அம்மாவின் கைப்பேசி (Ammavin Kaipesi), தங்கர் பச்சான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற நாவலை திரைப்படமாக அவரே எடுத்துள்ளார். தீபாவளிக்கு வெளிவந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு (இலவச டிக்கெட் என்று அர்த்தம்) இன்று கிடைத்தது. அவரின் அழகி படத்தைப் பார்த்திருந்தால் , இதுவும் இன்னொரு அழுகாச்சிப் படமாகத் தான் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் ஒரு விதமான க்ரைம் படமாக, மாறி மாறி தற்சமயம் மற்றும் பிலாஷ்பேக் வரும் காட்சிகள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

ஒரு வேலையாள் நிறைய பணத்துடன் வீட்டிற்கு வந்து அதை மறைக்கிறான், மனைவி பார்த்துவிடுகிறாள். இது தவறான பணம் என்று ஊகித்து அதைத் திருப்பிட சொல்கிறாள். அவன் அதைச் செய்ய போகும் வழியில் நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பது தான் கதை. வேலையாளாக தங்கர் பச்சன் கலக்கி இருக்கிறார். கதைக்கு ஏற்ப கண்களில் ஒருவித குற்றணர்ச்சியை படமுழுக்க காட்டுகிறார், அற்புதம். அவர் மனைவியாக வரும் மீனாள் வெளுத்து வாங்குகிறார். மீனாளுடன் பாடலில் ஆட எனக்கும் ஆசை தான், தங்கர் பச்சன் தனது வயதை கருத்தில் கொண்டு அந்தப் ஆடலை தவிர்த்திருக்கலாம். அதே சமயம் வேறு இடத்தில் நாட்டுப்புற பாடல், ஆடல் இவற்றைக்காட்டுவது நல்ல முயற்சி. பிளாஷ்பேக்கில் கிராமத்துப் பையனாக வருகிறார் சாந்தனு (Shanthanu Bhagyaraj). மிக இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார். இனியா இவருக்கு ஜோடி, அழகாக வந்து போவதோடு அளவாகவும் நடிக்கிறார்.

குடும்பத்தோடு கோவித்துக் கொண்டு ஊரைவிட்டுப் போன சாந்தனு, ஏழாண்டுகள் கடுமையாக உழைத்து ஒரு கல் குவாரிக்கு மேலாளராக உயர்கிறார். அதுவரை தாயோடு தொடர்பில்லாமல் இருப்பவர் ஒரு கைப்பேசியை வாங்கி பேச வேண்டும் என்பதற்காக அனுப்புகிறார், தாயும் ஆவலோடு இருக்கிறார். இங்கே வழக்கமான இழுவையான அழுகாச்சிக் காட்சிகளுக்கு நிறைய இடமிருந்தாலும் அதை அளவோடு நிறுத்தியிருப்பதற்காக இயக்குனருக்கு நன்றி சொல்லலாம். ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி, தங்கர் பச்சானுக்கு (Thangar Bachan) பாராட்டுக்கள்.

Ammavin Kaipesi (2016)

Ammavin Kaipesi (2016)

Categorized in:

Tagged in:

, , ,