எங்களின் ‘மெட்ராஸ் பேப்பர்’ இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா, இந்த மாதம் 31ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் நடக்கவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் என்னுடைய முயற்சியான Neight (சொல்வெளி) செயலியின் வெளியீடும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன். சொல்வெளி, முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் செயலி. இதைத் திறமூல (MIT License) அடிப்படையில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளியிட்டுள்ளேன். எழுத்தாளர்களுக்காகவும் வலைப்பதிவர்களுக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு எளிய உரைத்திருத்தி (Text Editor) இது. இதன் செயல்முறை விளக்கமும் மற்ற விவரங்களும் அன்றைய நிகழ்வில் இடம்பெறும்.
புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், சொல்வெளி செயலியை நேரில் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் நிகழ்ச்சிக்குக் கட்டாயம் வரவும்.
இந்தச் செயலி உருவாகிய கதை கீழே:
மெட்ராஸ் பேப்பர் இப்போதுதான் தொடங்கியது போல இருக்கிறது; ஆனால் நான்கு ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதுவரை அதிகமாகத் தமிழில் எழுதாத என்னை இரண்டு கட்டுரைத் தொடர்களை எழுதவைத்து, நூல்களாக வெளியிட வைத்தவர் ஆசிரியர் திரு. பா.ராகவன்.
இந்தத் தொடர்களைத் தமிழில் எழுதும்போதுதான் உணர்ந்தேன், இன்றைய ஏ.ஐ. (AI) உலகிலும் தமிழில் எழுதுவோருக்காக ஓர் எளிமையான, நம்பகமான, இலவசச் செயலி இதுவரை இல்லை என்று.
அவரைச் சந்திக்கும்போதெல்லாம் பா.ரா. இந்தச் சிக்கலை என்னிடம் பகிர்ந்துள்ளார்; இணையத்திலும் பலமுறை எழுதியுள்ளார். இதைப் பற்றியே அவர் ஒரு நாவலே எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அந்த அளவுக்கு அவரைக் கடுப்பேற்றிய விஷயம் இது என்று நினைக்கிறேன்.
அது மேக் (Mac) கணினியில், அதுவும் அவருக்கு மட்டுமே இருந்த பிரச்சனை என்று விண்டோஸ் (Windows) பயனாளியாக நான் நினைத்திருந்தேன். ஆனால், அதிகமாக நானே தமிழில் எழுத எழுத, விண்டோஸிலும் ஏற்படும் சிக்கல்களை உணர்ந்தேன். அதோடு, சென்ற ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம், நோட்பேடு (Notepad) செயலியில் தங்களின் ஏ.ஐ. கோ-பைலட்டைச் (AI Copilot) சேர்த்து ஒரு பதிப்பை வெளியிட்டது. அதில் தமிழில் ‘அஞ்சல்’ விசைப்பலகை முறையில் தட்டச்சு செய்வது பெரும் சிக்கலானது.
பொறுத்தது போதும் என்று நானே ஒரு செயலியை எழுதுவது என முடிவு செய்தேன். கணினிப் பொறியாளராக இருப்பதில் இது ஒரு வசதி; அதோடு சாபமும் கூட! எந்த ஒரு செயலியைப் பார்த்தாலும், அதை எளிதில் ஏற்றுக்கொள்ள மனம் வராது. ‘அதைவிட நாம் சிறப்பாக எழுதலாமே!’ என்று தோன்றும். அடுத்த சில நாட்கள் அதில் செலவு செய்த பின், நம் அன்றாடப் பணிகளில் அந்த முயற்சி அப்படியே தூங்கிப்போகும். ஆனால், இந்த முறை அந்தச் சாக்குப்போக்குக்கு இடமே இல்லை.
ஏனென்றால், நமக்கு என்ன வேண்டும் என்பதை பிராம்ப்ட்களாக (Prompts) வரிகளாக எழுதினால், ஏ.ஐ.யே அதற்கான நிரல்களை முழுவதுமாக உருவாக்கிக் கொடுத்துவிடும். இந்த மாதிரி ஒரு பூதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, உரைத்திருத்திப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால் நான் ஒரு கணினிப் பொறியாளர் என்பதில் அர்த்தமே இல்லை! இந்தத் தீர்மானத்தோடு சென்ற ஆண்டு (2025) அக்டோபர் மாதம், ‘என்-ஏய்ட்’ (சொல்வெளி) செயலியை உருவாக்கத் தொடங்கினேன்.
