நம் வீடுகளில் இருக்கும் மின்சாரக் கட்டமைப்பில், மின்சார வாரியம் அமைத்த மின்னுருகி (fuse) மற்றும் அளவுகருவிக்கு (meter) அடுத்தபடி முக்கியமான அமைப்பு பகிர்வு பெட்டி (DB box). இது நம்முடையது, மின்சார வாரியம் இதைச் செய்யாது. இதிலிருந்து தான் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு சாதனத்தின் மின் இணைப்பும் செல்கிறது. இது தான் வீட்டின் மின்சார மூளை என்று வைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக அடுக்குமனை குடியிருப்புகளில் இந்தப் பகிர்வு பெட்டியில் மும்முனை (three-phase) மின் இணைப்பு இருக்கும். சில சமயம் இதில் ஒன்றோ, இரண்டோ முனைகளில் (phase) மின்சாரம் வராது – இந்தப் பிரச்சனை வளர்ந்த நாடுகளில் கிடையாது, இந்தியாவில் இது சாதாரண நடைமுறை, முன் காலங்களை விடத் தமிழகத்தில் இப்போதெல்லாம் நிலைமை பரவாயில்லை. அப்படி சில ஃபேஸ்களில் (முனைகளில்) மின்சாரம் வராத போது வேலை செய்யும் முனையில் எல்லா இணைப்புகளையும் மாற்ற வேண்டும் – இதற்காகத் தான் டி.பி. பாக்ஸில் மூன்று மஞ்சள் நிற திருப்பிகள் (மின்விசிறியின் ரெகுலேட்டர் போன்ற தோற்றம்) வைக்கப்பட்டிருக்கும். எந்தக் முனைகளில் மின்சாரம் வருகிறது என்று சுலபமாகப் பார்க்கப் பகிர்வு பெட்டியில் வண்ண விளக்குகள் வைக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் ஃபேஸ்ஸுக்கு சிகப்பு, அடுத்த ஃபேஸ்ஸுக்கு மஞ்சள், அடுத்து நீலம் – Red, Yellow, Blue (RYB) என்ற வண்ணங்களில் இந்த விளக்குகள் இருக்கும்.

தற்போது கோடை என்பதால் சென்னையின் பல பகுதியிலும் மூன்று-முனைகளிலும் மின்சாரம் வந்து கொண்டிருந்தாலும், தேவையான மின்னழுத்தம் (Voltage) இருப்பதில்லை. என்ன தான் எல்.யி.டி. பல்புகள் என்றாலும் 180/190 வோல்ட்க்கு கீழ் போனால் அதுவும் சரியாக வேலை செய்யாது – மின் விசிறியில் காற்று வராது – குளிர் சாதனப் பெட்டியோ, மேஜை கணினியோ முழுவதுமாக வேலை செய்யாது. அப்போது வோல்ட்டளவி (Voltage Meter) கருவியைக் கொண்டு எந்த ஃபேஸ்ஸில் சரியான (200 வோல்டுக்கு மேல்) மின்னழுத்தம் வருகிறது என்று பார்த்து அதில் எல்லா இணைப்பையும் திருப்பி மூலமாக மாற்றிவிட வேண்டும். ஆனால் எல்லோரிடமும் வோல்ட்டளவி கருவி இருக்காது – மின் பணியாளரிடம் மட்டுமே இருக்கும்.

இதற்கான தீர்வு என்னவென்று யோசித்த போது, அமேசான் தளத்தில் தேடிப் பார்க்கலாமே என்று தோன்றியது. அதில் பகிர்வு பெட்டியில் வைக்கப்படும் சிறிய வட்ட வண்ண விளக்குகளுக்குப் பதிலாக, அதே அளவில், அதே இடத்தில் வைக்கக்கூடிய மின்னழுத்த அளவைக் காட்டும் அளவிகளைக் கண்டேன். மூன்று-முனைகளுக்கும் தொகுப்பாக விலை ஐந்நூறு என்று இருந்தது. வாங்கி மாட்டிவிட்டேன். படத்தில் பார்ப்பது போல, மின்சாரப் பிரச்சனை என்றால் பகிர்வு பெட்டியைப் பார்த்தாலே மூன்று ஃபேஸ்ஸும் வேலை செய்கிறதா, ஒவ்வொன்றிலும் சுமார் இருநூற்று-இருபது வோல்ட் அளவு வருகிறதா என்று தெரிந்துவிடும். அமேசான் தளத்தில் Digital Display Voltmeter Lights என்று தேடலாம். அருகில் இருக்கும் மின்சாரச் சாதனங்கள் விற்கும் கடைகளிலும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

Digital Display Voltmeter Lights RYB

Digital Display Voltmeter Lights RYB

மேலே சொல்லியதை உங்கள் வீட்டில் இருக்கும் பகிர்வு பெட்டியிலேயே பொருத்தலாம். அதே அளவில், அதே இடத்தில் வைக்கக்கூடிய விளக்குகள் இவை. உங்கள் பகிர்வு பெட்டியில் விளக்குகள் இல்லை என்றால் மே.சி.பி. (Miniature Circuit Breaker) ஸ்விட்ச் அளவிலேயே மூன்று-முனை மின்னழுத்த அளவைக் காட்டக் கூடிய MCB voltmeter கூடக் கிடைக்கிறது. இவற்றை அமேசான் தளத்தில் 3-Phase Voltmeter, 35mm Din Rail Mounted என்று தேடலாம்.

MCB style 3-Phase Voltmeter, 35mm Din Rail Mounted

MCB style 3-Phase Voltmeter, 35mm Din Rail Mounted

பின்குறிப்பு: இந்தப் பதிவின் முதல் பதிப்பில் three-phase electricity connection என்று சொல்ல மூன்று-கட்ட மின் இணைப்பு என்று தான் பயன்படுத்தி இருந்தேன். அந்த வார்த்தையைத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு இயற்பியல், தொகுதி – 1 (பக்கம் 228) மற்றும் தொகுதி – 2 (பக்கம் 287)  புத்தகங்களிலிருந்து தான் வார்த்தையை எடுத்தேன். அதை உறுதி செய்யத் தமிழக அரசின் சொற்குவை தளத்தையும் கூகுள் மொழிபெயர்ப்புகளையும் பார்த்தேன். இருந்தும் அது தவறாக வந்திருக்கிறது. எழுத்தாளர் மற்றும் நண்பர் திரு மாலன் அவர்கள் அதைச் சுட்டிக் காட்டினார், அவருக்கு நன்றி. அவரின் பரிந்துரை மும்முனை மின் இணைப்பு. அப்படியே பதிவைத் தற்போது மாற்றிவிட்டேன்.

Categorized in:

Tagged in:

,