சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு (2007) முன்னர் இதே நாளில் நான் போய் வந்த பயணத்தின் இனிய நினைவுகளைக் கணினி இன்று நினைவு படுத்தியது. அப்போது எனது நிறுவனத்திற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கிளை இருந்தது. மைக்ரோசாப்ட்டின் தலைமையகம் இருக்கும் ரெட்மண்ட் நகரில் எங்களின் அலுவலகமும், விருந்தினர் தங்கும் வீடும் இருந்தது. இந்தியாவிலிருந்து பொறியாளர்கள் அமெரிக்கா வந்த புதிதில் சில வாரங்கள் இந்த வீட்டில் தங்கி, பிறகு அவர்களாகவே வாடகைக்கு வீடுப் பார்த்துப் போய்விடுவார்கள். நான் அங்கே போகும் போதும் இங்கே தங்குவேன். அப்படி ஒரு முறை நான் சென்றிருந்த போது, வார விடுமுறையில் எங்கே போகலாம் என்பதற்கு உடன் வந்திருந்த சகாக்கள் பரிந்துரைத்தது இந்தச் சிறிய ஊரை.
லீவன்வர்த் கிராமம் (அப்படித் தான் சொல்ல வேண்டும்), ரெட்மண்ட் நகரிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் (100 மைல்). இந்தக் கிராமம் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இரயில் பாதைகள் அமைக்கும் போது உருவாக்கப்பட்டது. நூற்றாண்டின் மத்தியில் வளர்ச்சியில்லாமல் போய்விட, ஊர் மக்கள் கூடி இதை மாதிரி ஜெர்மன் கிராமமாக மாற்றியமைத்தார்கள். இங்கேயிருந்த சிலர் ஜெர்மன் பூர்வக்குடிகள் என்பதால் அவர்களின் உணவும், கலாச்சாரமும் வெளிப்படும் விதம் இங்கே கடைகளும் உணவகங்களும் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, அருகில் இருக்கும் சியாட்டில் நகரும் பெரிய வளர்ச்சியடையப் பலரும் விடுமுறைக்கு இங்கே வரத் தொடங்க, நான் போயிருந்த போது சுற்றுலா தளமாகவே இது மாறியிருந்தது. அதுவும் பனிக்காலத்தில் நாங்கள் போனதால், எங்குப் பார்த்தாலும் அழகிய வெள்ளை பனிப் போர்வை.
பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது மாதிரி, வெய்யிலை மட்டுமே பார்த்த சென்னைவாசியான எனக்குப் பனியைப் பார்த்ததும் தலைகால் புரியவில்லை. உடனிருந்த நண்பர் எச்சரித்தார், பனியில் நிறைய நேரம் விளையாடாதே, பழக்கமில்லாத உனக்கு உடனே சளி பிடிக்கும் என்று. அங்கே சைவம் கிடைக்கும் உணவகம் எதுவுமில்லை (இவ்வளவு ஆண்டுகள் கழித்து இப்போது பல இருக்கும் என்று நினைக்கிறேன்), தேடி ஒரு சப்வே ரொட்டி கடையைக் கண்டுபிடித்து ஒரு பெரிய சப்வே ரொட்டியடையை (சாண்ட்விச்) சாப்பிட்டோம். அந்தக் குளிருக்கு உடன் வந்த சூடான காப்பி இதமாக இருந்தது.
ரெட்மண்ட் நகரிலிருந்து வாடகை காரை நாங்களே ஓட்டி வந்திருந்தோம், எங்கள் யாருக்கும் பனியில் வண்டியோட்டி பழக்கமில்லை. சாலையில் காரின் சக்கரம் வழுக்கிக் கொண்டே போனது. சக்கரத்தில் மாட்டும் சங்கிலி எங்களிடமில்லை, அப்படி ஒன்று இருக்கிறது என்று கூட எங்களுக்கு அப்போது தெரியாது. அந்த ஊரில் நெடுஞ்சாலையில் சாதாரணமாக அவர்கள் போவதே நம்ப ஊரில் வேகம், அதோடு இருட்டவும் ஆரம்பித்திருந்தது. எப்படியோ தைரியத்தை வரவழைத்து நான் காரை ஓட்டினேன். இப்போது நினைத்துப் பார்க்கையில், கூட வந்தவர்களுக்கு என்னைவிடத் தைரியம் அதிகம் இருந்திருக்க வேண்டும். எனக்கு முன்பு ஒரு பெரிய சரக்குந்து (லாரி) போனது, மலையிலிருந்து கீழே இறங்கும் வரை அந்த லாரியின் சக்கரத் தடங்களின் மேலேயே நான் காரை ஓட்டி வந்தேன். எப்படியோ எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம். இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் மறக்க முடியாத அனுபவம் அந்த ஒரு நாள் பயணம்.
சியாட்டில் செல்பவர்கள் நேரம் இருந்தால் பனிக்காலத்தில் லீவன்வர்த் கிராமம் சென்றுவரவும். அங்கே இருப்பவர்கள் இப்போது அந்தக் கிராமம் எப்படி இருக்கிறது என்று கீழே கருத்தில் பகிரவும். நன்றி.









#seattle #Leavenworth #travelinsnow #washingtonstate #NostalgiaTrip
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

