சென்னை கதிட்ரல் சாலையில் மெரினா கடற்கரையிலிருந்து அண்ணா மேம்பாலம் சென்று கொண்டிருந்தேன். என் காரை இடதுபுறமாக முந்திக்கொண்டு சென்றது ஒரு சின்ன மாருதி நிறுவன கார். பூஜை செய்து இட்ட சந்தனம் அப்படியே எல்லாப் புறமும் பளிச்சென்று இருந்தது. புது கார் எனப் பார்த்தவுடன் தெரிந்தது. பின் புறம் இன்னும் வாகன எண் பலகை மாட்டவில்லை . For Regn பலகைக் கூடயில்லை. சரி முன் பக்கம் இருக்கும் என எண்ணினேன். அடுத்த இரண்டு நிமிடங்களில் என் முன்னர் போய்க் கொண்டிருந்த எல்லா கார்களையும் சர், புர் என இடது, வலது எந்தப் பக்கமும் பார்க்காமல் அந்த புதுப் பச்சை கார் முந்திப் போனது. புது மாப்பிள்ளை மாதிரி, ஓட்டுநருக்குப் புது கார் வாங்கிய மிதப்பு என எண்ணிக் கொண்டேன். அண்ணா மேம்பாலம் அருகில், அமெரிக்கத் தூதரகம் எதிரில் இருக்கும் போக்குவரத்து விளக்கில் எனக்கு பக்கத்தில் நின்றது அந்த கார். பார்த்தேன், முன் பக்கமும் எந்த (எண்)பலகையும் இல்லை. சரி இன்னும் எண் பலகை வரவில்லை, நேரம் இல்லை போல என எண்ணினேன்.

அப்போது தான் கவனித்தேன், என்ன ஆச்சர்யம்! காரின் முன் பகுதியில் அழகாக, நல்ல உயரமான கொடி. தேசிய கொடியா, இல்லைவே இல்லை. தமிழக அரசியல் (பெரிய) கட்சி ஒன்றின் கொடி. அது ஆளும் கட்சியா, அல்லது எதிர்க்கட்சியா என சொல்லமாட்டேன், அது அரசியல் சார்பாகிவிடும், இந்தப் பதிவுக்கும் அனாவசியம். அந்த ஒரு நொடியில் விளங்கியது. இன்று இருக்கும் தமிழகத்தில் (ஏன் இந்தியாவில் எனக் கூட சொல்லலாம்) அரசியல் கட்சி தான் இருப்பதிலேயே முக்கியமானது – சட்டம், காவல், அரசியல் சாசனம், அரசாங்கம் என எல்லாமே அதற்கு அப்புறம் தான் போல!

இதனால் சகலமானவரும் புரிந்து கொள்ள வேண்டியது, காரோ, ஸ்கூட்டரோ வாங்கியவுடன் முதலில் செய்ய வேண்டியது, உங்களுக்கு விருப்பமான கட்சிக் கொடியை மாட்டுவது. வாகன பதிவு, எண்பலகை போன்றவைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம், அவசரமில்லை.

Categorized in:

Tagged in: