தாயுடன் வாழ்வது வரம், ஆனால் இந்த ஊரடங்கில் ரொம்ப கஷ்டம்!

தினம் காலை எழுந்து சமையலறைக்கு வந்தவுடன் அம்மா ஏதாவது ஒரு வேலை எனக்கு யோசித்து வைத்திருப்பாள். இன்று காலை எழுந்து, நான் பால் சாப்பிடப் போன போது, என்னைத் தடுத்துவிட்டாள்: “என் குளியலறையில் இருக்கும் ஸ்விட்ச் உடைந்து வந்துவிட்டது, அதை மறக்காமல் சரி செய்துவிடு. அவசரம் இல்லை”. “சரி மா” என்று சொல்லி பால் பாத்திரத்தை எடுத்தேன். தள்ளியிருந்த என் மனைவி புன்னகைத்தாள், அவளுக்குத் தெரியும் இது எப்படிப் போகும் என்று, எனக்குத் தான் பட்டாலும் அறிவு வராது. அம்மா ஆச்சே!

பாலை சுட வைத்து, தேனைக் கலந்து குடிக்கப் போனேன். அதற்குள் அம்மா “உனக்குப் பசிக்கிறது எனக்குத் தெரியும், கோவிச்சுக்காதே, உன் போன் காலுக்குப் போகும் முன், அந்த ஸ்விட்ச்சை சரி செய்துவிடு. நான் இருட்டில் கூட குளிச்சுடுவேன், எனக்குத் தேவையில்லை, ஷாக் அடித்திருமோ என்று தான் கவலையாக இருக்கிறது”

எனக்கா எரிச்சல் எடுக்க ஆரம்பித்தது, “சரி, நிச்சயம் பண்றேன், இப்போ என்னைப் பாலைக் குடிக்க விடுகிறாயா” என்று கொஞ்சம் கத்தினேன்.
மீண்டும் அம்மா “கோவிச்சுக்காதே, பாலை நல்லா சாப்பிடு, எனக்கு என்ன? ஆனால், நீ மறந்து மாடிக்குப் போய்டேனா, நானும் லைட் இல்லைங்கிறதை மறந்து போய், கீழே விழுந்து, காலை உடைத்துக் கொண்டால் உங்களுக்குத் தான் கஷ்டம், அதனால் தான்” என்று சோகமாக இழுத்தாள்.

எனக்கு இப்போ பசிக் கோபம் வந்தேவிட்டது “இப்போவே பண்றேன், போதுமா. அதற்கு அப்புறம் பாலைக் குடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மாடிக்குப் போய், டூல் பாக்ஸை எடுத்து வந்து பார்த்தால், என் அதிர்ஷ்டம், ஸ்விட்ச் உள்ளே சுத்தமா உடைஞ்சு இருந்தது, இது டூ-வே ஸ்விட்ச், உள்ளே இருக்கும் இன்னொரு ஸ்விட்ச்சை போட்டாலும் விளக்கு எறியவில்லை. இதை ஏதாவது பண்ணால் தான் அதுவும் வேலைச் செய்யும். ஒரு பத்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, எல்லா இஷ்டத் தெய்வங்களை வேண்டி, பழுதான ஸ்விட்சின் செம்பு பிளேட்டை ஒரு வாட்டத்தில் வைத்து, உள் ஸ்விட்ச்சை போட்டேன். விளக்கு எறிந்தது, உடைந்த ஸ்விட்ச்சை டேப்பை ஒட்டி வைத்து வந்தேன்.

“அம்மா, சரி பண்ணிட்டேன், உள்ளேயிருக்கிற ஸ்விட்சை வைத்து நீ விளக்கைப் போட்டுக் கொள்ளலாம், போதுமா” என்று குளிர்ந்துவிட்டப் பாலைக் குடிக்கப் போனேன். அதற்குள் அம்மா என் மனைவியைப் பார்த்து “அவன் தான் பாவம், கஷ்டப்பட்டு ஸ்விட்ச்சை சரி பண்ணிட்டு வந்திருக்கிறான், நீ பார்த்திட்டு இருக்கயே, அவனுக்கு அந்தச் சூடானப் பாலில் கலந்துக் கொடுக்க மாட்டாயா”. அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாதா? சமர்த்தாக, எதுவுமே குடிக்காமல் மாடிக்குச் சென்றுவிட்டேன்!

Categorized in:

Tagged in: