தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு கடந்த மூன்று நாட்களாக (அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை) ஜெர்மனியில் நடைபெற்றது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Institute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.

இந்த ஆண்டு முதல் முறையாக ஐரோப்பாவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. “கணி வழி காண்போம் தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருந்தது. உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பலர் பங்கேற்றார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டது.

சில மணி நேரம் முன்பாக நடந்த முடிவுரையில் உத்தமம் சார்பாக வெளியிடப்பட்ட மாநாட்டின் அறிவிப்பை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது (முழுமையான பிரதியை இங்கே பெறலாம்).  இதில் மிக முக்கியமான அறிவிப்பாக நான் கருதுவது ஒருங்குறி (Unicode) முறையைப் பற்றியது.

“ஒருங்குறி (Unicode) முறை தற்பொழுது பெரும்பாலான வணிக நிரலிகள், செல்பேசி நிரலிகள், மின்னியல் ஊடகங்களில் பயன் படுத்தப் படுவதனால், உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு அரசுகளைக் கேட்டுக்  கொள்கிறது”

சுமார் பத்தாண்டுகளாக தமிழக அரசில் நிலுவையில்  இருக்கும் இந்த பரிந்துரை இத்தோடு அரசாலும் (பயனாளர்களால் ஏற்கனவே பயனில் உள்ளது) எற்றுக் கொள்ளப்படும் என நம்புவோம். சில வாரங்களுக்கு முன் தமிழ் இணைய பல்கலைக்கழகம்  ஒருங்குறி முறைக்கு மாறியது மற்றும் அரசின் பல்வேறு இணையவழி சேவைகள் ஒருங்குறி முறையில் செய்யபடுவது முன்னோட்டம் என கருதுவோம்.

TIC2009 Closing Ceremony -Venkatarangan presenting the communique

TIC2009 Closing Ceremony -Venkatarangan presenting the communique

Tagged in: