கடந்த ஓர் ஆண்டாக வாரம் தோறும் ‘மெட்ராஸ் பேப்பர்’ரில் தொழில்நுட்பத்தைப் (குறிப்பாகச் செயலிகள் மற்றும் செல்பேசி, கணினி பயன்பாடுகள்) பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி.

ஆசிரியர், நண்பர் பா. ரா. அவர்கள் எனக்குச் சொன்னது, அல்லது நான் புரிந்து கொண்டது, கட்டுரைகள் செல்பேசிகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். ஐந்நூறு முதல் எட்டு நூறு வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். கணினித் தொழில்நுட்ப விளக்கங்களை தேவையானளவுக்கு மேல் வேண்டாம், அதுவும் குறைவாக இருக்கட்டும் – படிப்பவர்கள் பொறியாளர்களோ, ஆராய்ச்சியாளர்களோ இல்லை, சாதாரணப் பயனர்கள். இதோடு, எனக்கு நானே வைத்துக் கொண்ட விதி, எந்தக் கட்டுரையாக இருந்தாலும் அதைப் படித்தபின் அதில் படித்த விஷயங்களை வாசகர்கள் உடனே தங்கள் செல்பேசியில் செய்து பயனடைய வேண்டும், அதாவது சுலபமான செய்யச் செயல்கள் (Call to Actions என்று மேலாண்மை பயிற்சிகளில் சொல்லிக் கொடுப்பது போல) இருக்க வேண்டும்.

நான் எழுத்தாளன் இல்லை, அதுவும் தமிழில் தொழில்நுட்பத்தைப் பற்றி அவ்வப்போது பேட்டிகள் கொடுத்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன் என்றாலும் தொடர்ந்து இவ்வளவு எழுதியதில்லை. இருந்தும் இன்றோடு, ஐம்பத்திரண்டு வாரங்கள் என்று என்னாலேயே நம்பமுடியவில்லை!

முடிந்தளவு தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த என்னை அனுமதித்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி. ஆங்கில தவிர்ப்பு என்பது நோக்கம் இல்லை, இது தமிழ் கட்டுரை, தமிழ் தான் முதலும், முதன்மையும் (Tamil First and Foremost!) என்று எனக்கு நானே வைத்திருக்கும் குறிக்கோள். தமிழ் வார்த்தைகளைக் கண்டுகொள்ள உதவியது தமிழக அரசின் ‘சொற்குவை’ தளம். #sorkuvai

தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த என்னை அனுமதித்த (உதவிய) ஆசிரியர் குழுவுக்கு நன்றி. ஆங்கில தவிர்ப்பு என்பது நோக்கம் இல்லை, இது தமிழ் கட்டுரை, தமிழ் தான் முதலும், முதன்மையும் (Tamil First and Foremost!) என்று எனக்கு நானே வைத்திருக்கும் குறிக்கோள். தமிழ் வார்த்தைகளைக் கண்டுகொள்ள நன்றி தமிழக அரசின் சொற்குவை தளம்.

சரி, இன்றைக்கு என்ன கட்டுரை? எங்குப் பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு என்பது பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே கூகுள் பார்ட், மைக்ரோசாப்ட் பிங்க் சாட், சாட்-ஜி-பி-டி என்னென்ன செய்யும் என்று பார்த்துவிட்டோம், இவர்கள் மட்டும்தான் இந்தத் துறையில் புதுமை செய்கிறார்களா என்றால் இல்லை. பல புத்தொழில்களும் இதில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். அப்படியான சில செயலிகளை இங்கே பார்க்கலாம்.

  1. எழுதும் எல்லோருக்கும்
  2. காணொளிகளைப் பார்க்காமல் பார்க்கவும்
  3. காணொளிகளைத் தொகுக்கவும்
  4. உதவியாளர் வேண்டுமா?
  5. சந்திப்புகளில் என்ன பேசினோம்?
  6. ஒலிகளை மெருகேற்றவும்
  7. வீட்டை மாற்றி அமைக்கவும்

#paraghavan #madraspaper #OneYearStrong #மெட்ராஸ்பேப்பர் #தமிழ்க்கட்டுரை #TamilArticle


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “கடந்த ஐம்பத்திரண்டு வாரங்களாக ‘மெட்ராஸ் பேப்பர்’ரில் எனது கட்டுரைகள்”
  1. வெங்கட்டை முதல் முதலில் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில்லை. அநேகமாகக் கலைஞர் நடத்திய செம்மொழி மாநாட்டில் என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது மாநாடாகவும் இருக்கலாம். ஆனால் மாநாடுதான். அதில் சந்தேகமில்லை. அந்நாள்களில் அவர் ஆங்கிலத்தில் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். அவர் லிஃப்கோ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிற தகவலை பத்ரி சொன்னார். ஒரு லிஃப்கோகாரரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வருவது அவ்வளவு சிரமாகவா இருக்கும்?

