எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் போக விரும்பிய நகரம்: நம் தொப்புள் கொடி உறவினர்கள் வாழும் யாழ்ப்பாணம். எனக்கு ‘உத்தமம்’ தமிழ்க் கணினி அமைப்பு மூலம் பல நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களும் ஒவ்வொரு முறையும் என்னை சென்னையில் சந்திக்கும் போதும் அழைத்துக் கலைத்துவிட்டார்கள். இருந்தாலும் முதலில் போர், பின்னர் கொழும்பு சென்று அங்கேயிருந்து நீண்ட (ஏழு மணி நேர) சாலை (இரயில்) பயணம் என்பதால் போவதைத் தவிர்த்து வந்தேன்.

போன வாரம் என் உற்ற நண்பர் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார். இரண்டு நாட்களுக்கு எங்காவது விமானத்தில் ஒரே தாவலில் போகக் கூடிய ஊருக்கு இருவரும் சென்று வரலாம் என்று சொன்னார். தென் இந்தியாவில் பல இடங்களை அவர் பார்த்திருந்தார். வட இந்தியா என்றால் டெல்லிக்கு மூன்று மணி நேரப் பயணம், பின்னர் போக வேண்டிய ஊருக்கு இரண்டு மணி நேரப் பயணம், இதிலேயே ஒரு நாள் போய்விடும். பல இடங்களை யோசித்து, இறுதியில் ஶ்ரீ லங்கா என்று முடிவு செய்தோம். நான் கொழும்பிற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் கருத்தரங்குகளில் சிறப்புப் பேச்சாளராகப் பேசச் சென்றிருக்கிறேன், அடுத்து ஒரு முறை குடும்பத்தோடு சுற்றுலாவிற்கும் சென்றிருக்கிறேன். அதனால் கொழும்பு தவிர்த்து, யாழ்ப்பாணத்தைத் தேர்வு செய்தோம்.

கடந்த ஓர் ஆண்டாக சென்னையிலிருந்து யாழ் நகருக்கு நேரடி விமானச் சேவையை இண்டிகோ வழங்குகிறது. நாட்டின் தலைநகரான கொழும்பிலிருந்து கூட சுற்றுலா பயணச் சேவை யாழ் நகருக்குக் கிடையாது, ஆனால் நமது சென்னையிலிருந்து செல்கிறது. தற்போது ஏ.டி.ஆர். என்கிற சிறிய வகை விமானம் செல்கிறது, நாங்கள் திரும்பும் போது விமானம் முழுவதும் நிரம்பி இருந்தது. அதிகரிக்கும் இந்தத் தேவையை உணர்ந்து அடுத்த சில தினங்களில் (30 மார்ச் 2025) திருச்சியிலிருந்தும் யாழ் நகருக்கு இன்னொரு விமானச் சேவையைத் தொடங்குகிறது இண்டிகோ. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல ஒரு மணி பத்து நிமிடமும் எடுக்கிறது. சென்று வர ஒருவருக்குச் சுமார் பதினான்காயிரம் இந்திய ரூபாய் கட்டணம்.

யாழ் நகர விமான நிலையத்தின் பெயர் பலாலி. விமான நிலையத்திற்கு நிறையத் திறந்த இடம் இருந்தாலும், விமான நிலைய முனையம் மிகச் சிறியது. 1947யில் இருந்து விமானச் சேவை அவ்வப்பொழுது நடந்து வந்தாலும், பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் புதிதாக முனையம் கட்டப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து விமானம் இறங்கியவுடன், நம்மை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. வேனில் நாற்பது அடி சென்று, முனையத்தில் நுழைந்தால், ஒரே ஒரு சிறு அறை. காலை வைத்தவுடனே இரு குடிபுகல் அதிகாரிகள் மேஜைகள். நமது கடவுச்சீட்டையும், இலங்கை மின் பயண அனுமதிச் சீட்டையும் சரி பார்த்து உள்ளே அவர்கள் நாட்டினுள் அனுமதிக்கிறார்கள். அதைத் தாண்டினால் ஒரு மூலையில் தீர்வை இல்லா மதுபானக் கடை, நமது பெட்டிகளை எடுத்துக் கொள்ள ஒரு சின்னப் பகுதி, அடுத்து சுங்க வரிச் சோதனை. அவ்வளவு தான். மின் பயண அனுமதிச் சீட்டை (ETA) இணையம் மூலமாக ஒரு நாளில் பெறலாம், இந்தியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

