1960களில் எழுத்தாளர் திரு.சாவி எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ஹாஸ்ய தொடர் தான் “வாஷிங்டனில் திருமணம்“. என் சிறுவயதில் படித்திருக்கிறேனா என்று நினைவில் இல்லை, ஒரு நல்ல புத்தகத்தை அதுவும் நகைச்சுவையான ஒன்றை (மீண்டும்) படிக்க காசக்குமா என்ன?. Flipkartஇல் போன வாரம் இதைப் பார்த்தவுடன் வாங்கி விட்டேன், ரூ.90 தான். புத்தகம் வந்தவுடன், ஒரு நாள் பயணமாக பெங்களூரு போகவேண்டி வந்தது, விமான நிலையத்திலும் விமானத்திலும் காத்திருக்கும் நேரத்தில் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். சிரிச்சு சிரிச்சு படிச்சதில் பிரயாண களைப்பே தெரியவில்லை!. சாவியின் எழுத்தோடு ஒத்து, அதோடு நம்மை மேலும் மகிழவைப்பது கோபுலுவின் சிறப்பான ஓவியங்கள்.

அப்படி கதை தான் என்ன?.

அமெரிக்காவில் வாழும் மிகப் பெரும் பணக்காரார் மிஸ்டர் ராக்ஃபெல்லார். அவரின் தங்கையும், அவர் கணவரும், அவர்களின் பெண் லோரிட்டாவும், (லோரிட்டாவின் சிநேகிதி) வசந்தாவின் கல்யாணத்திற்கு தஞ்சாவுருக்கு வருகிறார்கள். வந்து தென் இந்தியாவின் கல்யாண கலாட்டாவைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். அமெரிக்கா திரும்பியவுடன், இதைப் பற்றியே மிஸஸ் ராக்ஃபெல்லாரிடம் கதை கதையாகச் சொல்கிறார்கள். அதில் மயங்கிய மிஸஸ் ராக்ஃபெல்லார், உடன் அப்படி ஒரு தமிழக கல்யாணத்தை வாஷிங்டனில் தன் (பெரும்) செலவிலேயே நடத்துவது என்று முடிவேடுக்கிறார்.

முடிவானவுடன் பணத்தை தண்ணியாக இழைத்து ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை வாஷிங்டனில் நடத்துகிறார்.  அதற்காக ஒரு மினி தமிழகத்தையே, ஆயிரக்கணக்கான மக்களையும் தமிழகத்தில் இருந்து வரவழைக்கிறார்.  எண்ணிக்கையில்லா விமானங்கள் தினம் சென்னைக்கும் வாஷிங்டனுக்கும், திருச்சிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்தப்படி இருக்கிறது. வெத்தலைப் பாக்கில் இருந்து பூ, பழம், மூக்குப் பொடி என்று ஒரு சென்னை கடைத்தெருவே அமெரிக்காவுக்கு வரவழைக்கப்படுகிறது.  சாஸ்திரிகள் பலப்பேர் அமெரிக்காவிற்கு வந்தார்கள் என்றால்,  ஜான்வாசத்தில் காஸ்லைட் தூக்க நரிக்குரூவாஸ் வருகிறார்கள், அவர்களைப் பார்த்து அமெரிக்க நாய்கள் குரைக்கவில்லையென்று ஆயிரம் நாய்களும் அமெரிக்காவிற்கு  வரவழைக்கப்படுகிறது. இவர்கள் எல்லாம் வந்தால், பாட்டிமார்கள் வராமல் இருப்பார்களா என்ன, அமெரிக்காவில் லட்சக்கணக்கான அப்பளாங்கள் தயாரிக்க அவர்களும் வருகிறார்கள். அவர்கள் தங்கும் இடத்தில் இருந்து, இடும் அப்பாளத்தை எடுத்துக் கொண்டு ஆர்ட் காலரி மாடியில் காய வைக்க ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவே  வாய் பிளந்து கல்யாணத்தைப் பார்க்கிறது.

கல்யாணம் என்றால் சம்மந்தி சண்டையில்லாமலா?. அதுவும் நடக்கிறது, அதையும் ரசித்துப் பார்க்கிறார் மிஸஸ் ராக்ஃபெல்லார். சண்டைப் போட்ட மாப்பிள்ளையின் மாமாவிற்கு ஒரு காரையும் பரிசாக தந்து அசத்துகிறார் அவர்.

இன்று (2014) அமெரிக்காவிலேயே ஆயிரக்கணக்கான கோயில்கள் வந்து விட்டன, பல நூறு இந்திய திருமணங்கள் தினந்தினம் அங்கே நடக்கிறது,  அப்படி இருக்க இதெல்லாம் நம்ப முடியவில்லையே என்கிறீர்களா?. அமெரிக்கா போவதற்கான இன்று இருக்கும் விசா/பாதுகாப்பு கெடுப்பிடிகளில், நினைத்தவுடன் ஆயிரக்கானவர்கள் அமெரிக்கவிற்கு கூட்டிக் கொண்டுப் போக முடியுமா?. அதுவும் நாய்களைக்கூட?.

புத்தகம் எழுதப்பட்டது 1960கள் என்று நினைவில் வைத்துப் படிக்க வேண்டும், இல்லையென்றால் இப்படி இன்னும் பலக்கேள்விகள் நம் மனதில் வந்துப் போகும். அப்படி இல்லாவிட்டாலும், பேசும் எலியை சினிமாவில் பார்த்து ரசிப்பதுப் போல இதெல்லாம் எழுத்தாளரின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை மற்றும் பேனா சுதந்திரம். மொத்ததில் படித்து, சிரித்து மகிழ, வேண்டிய ஒரு புத்தகம்.

Washingtonil-Thirumanam

சாவியின் “வாஷிங்டனில் திருமணம்”

இந்தப் புத்தகம் இலவசமாக தமிழக அரசின் தமிழ் இணையக் கழகத்தின் மின்னூலகத்தில் இருக்கிறது. You can read the book for free from Tamil Digital Library – An initiative of Tamil Virtual Academy

Categorized in:

Tagged in:

,