    ஆனால் கிழக்கில் இருந்த காலம்வரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. எப்படியாவது எழுத வைக்க வேண்டும் என்று விரும்பினேன். வெங்கட்டை மட்டுமல்ல; டாக்டர் பாலசுப்பிரமணியன் என்று ஒரு பெரிய மேதை இருந்தார். கணக்குப் புலி. க்ரிப்டாலஜிஸ்ட். பழைய கணையாழி வாசகர்களுக்கு ‘நகுபோலியன்’ என்று சொன்னால் உடனே தெரியும். வாழ்நாளில் ஒரே ஒரு நகைச்சுவைக் கதையை மட்டும் எழுதிவிட்டு ஓய்வு பெற்றவர். ஆனால் மழநாட்டு மகுடம் என்ற அந்தக் கதை இன்று படித்தாலும் வெடித்துச் சிரிக்க வைக்கும்.

    வெங்கட்டைக் கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த சில புத்தகங்கள், டாக்டர் பாலசுப்பிரமணியத்தைக் கொண்டு க்ரிப்டாலஜி சார்ந்த ஒரு புத்தகம் – எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று விரும்பினேன். அன்று நடக்கவில்லை. டாக்டர் பாலு காலமானதோடு என் விருப்பத்தின் ஒரு பகுதி காலாவதியானது. ஆனால் வெங்கட்டைத் தமிழில் எழுத வைத்துவிட்டேன். அது என் பிரத்தியேக மகிழ்ச்சி.

    மெட்ராஸ் பேப்பர் வார இதழில் கடந்த ஓராண்டு காலமாக அவர் எழுதிய நுட்பம் சார்ந்த கட்டுரைகள், சந்தேகமில்லாமல் தமிழில் ஒரு முதல். இதற்கு முன்னரும் பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தளவுக்கு விவரமாகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தேவை சார்ந்தும் இருக்க வாய்ப்பில்லை. எளிய பயனர்களை மனத்தில் கொண்டு எழுதச் சொன்னேன். ஒரு சொல்கூடப் புரியாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நான் எதிர்பாராத ஒரு காரியத்தை வெங்கட் செய்தார். கலைச்சொல் உருவாக்கம்.

    அது ஒரு பயங்கரக் கண்ணி வெடி, கால் வைத்துவிட்டாரே என்று சிறிது கவலைப்பட்டேன். சில சொற்கள் கோக்குமாக்காக இருந்தன. பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் தரவேண்டி வந்தது. ஆனால் பெரும்பாலும் பல்லை உடைக்காமலேயே எழுதினார். போனில் படிக்கிற தலைமுறைக்குப் புரியவேண்டும்; உதவ வேண்டும் என்ற நோக்கம் முழுமையாக நிறைவேறியது.

    ஐம்பத்திரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் மூச்சுவிட்டுக் கொள்ள ஒரு சிறிய ஓய்வு கொடுத்திருக்கிறேன். சில வாரங்களில் வேறொரு சப்ஜெக்டுடன் திரும்ப வந்துவிடுவார். வெங்கட்டையெல்லாம் சும்மா இருக்க விடவே கூடாது. தொழில்நுட்பத்தை இந்தளவு சுவாரசியமாக எழுத இங்கே ஆள்கள் குறைவு.

    மெட்ராஸ் பேப்பரில் வெங்கட் எழுதிய ‘நுட்பம்’ கட்டுரைகள் விரைவில் புத்தகமாகவும் வெளிவரும். அது குறித்த விவரங்களைப் பிறகு தருகிறேன். இப்போது அக்கட்டுரைகளை மொத்தமாகப் படிக்க விரும்பினால் லிங்க் உள்ளது. ஆனால் உள்ளே போக சந்தா அவசியம்.

    1. இந்த வாய்ப்பும், இப்படி ஒரு ‘பாரா’ட்டும் கிடைத்தது என் பேறு. ஆசிரியருக்கு Pa Raghavan என் நன்றி.

      பா.ரா. சொன்னது போலக் கண்ணி வெடிகள் பயமாகத் தான் இருந்தது, ஆனால் தமிழக அரசின் சொற்குவை, மற்றும் பல முன்னோடிகளின் (பலரும் இங்கே பேஸ்புக்கில் நண்பர்களாக இருக்கிறார்கள்) இணையப்பக்கங்கள் எனக்கு உதவியது. ஒரு குருட்டுத் தைரியம், நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நேரடியாக வெளிவர இது என்ன எனது வலைப்பக்கமா, ஆசிரியரும் அவரின் உதவியாளர்களும் படித்து, பட்டிப் பார்த்து, ஓட்டைகளை அடைத்து விடுவார்கள் என்று. இந்தத் தொடர் சரியாக வந்தது என்றால் அவர்கள் தான் காரணம்.

      தொடரை எழுதிய போது நான் கற்றுக்கொண்டது: செல்பேசி, கணினியில் எனக்குத் தான் தெரியுமே என்று விளையாட்டாக நான் நினைத்த பல விஷயங்களைப் பற்றி எழுதத் தொடங்கிய போது தான் தெரிந்தது, அதன் ஆரம்பமோ, செயல்முறையோ சரியாகத் தெரியாது என்று, அவற்றைப் பற்றிப் படித்து அல்லது நானே செய்து பார்த்துத் தெரிந்து கொண்டு எழுதினேன், இது எனக்கு நிறைவைக் கொடுத்தது.

      “தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு”, ஔவையார்.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading