
SriMushnam Temple
போன சனிக்கிழமை குடும்பத்தோடு நாங்கள் ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். ஸ்ரீமுஷ்ணம் என் பாட்டியின் பிறந்த ஊர். ஆனால் இதுவரை நாங்கள் பலர் அங்கே போனதில்லை. இந்த முறை உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்று அங்கே போயிருந்தோம், நல்ல தரிசனம் கிடைத்தது.

வைஷ்ணவத்தில், இந்த பூலோகத்தில் சுயம்வக்த (சுயம்பு, தான்தோன்றி, Natural, Not man made) க்ஷேத்ரங்கள் (புனிதத் தலங்கள்) என எட்டு க்ஷேத்ரங்கள் பெரியவர்களால் கூறப்பட்டுள்ளன. அதில் ஸ்ரீமுஷ்ணம் (தூய தமிழில் திருமுட்டம்) விசேஷமான ஒன்று, விருத்தாசலத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. சென்னையிலிருந்து விருத்தாசலம் 220 கிலோமீட்டர் தூரம் – NH45ல் சென்று விழுப்புரம் தாண்டிய பிறகு உளுந்தூர்பேட்டையில் இடது (Left) பக்கம் திரும்பி 20 கிலோமீட்டர் செல்லவேண்டும்.

இங்கே இருக்கும் புஷ்கரணி (குளம்) – பூமியைப் பெருமாள் (விஷ்ணுவின் அவதாரமான பூவராஹ ஸ்வாமி) தூக்கும்போது பெருமாளின் வேர்வையிலிருந்து உருவானதாக ஐதிகம் (நம்பிக்கை). இங்குள்ள ஸ்ரீ வராஹப் பெருமாளை (மூலவர்) வேண்டினால் சொத்து சம்பந்தமான தடைகள், பிரச்னைகள் விலகும், பூமி/சொத்து இவை கிடைக்கும் என்பது ஐதிகம். அது போல குளத்தின் அருகிலிருக்கும் அரசமத்தின் அடியில் ஸேவை தரும் அஸ்வத்தநாராயணனின் (ஸ்ரீ நரசிம்ஹர் ஸ்வாமி) சந்நிதி சென்று பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.




