முட்டாள்தனம்!
மன்னிக்கவும். இதை வேறு எப்படியும் அழைக்க முடியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆப்பிளின் புதிய ஐபோன் 17 இந்தியாவில் விற்பனைக்கு வந்த போது மும்பையில் அதை வாங்க முந்தைய நாளிலிருந்து காத்திருந்த கூட்டத்தைப் பார்க்கையில் எனக்குத் தோன்றியது: இந்த அளவு முட்டாள்கள் இன்னுமா இருக்கிறார்கள் என்று. ஏன் சொல்லுகிறேன் என்று பார்ப்போம்.
சுமார் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் கொடுத்து வாங்குபவர்கள் வரிசையில் நிற்கவில்லை. காசுக் கொடுத்து ஆட்களை நிற்க வைத்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அப்படி தங்களுக்காக வாங்கச் சொன்னவர்கள் முட்டாள்கள். ஐபோன் பற்றிய வெளியீடு வந்தவுடன் ஆப்பிள் அவர்களின் இணையத் தளத்தில் ஆர்டர் செய்யும் வசதியை வழங்குகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ-போன் 16ஈ (iPhone 16e) வெளியீட்டைப் பார்த்து அவர்களின் தளத்தில் ஆர்டர் செய்தேன். சரியாக விற்பனைக்குக் கிடைத்த நாளன்று என் வீட்டுக்கே வந்து கையில் கொடுத்துவிட்டுப் போனார்கள். அப்படி இருக்கையில் எதற்கு வரிசையில் நிற்க வேண்டும்? எப்படி வாங்கினாலும் அதே பொருள் தானே?
இப்படி ஆப்பிள் போன்களின் மேல் ஒரு மோகம் வர மூன்று முக்கிய காரணங்களை நான் பார்க்கிறேன்.
ஒன்று, நிஜமாகவே ஆப்பிள் தயாரிப்புகள் சந்தையில் இருக்கும் சீனா, கொரியா பிராண்ட்களை விடச் சில குறிப்பிட்ட விசயங்களில் சிறப்பாக வேலை செய்கிறது. உதாரணமாக போன் அழைப்புகளின் தரத்தில், பயனர் இடைமுகத்தின் எளிமையில் (தற்போது இது மறைந்து வருகிறது) மற்றும் அவர்களின் செயலிகள்-சந்தையில் கிடைக்கும் செயலிகளின் பாதுகாப்பு தரத்தில்.
இரண்டாவது ஆப்பிள் தயாரிப்புகளை வைத்திருந்தால் அது ஒரு சமூக அடையாளம், ஆடம்பரச் சின்னம், கௌரவம் என்ற பிம்பம். இந்தப் பிம்பம் ஆப்பிளின் நிறுவனர் மறைந்த திரு ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் அருமையாகக் கட்டமைத்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் வேறு எந்த நுகர்வோர் வணிக அடையாளமும் ஆப்பிளின் அருகில் கூட வர முடியவில்லை என்பது உண்மை, அடுத்து பத்து ஆண்டுகளில் வருமா என்பதும் சந்தேகமே.
இந்த இரண்டிலும் சாம்சங், ஏன் மைக்ரோசாப்டும் பல ஆண்டுகள் போட்டி போட்டுத் தோற்றுவிட்டார்கள். ஆனால் அடுத்து நான் சொல்லப்போகும் மூன்றாவது காரணத்தில் முயன்றால் ஜெயிக்கலாம், ஆனால் அதற்கு அவர்கள் முயற்சிகள் எடுப்பது போலத் தெரியவில்லை. அது என்ன மூன்றாவது காரணம்?
அது விற்பனைக்குப் பின்னர் வருவது. இதில் ஆப்பிளை மிஞ்ச யாராலும் முடியவில்லை. அது அவர்களின் பழுதுபார் நிலையங்களின் (ரீப்பேர் செண்டர்களின்) செயல்பாடு. நாம் வாங்கிய பொருளில் உடனேயே பிரச்சனை, அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சனை என்றால் அவர்களின் பழுதுபார் நிலையங்கள் எங்கே இருக்கிறது, அங்கே நமக்கான நேரத்தைப் பதிவு செய்வதில் தொடங்கி நமக்குக் கிடைக்கும் அனுபவம். பொருளைச் சரி செய்யக் கொடுத்தால் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று அவ்வப்பொழுது வரும் தகவல்கள், ஒழுங்காகப் புரிந்து கொண்டு சரி செய்து தருவது என்று எல்லாவற்றையும் ஆப்பிள் நிறுவனம் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கிறார்கள். சாதாரணத் திருகாணி போனால் கூட ஆப்பிள் பல ஆயிரம் ரூபாய் வசூலிப்பார்கள், ஆனால் அவர்களின் வழங்கும் சேவை உலகத்தரத்தில் இருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் நானும் பல செல்பேசி, கணினி நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். அதுவும் இந்தியாவில் இந்தளவு சேவை வழங்கும் ஒரே நிறுவனம் ஆப்பிள் என்று உறுதியாகச் சொல்லலாம். சென்னையில் ஆப்பிளின் ஒரு குறிப்பிட்ட ரீப்பேர் செண்டரில் எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கவில்லை என்பது உண்மை, ஆனால் அது அந்த ஓர் இடத்தில் மட்டுமே. நேரடியாக சாம்சங் இந்தியாவுடன் நான் அவர்களின் விலையுயர்ந்த உத்தரவாதத்திலிருந்த செல்பேசி ஒன்றுக்காகத் தொடர்பு கொண்ட போது கிடைத்தது மிக மோசமான அனுபவம்.
இந்த மூன்று விசயங்களை இப்படியும் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் கிடைக்கும் ஜெர்மன் நாட்டு அவுடி, பென்ஸ் வாகனங்களைப் போன்றது ஆப்பிள் தயாரிப்புகள், விலை உயர்ந்தது ஆனால் தரமாக இருக்கும். இவை ஆடம்பரச் சின்னம், விற்பனைக்குப் பிறகான சேவை நன்றாக இருக்கும். ஜப்பான் நாட்டு சுசுகி, ஹோண்டா போன்றவை இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஷயாமி, ஓப்போ போன்ற செல்பேசிகளைப் போன்றது. என்னைப் பொறுத்தவரை சாம்சங், நம்மூர் டாடா மஹிந்தரா வாகனங்களைப் போன்றது – இவற்றின் தொழில்நுட்பக் குறிப்புகள் மிகச் சிறந்திருக்கும் , ஆனால் பயன்பாட்டில், விற்பனைக்குப் பிறகான சேவையில் (சுமாராகவும்) உங்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்திருக்கும்.
நீங்கள் ஆப்பிள் வாடிக்கையாளரா, அப்படியென்றால் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது? நீங்கள் ஆப்பிள் செல்பேசி வாங்கியதே இல்லையென்றால், விலையைத் தாண்டி அதற்கு வேறு என்ன காரணம்? நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

