போன வாரம் நண்பர்களோடு ஒரு வாரம் பிலிப்பைன்ஸுக்கு விடுமுறைக்குச் சென்று வந்தேன். பொங்கல் பண்டிகைக்கு வீட்டில் இருக்கவில்லையென்று என் அம்மாவிடம் இருந்து ஒரே திட்டு – உலகம் சுற்ற வேண்டுமென்றால் இதையெல்லாம் பொருத்துக் கொள்ளத் தானே வேண்டும்!
அது எதற்கு பிலிப்பைன்ஸ்? இதே கேள்வியை என்ன அழைத்த நண்பரைக் கேட்டேன், அவர் ஓர் அலுவல் ரீதியாக அங்கே செல்வதால் அப்படியே நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம் என்றார். சரி நமக்கும் வேறு என்ன வேலையென்று கிளம்பிவிட்டேன். சென்னையிலிருந்து பேங்காக் செல்லச் சுமார் மூன்றரை மணி நேரம், அதே அளவு நேரம் பேங்காக்கில் இருந்து மணிலா செல்ல. இடையில் மூன்று மணி நேர இடைவேளையைச் சேர்த்துக் கொண்டால் பயண நேரம் மொத்தமாக ஒன்பது/பத்து மணி நேரம். சென்னை, பேங்காக் மற்றும் மணிலா மூன்று நகரங்களின் அட்ச ரேகைகளும் மிக அருகருகே இருப்பதால், கிட்டத்தட்ட மூன்று நகரங்களிலும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையே.
சென்னையிலிருந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு நேரடி விமானம் கிடையாது. ஏதாவது ஒரு தெற்கு ஆசியத் தலைநகருக்கு (சிங்கப்பூர், கோலாலம்பூர், பேங்காக்) சென்று, அங்கேயிருந்து இன்னொரு விமானம் பிடித்துச் செல்ல வேண்டும். விலைக் குறைவு என்பதால் நாங்கள் பேங்காக் வழியாகச் சென்றோம். தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு இப்போது விசா எதுவும் வேண்டாம், கட்டணமும் கிடையாது. நாங்கள் சென்னையிலிருந்து சென்ற “ஏர் ஏசியா” விமானம் இறங்கியது பேங்காக்கின் Don Mueang விமான நிலையத்தில். அங்கேயிருந்து டாக்சி பிடித்து சுவர்ணபூமி வானூர்தி நிலையம் சென்றோம். அங்கேயிருந்து மணிலாவுக்கு செல்ல “தாய் ஏர்வேஸ்” விமானச் சேவை. பிலிப்பைன்ஸ் செல்ல இந்தியர்களுக்கு விசா வேண்டும். ஆனால் உங்களிடம் வளர்ந்த நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்ப ஷெங்கன், ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா) விசா ஏதாவது இருந்தால் இரண்டு வாரங்கள் வரை பிலிப்பைன்ஸில் இருக்கத் தனியாக விசா வேண்டாம், கட்டணமும் இல்லை.
இந்தப் பயணத்தில் எங்களோடு இரண்டு நண்பர்கள் (மொத்தமாக நாங்கள் நான்கு நபர்கள்) வந்தார்கள். அதில் ஒருவர் பெங்களூரிலிருந்து எங்களோடு பேங்காக்கில் சேர்ந்து கொண்டார். துரதிஷ்தவசமாக பெங்களூர் நண்பரிடம் இருந்த ஷெங்கன் விசாவின் தொடக்கத் தேதி மார்ச் 2025 என்று இருந்ததால் அவரை மணிலா செல்லும் விமானத்தில் ஏறவிடவில்லை, அவர் இந்தியா திரும்பி விட்டார். நாங்கள் மூவர் மட்டும் பிலிப்பைன்ஸ் சென்று வந்தோம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நாங்கள் சென்றது தலைநகர் மணிலா மற்றும் “செபு” மாநிலத்திற்கு. மெட்ரோ மணிலா என்பது பதினாறு நகரங்களின் கூட்டு, மொத்தமாக ஒன்றரை கோடிக்கு அதிகமானோர் அங்கே வசிக்கிறார்கள். நாங்கள் போய் வந்த இடங்கள் பெரும்பாலும் சுத்தமாக, நவீனமயமாகவே இருந்தது, துறைமுகத்தின் அருகில் ஏழைகள் வாழும் பகுதிகளையும் பார்க்க முடிந்தது உண்மை. நாங்கள் பகலில் இரவில் வெளியில் போன போது பாதுகாப்பாகவே உணர்ந்தோம். பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘பிசோ’ அவர்களது பணம், நூறு பிசோ என்பது இந்திய மதிப்பில் நூற்றியம்பது ரூபாய். பிலிப்பைன்ஸின் தனிநபர் பொருளாதாரத் தலைவிகிதம் இந்தியாவைவிட சற்றே தான் கூடுதல், அதனால் செலவுகள் நமக்குச் சுமையாகத் தோன்றவில்லை. மேலை நாடுகளை, ஏன் சிங்கப்பூரைக் காட்டிலும் இது நமக்கு வசதியாக இருந்தது. ஹோட்டல் அறை, சாப்பாடு, டாக்சி போன்றவை நம்மூரை விடத் தரம் உயர்ந்தும், பல இடங்களில் விலை சற்று குறைவாகவே இருந்தது. நுழைவுக் கட்டணங்களும் நம் பண மதிப்பில் எளிதாகவே இருந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்வி ஆங்கிலம் மூலமாகவே பெரிதும் கற்றுத் தரப்படுகிறது, இதனால் தள்ளு வண்டி கடைக்காரர் முதல் டாக்சி ஓட்டுநர் வரை நன்றாகவே ஆங்கிலம் பேசுகிறார்கள், எங்களுக்கு மொழி எங்கேயுமே இடைஞ்சலாகவிருக்கவில்லை. அவர்களின் தாய் மொழி பிலிப்பினோ, அதை எழுதுவது லத்தின் எழுத்துருக்களைக் கொண்டு, இதன் வரலாற்றை இங்கே விட்டுவிடலாம். இந்த நாடு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஸ்பெயின் காலனிய ஆட்சியின் கீழ் இருந்தது, பிறகு சுமார் ஐம்பது ஆண்டுகள் அமெரிக்காவின் காலனிய ஆட்சி. 1946ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர நாடு. எங்குப் பார்த்தாலும் அமெரிக்க ஆங்கிலமும் அமெரிக்கக் கலாச்சாரமும். ஆட்சி முறையும் பெரும்பாலும் அமெரிக்க முறை தான். பிலிப்பைன்ஸ் மக்களின் முதல் பெயர் அமெரிக்க ஆங்கிலத்திலும், குடும்பப் பெயர் ஸ்பானிஷ் பெயராகவும் இருக்கும் ஆனால் எங்கள் தலைமுறையில் யாருக்கும் ஸ்பானிஷ் தெரியாது என்றார் எங்களின் ஒரு வழிகாட்டி. நாட்டு மக்கள் ஏறக்குறைய எல்லோருமே கிறித்துவர்கள். எங்குப் பார்த்தாலும் பெரிய பெரிய ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்கள், மிக அழகாகப் பராமரிக்கிறார்கள்.
மணிலா நகரில் முதல் நாளில் நாங்கள் பார்த்தது: அயலா (Ayala Museum) அருங்காட்சியகம், இங்கே பண்டைய பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கையைக் காட்டும் மாதிரிகள் இருந்தது. அதோடு முக்கியமாக ஸ்பானிஷ் மற்றும் அமெரிக்கக் காலனிய ஆட்சியில் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளும், குறிப்பாகப் போர்களை உயிரோட்டமாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள், மிக நன்றாக இருந்தது. இங்கேயெல்லாம் வரலாற்றில் எவ்வளவோ நடந்திருக்கிறது, நம் சரித்திரப் பாடநூல்கள் பெரும்பாலும் ஐரோப்பா, அமெரிக்க வரலாற்றைப் பேசி, இவற்றை மறந்துவிட்டிருக்கிறார்கள்.
அடுத்த நாள்: இன்ட்ராமுரோஸ் (ஸ்பானிஷ் மொழியில்: சுவர்களுக்குள்) எனப்படும் பழைய ஸ்பானிஷ் நகர், இது பாண்டிச்சேரி பிரெஞ்சு காலனி போன்ற இடம். இங்கே பழைய கோட்டைகளும், இரண்டு பெரிய முக்கியமான தேவாலயங்களும் இருக்கிறது. இவற்றைப் பார்க்கக் கட்டணங்கள் குறைவு. விரும்புவோர் வசதிக்குக் கட்டணக் கொடுத்தால் ரிக்ஷா சேவை, இரண்டு சக்கரச் சேவையும் கிடைக்கிறது. நாங்கள் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து (ஒரு மணி நேரத்திற்கு 100 பிசோ) சுற்றி வந்தோம். நாங்கள் போன சமயம் தேவாலயத்தில் முக்கியஸ்தரின் குடும்ப திருமண நிகழ்ச்சி, வழியெங்கும் பெரிய பெரிய கார்கள், உள்ளே எட்டிப் பார்த்தோம், கடவுள் துதிகள் ஆங்கிலத்தில் படிக்கப்பட்டு திருமணம் நடந்து கொண்டிருந்தது. கூட்டமாக இருந்ததால் வெளியில் வந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயத்தின் முன் இருந்த சந்தையில் கண்முன்னே தயாரிக்கப்பட்ட தேங்காய் மில்க் ஷேக் ஒன்றை வாங்கிக் குடித்து நகர்ந்தோம். அடுத்து இன்ட்ராமுரோஸ்ஸில் இருந்த இரண்டு கோட்டைகளைப் போய் பார்த்தோம் – ஒன்றில் நுழைந்தவுடன் அங்கேயிருந்த காவல் துறை அதிகாரி எங்களை இந்தியர்கள் என்று கண்டு கொண்டு நட்பாகப் பேசினார், இறுதியில் அவருக்குத் தெரிந்த வழிகாட்டியின் விளம்பர அட்டையைக் கொடுத்து, அவர் எல்லா இடங்களுக்கும் மலிவாகக் கூட்டிப் போவார் என்றார், அவரிடம் இருந்து நழுவி எங்களின் சைக்கிளை எடுத்துக் கொண்டு அடுத்த இடம் போனோம். காசா மணிலா என்ற ஒரு ஸ்பானிஷ் பங்களா, பணக்கார வியாபாரி ஒருவரின் நூற்றாண்டுகள் பழமையான அந்த வீட்டை மரச்சாமான்கள் உட்பட அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். சமையல் அறையில் இருக்கும் அடுப்பு கூட அந்தக் காலத்து அமைப்பு. உணவு மேஜையைப் பார்த்தால் பிரமிப்பாகவிருந்தது – அந்தக் காலத்து காலனியர்கள் இந்தியாவில் மட்டுமில்லை ஆசியா (ஆப்பிரிக்காவும்) முழுவதிலும் இருப்பதைச் சுரண்டி மிகவும் வசதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்து நாங்கள் துறைமுகப் பகுதிக்குப் போய் வந்தோம்.
மணிலா தேவாலயத்தின் எதிரில் இருக்கும் பூங்காவில் இஸ்கான் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா) இந்து குரு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார், கேட்க ஓர் ஐம்பது பேர் இருந்திருப்பார்கள். ஆச்சர்யமாக இருந்தது.
அடுத்த நாள் மணிலாவிலிருந்து எழுபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டகேத்தி (Tagaytay City) மலை ஊருக்குச் சென்றோம். அழைத்துச் சென்ற வழிகாட்டி நம்மூரைப் போலவே அவருக்கு வேண்டிய காப்பிக் கடையில், உணவகங்களில் வண்டியை நிறுத்திச் சாப்பிடச் சொன்னார். இது ஒரு சிறிய மலை. மலைக்குக் கீழே தால் (Taal Lake) ஏரி, அதற்கு நடுவில் உயிரோட்டமான எரிமலை. கடைசியாக 2020யில் வெடித்ததாம், அதற்கு முன் வரை ஏரியில் படகுச் சவாரி செய்து அருகில் போய் பார்க்கலாமாம், இப்போது முடியாது. எரிமலையிலிருந்து கக்கும் நெருப்பு நேரடியாகக் கொஞ்சம் தூரம் தான் வருமாம், ஆனால் மேல் நோக்கி வானில் பாய்ந்து பின்னர் மேகத்தில் பட்டுக் குளிர்ந்து பல தொலைவு விழுமாம், அது மிகவும் ஆபத்தாம். அங்கே பார்வையாளர் பூங்காவிற்குச் செல்ல பிலிப்பைன்ஸ் எங்கும் இருக்கும் ஜீப்னி வண்டியில் சென்று வந்தோம், இது நம்மூர் ஷேர் ஆட்டோவின் அந்நாட்டு வடிவம், அதே கட்டண முறை – ஜீப் வாகனத்தை நீட்டி, சிறு பேருந்து மாதிரி செய்திருக்கிறார்கள். மாலையில் மணிலா நகரில் இருக்கும் இனிப்புகளுக்காகவே அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் சென்றோம் (The Dessert Museum), இங்கே இனிப்புகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட பெரிய மாதிரிகளில் ஏறி விளையாடலாம், சுவைக்கவும் ஒன்றிரண்டுக் கொடுக்கிறார்கள் – கட்டணம் ஒருவருக்கு பிசா 600.
அடுத்த மூன்று நாள் மணிலாவிலிருந்து செபு தீவுக்குச் சென்று வந்தோம். மணிலாவிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப் பயணம். செபு தீவு, கேரளா அளவில் ஆன ஒரு மாநிலம். அங்கே லேபு லேபு (பல பெயர்கள் இங்கே இரட்டைக்கிளவிகளாக இருக்கிறது) நகரில் இறங்கி, வாடகைக்கு ஒரு காரை எடுத்து நாங்களே ஒட்டிப் போனோம். தீவின் கிழக்கிலிருந்து தென் மேற்கில் இருந்த சாம்போவன் கடற்கரை நகரில் எடுத்திருந்த AirBNB வீட்டுக்குப் போனோம். வெறும் இருநூறு கிலோ மீட்டர் தூரத்தை அடையச் சுமார் ஏழு மணி நேரத்திற்கு மேலாக ஆனது. தேசிய நெடுஞ்சாலை என்றாலும் வழியெங்கும் ஊர்கள், கடைகள், சந்திப்புகள். ஓர் ஐம்பது கிலோ மீட்டர் மட்டும் மலைப்பாதை, இருட்டி விட்டதால் மெதுவாகக் கூகுள் மேப்ஸ் சொன்ன வழியை நம்பி ஒட்டிப் போனோம். வழியில் நல்ல காப்பிக் கடையும், இரவு ஒன்பது மணிக்கு மூடப் போன சமயத்தில் ஆளில்லாத இடத்தில் ஒரு நல்ல உணவகமும் எங்களுக்குக் கிடைத்தது – அந்தக் கடைக்காரர்களுக்கு நன்றி. இப்படிப் போய்ச் சேர ஒரு நாள், திரும்ப வர ஒரு நாள். நடுவில் ஒரு நாளில் அருகில் இருந்த அழகான கடற்கரைக்கும், அருவிக்கும் சென்றோம். பினாலயன் மறைந்திருக்கும் அருவிக்கு (Binalayan Hidden falls) சென்ற போது, அங்கே நாங்கள் மூவர் மட்டுமே. இருவருக்கு ஒரு வழிகாட்டி என எங்களுடன் இருவர் வந்தார்கள் – மொத்தக் கட்டணம் வெறும் பிசோ 450, அதற்கு மேல் நாங்கள் வழிகாட்டிகளுக்குச் சம்மானம் கொடுத்தோம். அங்கே அருவியில் நீண்ட நேரம் குதித்து (நான் குதிக்கவில்லை) நீந்தி விளையாடினோம். அடுத்த நாள் திரும்பி வருகையில் கார் கார் (இதுவும் இரட்டைக்கிளவி) நகரில் அமைக்கப்பட்ட காலணிகள் சிறப்புச் சந்தைக்குச் சென்று பார்த்தோம், எல்லாம் பெண்கள் காலணிகள், மனைவிகள் உடனில்லாததால் எதையும் வாங்கவில்லை (வீடியோ அழைப்புகள் வேலை செய்யவில்லை என்று நாங்கள் சொன்னதை வெளியில் சொல்ல வேண்டாம்).
மணிலா திரும்பி, அடுத்த நாள் காலையில் பேங்காக் வந்தோம்.
முக்கியமான விசயம்: பிலிப்பைன்ஸ் எங்கும் காகிதப் பணம் தான் கேட்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பெரிய கடைகளைத் தாண்டி கடன் அட்டையை (கிரேடிட் கார்டு) வாங்க மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் நாட்டுச் செல்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு இருந்தால் ஜீ-காஷ் (நம்மூர் கூகுள் பே போன்றது) வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் நாங்கள் கையில் கொண்டு சென்ற சில ஆயிரம் பிசோ தீர்ந்தவுடன் அமெரிக்க டாலர்களை மாற்றி பயன்படுத்தினோம், எல்லா இடங்களிலும் அமெரிக்க டாலரை மாற்றும் கடைகள் இருக்கிறது – நம்மூரைப் போல மாற்றும் போது அதிகக் கட்டணம் போடுவதில்லை. இந்திய ATM அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுப்பது சில குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் வங்கிக் கிளைகளில் மட்டுமே வேலை செய்கிறது. அதனால் பிலிப்பைன்ஸ் செல்வோர், கையில் தேவையான பிசோ அல்லது அமெரிக்க டாலர்களை எடுத்துச் செல்லவும்.
இருந்த ஒரு வாரத்தில், எங்கள் அனுபவத்தில் இந்தியர்களை பிலிப்பைன்ஸ் மக்கள் அன்பாகப் பார்க்கிறார்கள், நம்மை குறைத்துப் பார்ப்பதில்லை. அசைவப் பிரியர்களுக்கு இந்த நாடு ஒரு சொர்க்கம். நானும் இன்னொரு நண்பரும் சுத்த சைவம், அதனால் கொஞ்சம் சிரமப்பட்டோம். மணிலா நகரில் இந்திய உணவகங்கள் இருந்தாலும் நாங்கள் போகவில்லை. அசைவ நண்பர் செல்ல விரும்பிய பிலிப்பைன்ஸ் உணவகங்களில் கேட்டுக் கேட்டு சைவம் சாப்பிடோம். பெரும்பாலான இடங்களில் அப்படி எங்களுக்குக் கிடைத்தது சாப்சோய் (Chopsuey) என்கிற வேகவைத்த கறிகாய்கள், உடன் சாப்பிடப் பூண்டு (அரிசி) சாதமும். இந்த சாப்சோயில் உப்பு, காரம் இருக்காது, அதன் மேல் அவர்கள் பொதுவாக மீன் எண்ணெய் அல்லது சிப்பி சாறு (Oyster Sauce) ஊற்றிவிடுவார்களாம் – ஒவ்வொரு முறையும் அப்படிச் செய்ய வேண்டாம், சோயா சாறு மட்டும் போடவும் என்று சொல்லி ஆர்டர் செய்தோம். எல்லா இடத்திலும் சரளமாக ஆங்கிலம் பேசியதால் பிரச்சனை இருக்கவில்லை.





மொத்தத்தில் பிலிப்பைன்ஸ் பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே பார்க்க இன்னும் பல இடங்கள் இருக்கிறதாம். அடுத்த முறை குடும்பத்தோடு செல்ல வேண்டும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

