ஒருகாலத்தில் நாட்டு நடப்புகளை, முன் ஆண்டு நடந்த உலக செய்திகளை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள இந்த இயர்புக்குகள் எனப்படும் தகவல் களஞ்சிய நூல்கள் மிகப் பிரபலமாக இருந்தது. அதில் எனக்குத் தெரிந்து மலையாள மனோரமா நிறுவனத்தின் வீக் இயர்புக் மிகப் பிரபலம். போட்டித் தேர்வுகளுக்கும், அரசாங்க தேர்வுகளுக்கும் பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் அந்தப் புத்தகத்தை வாங்குவார்கள்.

ஆனால் தற்போதைய செல்பேசி செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இந்த ஆண்டுமலர்களைப் புதிதாகப் பல்வேறு பதிப்பாளர்கள் வெளியிடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நடக்கும் இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் பல பதிப்பாளர்கள் (நக்கீரன், இந்து தமிழ் திசை) தமிழிலும் அவர்களது இயர்புக்குகளை பதிப்பித்து இருக்கிறார்கள். யார் இதை வாங்குகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு உண்மையாக இருக்கிறது.

இந்தப் புத்தகங்கள் தற்போது பயன் இல்லை என்று நான் சொல்லவில்லை, ஒரே இடத்தில் சென்ற ஆண்டு நடந்தவற்றை, புள்ளிவிவரங்களை விரைவாகப் பார்ப்பதற்குப் பயனாக இருக்கலாம். இத்தகைய ஒரு பெரிய புத்தகத்தை வெளியிடுவது என்பது சுலபமானது அல்ல, நிறைய உழைப்பும் செலவும் வேண்டும். இணையத்தில், விக்கிபிடியாவில் இலவசமாகக் கிடைப்பவற்றுக்கு விலை கொடுத்து வாங்குகின்ற மக்கள் அதிகமாக இருக்கிறார்களா? ஏன் பதிப்பாளர்கள் இன்னும் இதில் இருக்கிறார்கள்? அல்லது நான் இங்கே எதையோ பார்க்கவில்லையா – உதாரணமாக, நூலாகத் துறை இயர்புக் என்றாலே வாங்கியாக வேண்டுமா?

Tagged in: