
An evening meet on Tamil Script Grammar
எழுத்துருவில் இன்று உலக அளவில் இருக்கும் தலை சிறந்த வல்லுனர்களில் என் நண்பர் (மலேசியா) திரு முத்து நெடுமாறன் (Muthu Nedumaran) அவர்களும் ஒருவர். அண்மையில் அவர் சென்னைக்கு வந்திருந்த போது நண்பர் திரு ராம்கி (Krishnan Ramasamy)அவர்களுடன் ஒரு சந்திப்பை அவரின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். திரு நா இளங்கோவன் மற்றும் திரு நானா (Nana Shaam Marina) என்னுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
ஒரு மாலைப் பொழுது இவ்வளவு சுவாரஸ்யமாக, கருத்து உடையதாக இருக்குமா என்று நம்ப முடியவில்லை. அந்த ஓரிரு மணி நேரங்களில் தமிழ் எழுத்துக்கள், எழுத்து வடிவங்கள் ஒவ்வொரு 100 ஆண்டுகளும், எழுதப்படும் பொருட்கள் (கல், உலேகம், ஓலை, காகிதம்), முறைகள் மாறும் போதும், எப்படி வடிவங்கள் மாறியது, இன்று இருக்கும் வடிவத்திற்கு எப்படி வந்தது என்று திரு ராம்கி அவர்கள் அவ்வளவு சுவாரசியமாக விளக்கினார்.

தமிழ் எழுத்துகள் முதலில் எப்படி இருந்தது, மூன்று கோட்டிலிருந்து எப்படி ‘அ’ எழுதுவது, மூன்று புள்ளிகளில் எப்படி ‘இ’ ஆனது என்று அவர் விளக்கிய விதம் மிக அழகு, அதை அவரே பேசி ஒரு காணொளியாக வெளியிடும்படி அவரை கேட்டுள்ளேன். இதை மொத்தமாக அவர் ஒரு தொகுப்பாக ஸ்கிரிப்ட் கிராமர் (Script Grammar) என்று வெளியிட உள்ளார்.
அவரை அடுத்து நா இளங்கோவன் அவர்கள் தமிழ் எழுத்துருக்களை எப்படி தரமாக செய்ய உதவலாம், அதற்கு வேண்டிய முக்கிய விஷயங்களை எப்படி ஆவணப்படுத்தலாம் என்ற மிக ஆழமாக கூறினார். இதை அடுத்து நண்பர் முத்து அவர்கள் அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் ஆய்வில் இருந்து சில பகுதிகளை எங்களுக்கு புரியும் வகையில் கூறினார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நானா அவர்கள் அவரின் பலப்பல கேமராக்களை வைத்து எங்களை வளைத்து வளைத்து எங்களை படம்பிடித்துக் கொண்டிருந்தார். மொத்தத்தில் மிகச்சிறந்த ஒரு மாலைப் பொழுது. ஏற்பாடு செய்த முத்துவிற்கும் வந்திருந்த அனைவருக்கும் மிக்க நன்றி!



