ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நான் எனது மேஜை கணினி, மடிக் கணினி, ஐ-போன், ஐ-பேட் என எல்லாவற்றையும் Factory Reset (மீளமைவு) செய்துவிடுவது வழக்கம். இது போகி பண்டிகையில் வீட்டைச் சுத்தம் செய்து, வண்ணம் அடிப்பது போன்றது. கணினியின் அமைப்புகளில் போய் எல்லாவற்றையும் அழிக்கச் சொல்லி, அது முடியும் வரை காத்திருந்து, இயங்குதளத்தில் திரும்ப எல்லாவற்றையும் நமக்கு வேண்டியவகையில் அமைத்து, நம் கணக்குகளை நிறுவி, தேவையான செயலிகளை நிறுவி, கடவுச்சொற்களை உள்ளீடு செய்து எனப் பல மணி நேரப் பணி இது.
[கவனத்தில் கொள்ளவும்: இது எல்லாப் பயனர்களாலும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே, கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் – அல்லது யூ-ட்யூப் காணொலிகளைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். முதல் முறை செய்யும் போது பலவும் தவறாகப் போகும், கோப்புகள் காணாமல் போகும், கடவுச் சொற்கள் மறந்து போகும், அடுத்த சில நாட்களுக்கு உங்கள் வேலை கெடும், இதற்கெல்லாம் நானோ கம்பெனியோ (எந்த கம்பெனி?) பொறுப்பில்லை.]
இப்படி எப்போது மீளமைவு செய்வேன் என்றால்: எனக்குச் சோர்வாக இருக்கும் என்றாவது ஒரு நாள் மாலை வேலையில் செய்வேன். எல்லாக் கருவிகளையும் ஒரே சமயத்தில் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் எல்லாமே வேலை செய்யாமல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம், ஒரு முறை ரகசிய எண்களைப் (OTP) பெற இரண்டாவது கருவி முழு செயல்பாட்டில் இருப்பது அவசியம்.
இந்த மாதிரி ரிசேட் செய்வதால் சில நன்மைகள்:
- ஒன்று, எதுவும் செலவு செய்யாமல் (நேரத்தைத் தவிர) கணினி புதிதாகத் தொடங்கும் போது கிடைக்கும் உணர்வு;
- இரண்டு, நிச்சயமாக முன்பைவிட வேகமாக வேலை செய்யும்;
- மூன்று, பயன்பாட்டில் தேவையில்லாத செயலிகளை, குப்பைகளை வைத்திருப்போம் அவற்றைக் கழிக்க உதவும்;
- நான்காவது, இது முக்கியமானது, நமது கணினிகளில் செல்பேசிகளில் வைத்திருக்கும் சில தரவுகளை, கோப்புகளை, எண்களை, வாட்ஸ்-ஆப் அரட்டைகளை, படங்களை வேறு இடத்தில் உதாரணமாக மேகக் கணிமைகளில் சேமித்து வைக்காமல் மறந்திருப்போம், அப்படி விட்டுப்போகாமல் இருக்க இந்தக் கட்டாய அழித்தல் உதவும்; இன்னொன்று அப்படியே மறந்து போய் அழித்துவிட்டோம் என்பதை மீண்டும் போனை நிறுவும் போதே கண்டு கொள்வோம். இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் செல்பேசி, கணினி பழுதடைந்து ரீப்பேருக்கு/மாற்றும் போது இது காணோம் என்று தெரிந்து கொள்வதைவிட இது மேல் என்பது என் கருத்து. இவற்றைப் பற்றி எனது ‘நுட்பம்‘ நூலில் இன்னும் சில தகவல்களை எழுதியுள்ளேன்.
ஒவ்வொரு முறை இப்படி மீளமைவு செய்தவுடன் சில புது (அல்லது மாற்றி) செயலிகளை முயன்று பார்ப்பேன். நான் அன்றாடம் பயன்படுத்தும் இணைய உலாவிகள் (Web Browser): மைக்ரோசாப்ட் எட்ஜ் (Edge) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox). எனது கணினி, விண்டோஸ் 11 என்பதால் நான் கூகுள் கிரோம், ஆப்பிள் சஃபாரி பயன்படுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த முறை கணினியை மீளமைவுச் செய்தவுடன் முறையே பிரேவ் (Brave) மற்றும் வாட்டர்ஃபாக்ஸ் (Waterfox) இணைய உலாவிகளை நிறுவி இருக்கிறேன். பிரேவ் மற்ற கிரோம் உலாவிகளை விட வேகமாக இருப்பது போலத் தோன்றுகிறது (எல்லாமே மாயம்). வாட்டர்ஃபாக்ஸ் நிச்சயம் ஃபயர்ஃபாக்ஸ்ஸை விட வேகமாக இருக்கிறது.
கூகுள் கிரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், பிரேவ், ஓபேரா, விவாண்டி, ஜோகோ உலா என இன்றிருக்கும் பல இணைய உலாவிகளுமே திறமூல கிரோம்மின் கிளைகளே (வழித் தோன்றல்களே). வாட்டர்ஃபாக்ஸ் திறமூல ஃபயர்ஃபாக்ஸ்ஸைக் கொண்டு இன்னொரு குழு உருவாக்கியிருக்கும் ஃபயர்ஃபாக்ஸ் நிரலின் கிளை.
முக்கிய குறிப்பு: பல கார் அபிமானிகள், தங்களின் காரை (அல்லது பைக்கை) தினம் துடைத்து, வாரத்திற்கு ஒரு முறை கழுவி, மாதத்திற்கு ஒரு முறை பாலிஷ் செய்து, வருடத்திற்கு ஒரு முறை முக்கிய பாகங்களைக் கழட்டி, எண்ணெய்யில் ஊரவைத்து, புது வண்ணம் அடித்துத் திரும்ப மாட்டும் பைத்தியக்காரத் தனத்தை போன்றது இந்தக் கணினி ரிசேட் என்று சிலர் சொல்லலாம். அவர்களை நம்பாதீர்கள். இப்படி காருக்கு செய்வதை நான் கிண்டல் அடிப்பதைப் போல, மற்றவர்கள் நான் இப்படி மீளமைவுச் செய்வதை எனக்கு “கட்டாய மனப்பிறழ்வு” என நினைக்கலாம், அவர்கள் சொல்வதும் ஓரளவு சரியாக இருக்கலாம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

