையும், குழந்தைகளையும் முழுவதும் அம்மாதான் பார்த்துக்கொள்கிறார், இதனால் மருமகளால் வேலைக்குப் போய் வர முடிகிறது, மகனாலும் தன் தொழிலில் வெற்றிப்பெற முடிகிறது. பெரிய பெண் ஜனனிக்கு, திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது, கணவன் கார்த்திக், அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை (அதித்தி) – இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள், பெரியப் பதவிகள் என்பதால் இருவருக்குமே அதிக வேலைப்பளு. அதுவும் கார்த்திக் சதா வேலை வேலையென்று இருக்கிறான் – குழந்தையும், வீட்டையும் கவனிக்கும் பொறுப்பு முழுவதும் ஜனனி தலையில் விழுகிறது. உதவிக்கு இருவரின் பெற்றோர்களும் அந்த ஊரில் இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜனனி வெறுத்துப் போய், தன் பெற்றோர் வீட்டுக்கு, சென்னைக்கு, அதித்தியோடு வந்துவிடுகிறாள். இதன் நடுவில், சின்னப் பெண் ஹரிணிக்கு, கல்யாண வரன் பார்க்கிறார்கள் – அர்ஜூன் என்கிற நல்லப் பையன் கிடைக்கிறான். ஜனனி-கார்த்திக் சேர்ந்தார்களா? ஹரிணி-அர்ஜூனுக்கு திருமணம் நடந்ததா என்பது தான் மீதிக் கதை.
வசனங்கள் காலத்திற்கு ஏற்ப நன்றாகயிருந்தது. நடித்த அனைத்து நடிகர்களுமே சரியானத் தேர்வு, ஒருவர்க்கூட சோடையில்லை. அதுவும் குழந்தை அதித்தியாக வந்த சிறுமியின் திறமை அபாரம், தூள் கிளப்பிவிட்டாள், எப்படி தான் ஒரு வசனம்கூட பிழகாமல், எங்குமே தங்குதடையில்லாமல் செய்தாளோ? பாராட்டுக்கள். ஜனனியாக வந்தவர், கதாப்பாத்திரத்தின் ஏமாற்றத்தை, கோபத்தை ஆழமாக வெளிப்படுத்தினார், அவருக்கும் பாராட்டுக்கள்.
பாட்டி, அம்மா, மகள், பேத்தி என்ற நான்கு தலைமுறை பெண்களின் சவால்களும், ஆசைகளும், எதிர்ப்பார்ப்புகளும் எப்படி மாறுப்படுகிறது, முன்னேற்றமடைந்திருக்கிறது என்பது தான் கரு. பெண்களை மையமாகக் கொண்ட கதையில், ஆண்களை மறந்துவிடவில்லை – முக்கால்வாசி நேரம் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஆண்களால் தானே பெண்களுக்குப் பிரச்சனையே!. கதையில் வரும் கார்த்திக் மற்றும் அர்ஜூன் இருவரும் முற்றிலும் எதிர்திசையானவர்கள், வாழ்க்கை என்பது என்ன என்பதில் இருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறு, ஜனனியின் தந்தையும் இவர்களிலிருந்து வேறுமாதிரி இருக்கிறார் – ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் அழகாகக் காட்டியுள்ளார் திரு தாரிணி.
நாடகம் இரண்டு மணிக்கு மேலாக சென்றதால் நடுவில் கொஞ்சம் தொய்வாகிவிட்டது, இரண்டு மூன்று அலுவலகக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம், அதோடு இறுதிக்காட்சியை சுருக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் நல்ல ஒரு நாடகம். குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கதையில் வரும் ஜனனி, கார்த்திக், அதித்தி

கதையில் வரும் ஜனனியின் அலுவலகம்

கதையில் வரும் பாட்டி, தந்தை கதாப்பாத்திரத்திங்கள்

கதையில் வரும் கார்த்திக், அவனின் நண்பன்
We have seen at Kikani Auditorium at கோவை. On the whole, a decent drama with all the artistes performing well with good dialogues and baby actor’s performace was superb. After a long gap, we enjoyed a nice show.