எனது இன்றைய காலை நடை, மெரினா கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து அண்ணா சமாதி, திரும்பக் கண்ணகி சிலை வரை.  நான் கவனித்தது காலை ஏழரை மணிக்கெல்லாம் காமராஜர் சாலையில் பேருந்துகள் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது, பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் மகளிரை அந்தப் பேருந்துகளின் உள்ளே பார்க்க முடிகிறது. நிறைய ஒப்பனை அறைகள் இப்போது கண்ணில் படுகிறது. நிறைய சூப் வண்டிகள் பார்க்க முடிந்தது.

நடைபாதை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு (சுத்தமாக இருக்கிறது) சுமார் தான், மெட்ரோ பணிகள் முடியும் வரை இப்படித் தான் போல.

கார்கள் மணல் அருகே இருக்கும் உள் சாலைக்கு காந்தி சிலையிலிருந்து மெரினா நீச்சல்குளம் வரை எந்த வாயிலிலும் செல்ல முடியாது, காவல்துறை தடுப்புகள் இருக்கிறது – வண்டியை எதிர்புறச் சாலைகளில் நிறுத்திவிட்டு வர வேண்டும் அல்லது இரு சக்கர வாகனத்தில் அல்லது ஆட்டோவில் வருவது எளிது.

மணலை ஒட்டியுள்ள சாலையின் வெளிப்புறம் முழுக்க மூடியிருக்கும் சாப்பாடு கடைகள், முன்பெல்லாம் மெரினாவில் சில தள்ளுவண்டிக் கடைகள் இருக்கும், இப்போது பார்த்தால் கலங்கரை விளக்கிலிருந்து அண்ணா சமாதி தாண்டி கடைகள் தான், கூடிய விரைவில் அவர்கள் அடுக்குமாடி கடைகளை வண்டிகளில் கட்டி, கடல் நீரோ மணலோ தெரியாதளவு செய்யும் வாய்ப்பு அதிகம், மெட்ரோ நிலையங்கள் வந்தால் இன்னும் மோசம் ஆகும். அதனால் இப்போதே மெரினா கடற்கரையின் மீதம் இருக்கும் அழகை ரசித்து, மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.

Categorized in:

Tagged in:

,