சென்னைவாசிகள் அனைவரும் ஒரு முறையாவது நம் நகரத்தை இந்த முறையில் ரசிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை சென்னை விமான நிலையத்தில் வானூர்தி தரையிறங்கும் முன் நகரத்தை வானிலிருந்து பார்த்து ரசித்திருக்கிறேன். அதைப் பற்றி இங்கே சொல்லவில்லை.
பிறந்ததிலிருந்து மெரினா கடற்கரை மணலிலிருந்து வங்காள விரிகுடா கடலை பல முறைப் பார்த்திருப்பேன். என் கால்களை அந்தக் கடல் நீரில் பல நூறு முறை நனைத்திருப்பேன். அடிவானம் வரை தெரிகின்ற பரந்துவிரிந்த கடலைப் பார்த்து அங்கிருந்து பார்த்தால் நம் ஊர் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கடற்கரைக்குப் போகும் போதும் அந்தக் கனவில் ஓரிரு நிமிடங்கள் மூழ்கியிருப்பேன். நம் ராமேஸ்வரத்தில் மற்றும் வெளிநாடுகளில் (சமீபத்தில் அந்தமான் தீவுகளில் கூட) பயணிக்கும் போது கற்பனையில் பார்த்ததை நிஜத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயெல்லாம் பயணத்தோணிகளில் போகும் போது அங்கே இருக்கும் கடற்கரை ஓரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
ஆனால் நம் மெட்ராஸ் நகரத்தைக் கடலிலிருந்து பார்க்கும் வாய்ப்பு இந்தப் படகுப் பயணத்தில் மட்டுமே எனக்குக் கிடைத்தது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் மெட்ராஸ் நகரின் பிரபல வரலாற்று ஆசிரியர் திரு வெ ஶ்ரீராம் சென்னை துறைமுகத்தின் வரலாற்றைப் பற்றிய அறிமுக உரையாற்றினார். பிறகு வந்திருந்தவர்களைக் குழுவாகச் சில மைல்கள் தொலைவிற்குக் கடலுக்குள் அழைத்துச் சென்றார். நாங்கள் சென்ற பாய்மரப் படகுகளை “ராயல் மெட்ராஸ் யாட் கிளப்”பின் தேர்ந்த விருப்ப மாலுமிகள் செலுத்தினார்கள். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஆசி பெற்ற இந்தப் படகு சங்கம் இது, 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் சொன்னார்.

சில நிமிடங்கள் கடலுக்குள் படகு சென்றவுடன் திரும்பி நம் நகரைப் பார்க்கையில் ஒருவிதப் பிரமிப்பு என்னை ஆட்கொண்டது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் கப்பலிலிருந்து புனித ஜார்ஜ் கோட்டையைப் பார்த்த பார்வையிலிருந்து வரையப்பட்ட மெட்ராஸ் நகரப் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படியான ஒருப்படத்தை பழைய படமாகவோ எழும்பூர் அல்லது ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் ஓவியமாகவோ பார்த்த நினைவு. அன்று படகிலிருந்து சென்னை நகரைப் பார்க்கையில் எனக்கு அந்த ஓவியம் நினைவுக்கு வந்தது. ஓரிரு நொடிகள் நானே சுமார் நானூறு ஆண்டுகள் முன்னர் சென்றுவிட்ட மாதிரியான உணர்வு – அப்படியே சென்றாலும் என்னை அப்போது அடிமையாகவே வைத்திருப்பார்கள் என்பது உரைக்க நிகழ்காலத்திற்கு வந்தேன்.
கடற்கரை ஓரமாகச் சென்ற படகிலிருந்து மெரினா கடற்கரையின் மணல் வெளியை, கலங்கரை விளக்கத்தை, இளஞ்சிவப்பு விவேகானந்தர் இல்லத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஒரு வரம். எனக்குத் தெரிந்தவரை பொது மக்கள் எளிதாகச் செல்லும் பயணத்தோணி சேவை சென்னை துறைமுகத்தில் கிடையாது. அடுத்த முறைத் திரு ஶ்ரீராம் இதே நிகழ்ச்சியை நடத்தும் போது நீங்கள் செல்லலாம். அல்லது “ராயல் மெட்ராஸ் யாட் கிளப்” உறுப்பினர் யாரையாவது நட்புப்பிடித்து அவர் உங்களுக்காக அனுமதி வாங்கிக் கூட்டிச் செல்லச் சொல்லலாம். எப்படியோ போகும் வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.






Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

