எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள் பாகம் 3: யாழ்ப்பாணக் கோட்டை (Jaffna Fort).
நகரின் பகுதியாகவே, யாழ் நூலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் யாழ்க் கோட்டை இருக்கிறது. நுழைவுக் கட்டணம் வெளிநாட்டினர்களுக்கு ஶ்ரீலங்கா ரூபாய் 1505, இந்தியாவிலிருந்து வந்தால் அதில் பாதி. நாங்கள் மூவராகப் போயிருந்ததால் மொத்தம் SLR 2250 (USD 7.5). சார்க் நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த மாதிரியான சலுகையை, பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட நான் கொழும்பிலும் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் இது மாதிரி இலங்கையில் இருந்தோ, நேபாளில் இருந்து வருகின்ற பயணிகளுக்கு நாம் அளிப்பதைப் பார்த்ததில்லை – அந்த வகையில் ஶ்ரீலங்கா அரசுக்கு நன்றி.
யாழ்ப்பாணக் கோட்டை என்று பெரிய எதிர்பார்ப்பில் வர வேண்டாம். பல முறை கை மாறியதால் இன்று பிரமாண்ட மதில் சுவர்களும் சில அகழிகளையும் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. பல இடங்களில் பராமரிப்புப் பணிகள் நடை பெற்று நின்றுவிட்ட மாதிரி தோன்றுகிறது – நீங்கள் சுற்றிப் பார்க்கும் போது பல இடங்களில் செங்கல், சுவர் குவியல்களைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டுப் பயணியாகப் பார்க்கையில் எல்லாக் கோட்டைகளும் நம்மூர் செஞ்சிக் கோட்டை போலவே தோன்றும், இதுவும் அப்படியே. சில மாதங்களுக்கு முன்னர் நான் பிலிப்பைன்ஸ் மணிலா நகருக்குப் போயிருந்த போது அங்கேயிருந்த சாண்டியாகோ கோட்டை எப்படி இருந்ததோ அதே போலவே யாழ் கோட்டையும் இருப்பதாக எனக்குப்பட்டது. மணிலா சாண்டியாகோ கோட்டையை 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டியது ஸ்பானியர்கள்.
யாழ்ப்பாணக் கோட்டையை 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டியது போர்த்துக்கீசியர்கள். பின்னர் டச்சுக்காரர்களால் விரிவுபடுத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து பிரிட்டிஷ் வசம் நூற்றியம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து, கடைசியாக இலங்கை அரசிடம் வந்துள்ளது இந்தக் கோட்டை. உள்நாட்டுப் போரின் போது சில ஆண்டுகள் விடுதலைப் புலிகளின் வசம் இருந்ததாம் – அப்போது போர் காரணங்களுக்காகக் கோட்டையின் பல கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டதாக விக்கிப்பீடியா சொல்கிறது.





















கழுகுப் பார்வையில் கோட்டை ஐங்கோண அமைப்பில் இருக்கும் – பரிசுப் பொருட்கள் கடையில் இருந்த படத்தில் இதைப் பார்க்கலாம். இலங்கையில் எளிதில் கிடைக்கும் சுண்ணாம்புக்கல், பவழக் கற்களால் கோட்டை கட்டப்பட்டது என்று அங்கேயிருந்த பதாகைச் சொன்னது. பவழக் கற்கள், என்று ஆச்சரியமாகப் படித்துத் திரும்பினால் இன்றைக்கும் இருக்கும் சுவரில் பார்த்தால் சில பளிச்சென்று தெரிகிறது – கீழேயிருக்கும் படத்தில் பார்க்கலாம்.
கோட்டை பாழடைந்து போயிருந்தாலும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. எங்கேயும் குப்பையோ, நெகிழி பாட்டில்களோ கண்ணில் படவில்லை.




என் யாழ்ப்பாணப் பதிவுகள்
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 1, விமான நிலையம்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 2, உணவகங்கள்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 4, யாழ்ப்பாணக் கோயில்கள்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 5, யாழ்ப்பாண சுற்றுலாத் தளங்கள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