நான் எனக்கு வேண்டியதைச் சொல்லச் சொல்ல, ஏ.ஐ. இந்தச் செயலியை உருவாக்கிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு பதிப்பையும் பயன்படுத்தி, அதில் வந்த சிக்கல்களைத் திரும்ப ஏ.ஐ.யிடம் சொல்லி, அவற்றைக் களைந்து மேலும் பல வசதிகளைச் சேர்த்துக்கொண்டே போனேன்.
ஓரிரு நாள்களிலேயே இச்செயலி பயன்படுத்தும் நிலைக்கு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, இதைத்தான் நான் தினமும் பயன்படுத்துகிறேன். நான் எழுதும் தமிழ், ஆங்கிலப் பதிவுகளையும் கோப்புகளையும் பெரும்பாலும் இதிலேயே உருவாக்குகிறேன்.
எனக்காகவே இதை உருவாக்கினேன்; சிறப்பாக வேலை செய்தது. ஆனாலும் ஒரு மிகப்பெரிய குறை! எங்கள் ஆசிரியர் பா.ரா.வின் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லையே? காரணம், நான் முதலில் இதை எழுதியது விண்டோஸில்; அவரிடம் இருப்பதோ மேக் கணினி. அதில் வேலை செய்யவைக்க என்னிடம் ஒரு மேக் தேவைப்பட்டது. அந்தத் தடை சென்ற மாதத்தோடு தீர்ந்தது.
என் வீட்டு உபயோகத்திற்காக, கட்டுப்படியாகும் விலையில் (ரூபாய் 59,999) கிடைக்கும் தொடக்கநிலை மேக் மினி (Mac Mini) கணினியை வாங்கினேன். முதல் வேலையாகச் சொல்வெளி செயலியை மேக்கிற்கும் கம்பைல் (Compile) செய்தேன். அதன் பிறகு, மேக் கணினிக்கு ஏற்ற வகையில் பல வசதிகளைச் சேர்த்தேன்.
ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்து பா.ரா.விடம் பகிர்ந்துகொண்டபோது, அவருக்கு உடனே பிடித்துவிட்டது. “எனக்கு செமையா செட் ஆகுது” என்று அவர் ஒரு வரியில் அனுப்பிய பதிலைப் பார்த்தபோது, இந்தச் செயலிக்கு நான் செலவு செய்த சுமார் இருநூறு மணி நேரத்திற்கும் வாங்கிய ஏ.ஐ. சந்தாக்களுக்கும் பலன் கிடைத்துவிட்டது என்று தோன்றியது.
அடுத்த சில வாரங்களில், ஓர் எழுத்தாளராக அவர் சொன்ன பல வசதிகளையும் சேர்த்துள்ளேன். இப்போது இது ஒரு சிறந்த படைப்பாக வந்துள்ளது என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
அடுத்த ஞாயிறன்று இதை நேரடியாக உங்களுக்கு விளக்க ஆவலாக இருக்கிறேன். சொல்வெளி ஒரு உரைத்திருத்தியாக எப்படி வேலை செய்கிறது, மற்ற செயலிகளில் இல்லாத சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
குறிப்பு: என்-ஏய்ட் (Neight) என்பது நான் ஆங்கிலத்தில் வைத்த பெயர், பெயர் காரணத்தையும் அன்று பகிர்கிறேன். இதற்கு தமிழில் அழகாக ‘சொல்வெளி‘ என்ற பெயரை வழங்கிய ஆசிரியருக்கு நன்றி. மேக் கணினியில் இதை வெளியிடத் தொழில்நுட்ப உதவி அளித்த எனது அன்பு நண்பர் திரு. முத்து அவர்களுக்கும் நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


வாழ்த்துகள் , ஆவலுடன் நான் எதிர்பார்க்கிறேன். மகிழ்ச்சி!!!