Arrival Hall in Jaffna International Airport in Palaly
Arrival Hall in Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport Terminal
Jaffna International Airport Terminal
Jaffna International Airport in Palaly
Jaffna International Airport in Palaly

முனையத்தில் இறங்கியவுடன் இந்தச் சின்ன அறையைப் பார்த்தவுடன் ஒரு மூன்று நான்கு படங்கள் எடுத்தேன். இதைச் சுங்க வரிச் சோதனையில் இருந்த அதிகாரி பார்த்திருக்கிறார் போல, எனது முறை வந்த போது இதைப் பற்றிக் கேட்டார், ஆம் என்று உண்மையைச் சொன்னேன். இந்தப் பகுதியைப் படம் எடுக்கக் கூடாது தெரியாதா என்று சொல்லி எனது செல்பேசியைக் கேட்டார். தயக்கம் இல்லாமல் அவரிடம் செல்பேசியைத் திறந்து கொடுத்து, அவர் படங்களைப் பார்க்கையில், தடை என்று தெரிந்திருந்தால் எடுத்திருக்க மாட்டேன் என்றும் மன்னிப்பும் கேட்டேன். உடன் இருந்த அதிகாரி கொஞ்சம் காட்டமாகவே இது தவறு என்று திரும்பச் சொன்னார். இருந்தும் என்னைச் சோதித்த அதிகாரி எனது பைகளை முழுவதுமாகப் பார்த்து, துணியைத் தவிர வேறு எதுவும் உருப்படியாக இல்லாததால், சுங்க வரிச் சோதனை இடத்தை நான் எடுத்த படத்தை மட்டும் அழித்துவிட்டு என்னை மன்னித்து அனுப்பினார். நாம் எடுத்த படம் நமக்குப் பெரிய விசயமாகத் தெரியாது, ஆனால் அங்கே பணியில் இருப்பவருக்கு அதைத் தடுப்பது அவர்களின் கடமை. இந்த மாதிரி இடங்களில் அவர்கள் நாட்டிற்கு நாம் விருந்தினர்கள், அவர்களின் சட்டத்தைக் கேள்வி கேட்காமல் மதிக்க வேண்டும். அங்கேயிருக்கும் அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரம், அந்தந்த நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்களின் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த வேலையில் சாதாரணமாகவே அதிகாரிகளுக்குப் பணிச் சுமை, அழுத்தம் அதிகம், இதையெல்லாம் புரிந்து அவர்களிடம் பணிவாக நடக்க வேண்டும், தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் என்னை ஓரிரு நிமிடங்களில் விட்டுவிட்டார்.

வெளியில் வந்தவுடன் எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார் உள்ளூர் ஓட்டுநர். அவருடன் நகருக்குச் சென்று சுற்றிப் பார்த்த மூன்று நாட்களைப் பற்றி விவரங்களை வரும் நாட்களில் எழுதுகிறேன்.

யாழ் நகரிலிருந்து நேற்று சென்னை திரும்புகையில் நண்பர் மூலமாக பலாலி விமான நிலைய மூத்த அதிகாரியைச் சந்தித்தேன். கடந்த ஆண்டிலிருந்து இந்த முனையத்தில் வருகைகள் அதிகரித்திருக்கிறது. அவர்களின் அரசு அனுமதியும் நிதியும் கிடைத்தவுடன் கூடிய விரைவில் பெரிய விமானங்களும் இங்கே வந்திறங்கும், அதற்கான திட்டங்கள் தொடங்கியிருக்கிறது, மேலும் பல நாடுகளிலிருந்து நேரடிச் சேவையும் தொடங்கும் யோசனையும் இருக்கிறது என்றும் சொன்னார். வாழ்த்துகள்.

வந்திறங்கும் அறையை விட, வெளியில் செல்லும் முனையப் பகுதி சற்று பெரியது. முதலில் நுழைந்தவுடன் சுங்கச் சோதனை. எவ்வளவு இலங்கை ரூபாய் மற்றும் இந்திய ரூபாய் இருக்கிறது என்று கேட்டார் அங்கேயிருந்த அதிகாரி, என்னிடம் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது அதனால் ஒன்றும் சொல்லவில்லை. யாழ் நண்பர் எனக்குச் சொன்னது (இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளவும்) இருபது ஆயிரம் இலங்கை ரூபாய் எண்ணிக்கைக்கு மேல் அந்த நாட்டைவிட்டு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. அடுத்து இண்டிகோ பயண ஆயத்த முகப்பு. அடுத்துக் குடியேற்ற அதிகாரிகளின் சோதனை, இங்கே எனது கடவுச்சீட்டையும் இண்டிகோ பயணச் சீட்டை மட்டும் பார்த்து, உடனே அனுமதித்து விட்டார். பாதுகாப்பு சோதனையை முடித்து உள்ளே சென்றால் இரண்டு சிறிய காத்திருப்பு பகுதிகள், இரண்டு கழிப்பறைகள். குடிதண்ணீர் மற்றும் தேநீர் விற்க ஒரு சிறிய நகரும் மேஜை. நாங்கள் சென்ற போது குடிதண்ணீர் தீர்ந்துவிட்டிருந்தது, ஆனால் அருகில் இருக்கும் தீர்வை இல்லா மதுபானக் கடையில் பல வகையான ‘தண்ணீர்’ புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது வருத்தமான முரண். இலங்கை ரூபாய் அறுபது கொடுத்து ஒரு தேநீர் வாங்கி பருகினேன், அதைத் தேநீர் சொல்ல முடியாது சர்க்கரை பால் என்று சொல்லலாம், அந்தளவு இனித்தது. பின்னர் ஒரு முப்பது நிமிட காத்திருப்பிற்குப் பிறகு விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பி சென்னை வந்தது.

Departure Hall in Jaffna International Airport in Palaly
Departure Hall in Jaffna International Airport in Palaly
Duty Free and Snacks counter in Jaffna International Airport in Palaly
Duty Free and Snacks counter in Jaffna International Airport in Palaly

யாழ் நகர மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களின் பொருளாதாரம் சுற்றுலா மூலம் பெரிய அளவில் பயனடைய முடியும். தமிழகத்திலிருந்து நம்மில் பலரும் ஓரிரு நாட்களுக்கு விடுமுறைக்கு அங்கே சென்றுவரலாம். பார்க்க என்ன இருக்கிறது என்பதை வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

என் யாழ்ப்பாணப் பதிவுகள்

  1. எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 2, உணவகங்கள்.
  2. எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 3, யாழ்ப்பாணக் கோட்டை.
  3. எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 4, யாழ்ப்பாணக் கோயில்கள்.
  4. எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 5, யாழ்ப்பாண சுற்றுலாத் தளங்கள்.

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

5 thought on “Jaffna International Airport in Palaly, Sri Lanka”
  1. waiting for the next episode, please more interesting… Hope you met your old friends from uttamam…. waiting for next one…

    1. நன்றி. இந்த வாரம் அடுத்தப் பாகங்களை எழுத எண்ணம், முதலில் யாழ் நகரத்தில் சைவ உணவகங்கள், அடுத்தது யாழ் கோயில்கள்.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading