From Gana Songs to the Delhi Parade: The Unending Dream of a former NCC Student,.
From Gana Songs to the Delhi Parade: The Unending Dream of a former NCC Student,.

இந்த ஆண்டு குடியரசுத் தினத்தைத் தொடர்ந்து நேற்று நடந்த என்.சி.சி (தேசிய மாணவர் படை) மாணவர்களின் அணிவகுப்புப் படத்தைப் பார்த்த போது இந்தியனாகப் பெருமையாகவும், தனிப்பட்ட முறையில் ஏக்கமாகவும் இருந்தது.

NCC rally at Cariappa Parade Ground, Delhi Cantt, in 2026, with Prime Minister Shri Narendra Modi gracing the occasion
NCC rally at Cariappa Parade Ground, Delhi Cantt, in 2026, with Prime Minister Shri Narendra Modi gracing the occasion

நான் சி.பி.எஸ்.ஐ (CBSE) தனியார் பள்ளியில் படித்தேன். 1980களில், எட்டாம் வகுப்பு படித்த சமயத்தில் இரண்டாண்டுகளாகப் பள்ளியின் என்.சி.சி பிரிவில் இருந்தேன். நான் சேர ஒரே காரணம் எனது பள்ளித் தோழன் மகேஷ். அவனது அப்பா தமிழகக் காவல் துறையில் ஆய்வாளராக (Inspector) இருந்தார்; அதனால் அவனுக்குப் பாதுகாப்புத் துறையில் மிகுந்த ஆர்வம்.

அடிப்படையில் நான் சோம்பேறி, அதனால் எனக்கு விளையாட்டுகளில் அல்லது உடலை வருத்திப் பயிற்சி செய்யும் மாணவர் குழுக்களில் விருப்பம் அதிகம் கிடையாது. என்.சி.சி என்றால் காலையில் சீக்கிரம் எழுந்து ஓட வேண்டும், அணிவகுப்புகள் செய்ய வேண்டும். ஆனாலும் மகேஷின் தீவிர தூண்டுதலால் என்.சி.சி-யில் சேர்ந்தேன். முதலில் முடிந்தளவு அணிவகுப்பைத் தவிர்த்து வெளி வேலைகளைப் பார்த்து அவற்றில் சேர்ந்துகொள்வேன் – சாப்பாடு வாங்கி வருவது, ஆசிரியருக்குப் பெயர்களை எழுதிச் சந்தாவை வசூலிப்பது, அறையைச் சுத்தம் செய்து எல்லாவற்றையும் அடுக்குவது, கோப்புகளைத் தாம்பரத்தில் இருந்த எங்களுக்கான இராணுவ சிக்னல் துறையின் என்.சி.சி பிரிவு அலுவலகத்தில் போய்க் கொடுப்பது போன்றவற்றைச் செய்து அணிவகுப்பிலிருந்து ‘எஸ்கேப்’ ஆகிவிடுவேன்.

சீக்கிரமே இதைக் கவனித்துவிட்ட எங்கள் பிரிவு அலுவலர் என்னைக் கட்டாயப்படுத்தி அணிவகுப்பில் சேர்த்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக எனது உரத்த குரல் எனக்குச் சாதகமாக அமைந்தது – ஓரிரு மாதங்கள் கழித்துப் பள்ளிக்குள் நடக்கும் அணிவகுப்பை நடத்தத் தேவையான கட்டளைகளை உரக்கக் கத்த என்னைத் தேர்வு செய்தார். பதிமூன்று வயதில் நான் “Attention, Stand-at-Ease, Right Turn, Quick March” (இந்தியில் ‘சாவ்தான்’, ‘ஆராம் சே’) எனக் கட்டளைகளைச் சொல்ல, ஒரு ஐம்பது சக மாணவர்கள் அதன்படி நடப்பது ஒருவித போதையாகவே மாறியது. அணிவகுப்பு நடக்கும் போது பள்ளியில் மற்ற மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் பார்ப்பது ஒருவித ‘கெத்தாக’ இருந்தது. இதன் காரணமாகக் காலையில் எழுந்து பசியோடு ஓடுவது, வேர்க்க விறுவிறுக்க அணிவகுப்புச் செய்வது போன்றவற்றைத் தாண்டி எனக்கு என்.சி.சி பிடித்துவிட்டது.

என்.சி.சி-யில் சேரும் எல்லா மாணவர்களின் கனவும் தில்லியில் ஜனவரி 26 குடியரசுத் தினத்தை ஒட்டி நடக்கும் அணிவகுப்பில் கலந்துகொள்வது; அதையும் தாண்டிப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து பதக்கங்களைப் பெறுவது. எனக்கும் அந்தக்கனவு தொற்றிக்கொண்டது. இதை நோக்கியே நான் இரண்டு முகாம்களுக்குச் (Camp) சென்றேன். தில்லிக்குப் போகும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட, முகாம்களில் அளிக்கப்படும் மதிப்பெண்கள் மிக முக்கியம்.

NCC days of Venkatarangan during the late 1980s
NCC days of Venkatarangan during the late 1980s

அப்படி நான் சென்றது சென்னை திருவொற்றியூரில் நடந்த ஒரு வார உறைவிட முகாம். வீட்டை விட்டு வெளியில் தனியாகப் போகாத எனக்கு, தரையில் படுப்பது, பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது போன்றவை ஒரு புது உலகமாக இருந்தன. நம்மை விட வசதி குறைந்தவர்கள் மீது பரிவுகொள்ளவும், அவர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ளவும் எனக்கு உதவிய இடம் இது.

அடுத்த முகாம் புனேவைச் சுற்றி நடந்த சத்ரபதி சிவாஜி மலையேற்றப் பாதை (Chhatrapati Shivaji Trail Trek), ஆண்டு: 1988. பத்து நாட்கள் நடந்த இந்த முகாமில் தினமும் முப்பது, நாற்பது கிலோமீட்டர் சாலைகளே இல்லாத மலைப்பாதைகளில் நடக்க வேண்டும். காலை 4 மணிக்கு எழுந்து, காலைக் கடன்களைத் சிறிய திரைமறைவில் இருக்கும் நாற்றமடிக்கும் குழிகளில் முடித்து, 4:15 மணிக்குக் கொடுக்கப்படும் ஒரு கோப்பை தேநீர் மற்றும் மேரி பிஸ்கட் (Marie Biscuit) சாப்பிடச் சரியாக வரிசையில் நிற்க வேண்டும். சில நிமிடம் தாமதமானால் தீர்ந்துவிடும். அப்புறம் அடுத்த சாப்பாடு காலை ஒன்பது மணி போலத்தான் – இருபது கிலோமீட்டர் வெறும் வயிற்றில் நடக்க வேண்டும். தண்ணீர்கூடக் குடிக்க விடமாட்டார் எங்கள் படைத்துணைத்தலைவர் (Lieutenant). ஒரு மலையேறும்போது சறுக்கிப் பல நூறு அடி கீழே விழுந்திருப்பேன்; என் உயிரைக் காப்பாற்றியது ஒரு விவேகானந்தா கல்லூரி மாணவர். அவர் பெயர் நினைவில் இல்லை. இப்போது அவர் எங்கிருந்தாலும் இப்பதிவின் மூலம் அவருக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வேலைகளை நானே தனியாகச் செய்யச் சொல்லிக்கொடுத்த இடம் இந்த முகாம். அதோடு பல்வேறு மாநில, மொழி பேசும் மாணவர்களோடு இந்தி தெரியாமல் திணறித் திணறிப் பேசிப் பழகவும் வாய்ப்பளித்தது இந்த முகாமே.

அந்தச் சிறிய வயதில் என்னைப் பக்குவப்படுத்தியதோடு, இந்த இரண்டு முகாம்கள் எனக்கு இன்னொன்றையும் கற்றுக்கொடுத்தன. கல்லூரி மாணவர்களிடமிருந்து, தமிழில் அப்போது பிரபலமாக (வைரலாக) இருந்த திரைப்படப் பாடல்களின் வரிகளைக் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு மாற்றிப் பாடுவது எப்படி எனவும் கற்றுக்கொண்டேன். இப்போதுகூட அப்போது கற்ற ஓரிரு கானாப் பாடல்கள் நினைவில் உள்ளன – மன்னிக்கவும், பொது வெளியில் அவற்றைப் பகிர்வது நாகரிகமாக இருக்காது.

சரி, தொடங்கிய கதைக்கு வருவோம். நான் எங்கள் பள்ளி என்.சி.சி பிரிவில் படைத் தலைமைச் சார்ஜன்ட் (Troop Sergeant Major – TSM) என்ற பொறுப்பில் இருந்தேன். அதோடு இந்த இரண்டு முகாம்களில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தாலும், மூன்றாம் கட்ட அணிவகுப்புத் தேர்வில் நான் தேர்வாகவில்லை. காரணம், அதிக நேரம் கட்டளைகளை உரக்கச் சொல்லி அணிவகுப்பில் குழுவாக நடப்பதைத் தட்டிக்கழித்ததால் எனக்குத் தேவையான அளவு நடைத் திறன் இருக்கவில்லை. இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது: “நல்ல தலைவனாக வர விரும்பினால் முதலில் சிறந்த தொண்டனாக இருக்க வேண்டும்” – இதைத் தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றிச் சத்தியமாக நான் குறிப்பிடவில்லை; வாழ்விலும், முக்கியமாகத் தொழில்முனைவோருக்காகவும் (Entrepreneurs) மட்டுமே இதைச் சொன்னேன்.

இப்படி குடியரசுத் தினத்தை ஒட்டி நடக்கும் என்.சி.சி அணிவகுப்பில் கம்பீரமாக நடக்கும் வாய்ப்புப் பள்ளிக் காலத்தில் கைநழுவிப் போனது; கல்லூரிக் காலத்தில் நடக்கும் என நினைத்தேன். ஆனால், நான் படித்த கல்லூரியில் என்.சி.சி பிரிவு அப்போது இல்லை. அதற்குப் பிறகு, வாழ்வில் ஒரு முறையாவது குடியரசுத் தின அணிவகுப்பைத் தில்லிக்குச் சென்று நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆசை இது வரை கனவாகவே இருக்கிறது. வருங்காலத்தில் நடக்கும் என்று விரும்புகிறேன்.

இந்த ஆண்டு (2026) குடியரசுத் தினத்தை ஒட்டி நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு எனது மனமாரப் பாராட்டுகள். நன்றி.

ஜெய் ஹிந்த்!


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading