கீழே வீடியோவில் நீங்கள் பார்ப்பது மேக் (Mac) கணினியில் நான் எதிர்கொண்ட முதல் செயலிழப்பு. எப்போதும் கீழே இருக்கும் டாக் (Dock) கூடக் காணாமல் போய்விட்டது.

இதற்குக் காரணம் நான் இயக்கிய பிண்டா புராஜெக்ட் (Pinta Project) செயலி, இதுவொரு இலவசத் திறமூலச் செயலி. இது ஒரு பிரபலமான செயலியே. திடீரென்று மேக் இயங்குதளத்திற்கு அதன் மீது என்ன கோபமோ தெரியவில்லை, இப்படி ஒட்டுமொத்தத் திரையும் ருத்திரதாண்டவம் ஆடிவிட்டு, முடங்கிவிட்டது. மேக் மினி கணினியின் அடியில் இருக்கும் மின் பொத்தானை அழுத்தி நிறுத்தி, மீண்டும் இயக்க வேண்டி வந்தது. அடுத்த மூன்று முறையும் இப்படியே நடந்தது.

அதனால் பிண்டா செயலியை நீக்கிவிட்டு, இன்னொரு பிரபலத் திறமூலச் செயலியான ஜிம்பை (GIMP) நிறுவிவிட்டேன். ஜிம்ப் மிகச் சக்தி வாய்ந்தது, அடோபி போட்டோஷாப் (Adobe Photoshop) அளவு திறன்களைக் கொண்டது, ஆனால் பயன்படுத்துவது கடினம். பிண்டா மைக்ரோசாஃப்ட் பெயிண்டைப் (Microsoft Paint) போல எளிதாக இருந்தது.

மேக் கணினி போலச் சிறந்தது கிடையாது, அது எப்போதும் செயலிழக்காது (Crash), பாதுகாப்பானது என்பது பொதுவான கருத்து. பெருமளவு இது சரியாக இருக்கலாம். ஆனால் பலரும் என்னைப் போன்ற விண்டோஸ் பயனர்களை நோக்கி இதை அழுத்தமாகச் சொல்வார்கள். அதில் ஓர் ஏளனம் இருக்கும். அதாவது விண்டோஸ் பாதுகாப்பானதில்லை, அது அடிக்கடி செயலிழக்கும் என்பதே உள்நோக்கமாக இருக்கும்.

முப்பது ஆண்டுகளாக நான் விண்டோஸ் பயனர். அவ்வப்பொழுது மேக் கணினி பயன்படுத்துவேன், ஆனால் விண்டோஸ்தான் எனக்கு வசதி. அதைப் பிரித்து மேய எனக்குத் தெரியும். விண்டோஸ் 10-லிருந்து, மேக்கை விட விண்டோஸ் இயங்குதளமே சிறந்தது என்பது என் கருத்து. லினக்ஸைப் (Linux) பற்றிக் கேட்க வேண்டாம், அது வேறு கதை. நீங்கள் மேக்கிற்குச் செலவு செய்வதில் ஒரு முக்கால் பங்கு கொடுத்து, தேர்வு செய்து நல்ல நிறுவனத்திலிருந்து வாங்கும் பல விண்டோஸ் கணினிகளும் மேக் அளவு சிறப்பாக வேலை செய்யும் என்பதே தொழில்நுட்ப ரீதியில் உண்மை.

அதோடு விண்டோஸை உங்கள் விருப்பம்போல (லினக்ஸை விடச் சற்றே குறைவாக) மாற்றியமைக்கலாம். பல சமயம் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் இருக்கும் ஐ.டி. பாதுகாப்புப் பொறியாளர்கள் அல்லது நீங்கள் வாங்கிய கணினியை உற்பத்தி செய்த எச்.பி (HP), லெனோவா (Lenovo), ஆசுஸ் (Asus) போன்றவர்கள் விண்டோஸை எங்களுக்கு ஏற்றவாறு மாற்றுகிறோம் என்று சொதப்புவார்கள். ஆனால் பழி எப்போதும் மைக்ரோசாஃப்ட் மீதே விழும், விண்டோஸ் ஒரு மோசமான இயங்குதளம் என்ற பெயரும் வரும்.

அதற்காக மைக்ரோசாஃப்ட் மீது குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன், கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் பல நல்ல மாற்றங்களை விண்டோஸில் செய்துள்ளார்கள் – அவற்றில் சில எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதும் உண்மை. ஆனால் மைக்ரோசாஃப்ட் அளவு எண்ணிக்கையிலான மாற்றங்களை, ஏன் எந்தவித பெரிய மாற்றங்களையுமே ஆப்பிள் (Apple) மேக்கில் செய்யவில்லை. ஆப்பிளின் கவனம் முழுக்க அவர்களின் தங்க முட்டையிடும் வாத்தான ஐபோன் (iPhone) மீது மட்டுமே, அதிலும்கூட ஆண்ட்ராய்டு (Android) அளவு வசதிகளை அவர்கள் கொடுத்ததில்லை. கேட்டால், நிறைய கொடுப்பதைவிடச் சிலவற்றை மட்டுமே கொடுத்து அவை சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை என்று சப்பைக்கட்டுக் கட்டுவார்கள்.

அடுத்ததாக, மேக் இயங்குதளத்தில் ஆப்பிளின் அனுமதியோடு அவர்களின் செயலிச் சந்தையிலிருந்து மட்டுமே இன்று பெரும்பாலான மேக் கணினிகளில் ஒரு செயலியை நிறுவ முடியும். அதில் ஆப்பிளுக்கு 30% தரகுக் கட்டணமும் உண்டு. இது மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் கிடையாது, அதனால் நீங்கள் இஷ்டம்போல இலவசச் செயலிகளை நிறுவிக் கொள்ளலாம். 2024-ஆம் ஆண்டு விண்டோஸில் வந்த கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) செயலிழப்புகளும் இந்தக் குறைந்த கட்டுப்பாடுகளால் ஏற்பட்டதே. இதையும் இப்போது தடுக்கும் முறைகளை மைக்ரோசாஃப்ட் செய்துள்ளது.

இப்போது முதலில் நான் சொன்ன கதைக்கு வருகிறேன். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் என் வீட்டில் வேலை செய்ய ஒரு மேக் மினி வாங்கினேன். அதில்தான் இன்றைக்கு நான் எதிர்கொண்ட இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது. இதற்குக் குறிப்பிட்ட செயலியே காரணம். அதை நான் ஆப்பிளைத் தாண்டி, அந்தச் செயலியின் தளத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொண்டேன் என்றாலும், மேக் இயங்குதளத்தால் அந்தச் செயலி ஏற்படுத்திய சிக்கலிலிருந்து காத்துக்கொண்டு மீள முடியவில்லை என்பது உண்மை.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, எந்த இயங்குதளமும் ஓரளவிற்கே நமக்கு நிலைத்தன்மையைக் கொடுக்கும். அதைத் தாண்டி ஏதாவது ஒரு சமயம் ஒரு செயலியில் பிரச்சனை என்றால் அது விண்டோஸாக இருந்தாலும், மேக்காக இருந்தாலும், ஏன் லினக்ஸாக இருந்தாலும் செயலிழப்பு என்பது நடக்கும். அதனால் எப்போதும் நம் தரவுகளைக் கணினியைத் தாண்டி வெளியில் அடிக்கடி சேமித்து வைப்பது அவசியம்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading