இரண்டு மொழிகளில் வரும் வார்த்தைகளை ஒரே வரியில் கலக்கும்போதோ, ஆங்கிலச் சொல்லைத் தமிழ் எழுத்தில் எழுதும்போதோ கவனம் தேவை.
இன்று நான் பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவில் ராணி மங்கம்மாளின் வரலாற்றைப் படித்தேன். அது உண்மையாகச் சொல்லப்பட்டுள்ளதா என்று க்ரோக் ஏஐயிடம் கேட்டேன். அதன் பதிலில் இப்படி ஒரு பத்தி வந்தது:
“அப்போது அவரது மனைவி முத்தாம்மாள் கர்ப்பமாக இருந்தார். குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கும்படி மங்கம்மாள் வலியுறுத்தினார். விஜயரங்க சொக்கநாதர் பிறந்த பிறகு, முத்தாம்மாள் சதி செய்தார். குழந்தை மூன்று மாதமாக இருந்த நிலையில் முடிசூட்டப்பட்டது. குழந்தை மன்னனுக்குப் பதிலாக நாட்டை நிர்வகிக்கும் அரசப் பிரதிநிதியாக மங்கம்மாள் பொறுப்பேற்றார்.”
முத்தாம்மாள் சதி (அதாவது சூழ்ச்சி) செய்திருந்தால், மங்கம்மாள் எப்படிப் பதிலாட்சியாளரானார் (Regent) எனக் குழம்பினேன். ஆங்கிலத்தில் தேடிப் படித்தேன். அப்போது புரிந்தது. மேலேயுள்ள பத்தியில் சொல்ல வந்தது இதுதான்: ராணி மங்கம்மாளின் மருமகள் முத்தாம்மாள் தன் உயிரை விட விரும்பியிருந்தார். அவரோடு சேர்ந்து குழந்தையும் இறந்துவிடுமே, அதனால் ஆட்சிக்கு வாரிசு இருக்காதே என்று எண்ணிய ராணியார் குழந்தை பிறக்கும்வரை மருமகளைக் காத்திருக்கச் சொன்னார்.
இங்கே “சதி செய்தார்” என்பது Sati என்ற சமஸ்கிருதச் சொல். அதற்குப் பொருள் உடன்கட்டை ஏறுதல். அதை அப்படியே தமிழில் சதி என்று எழுதி, க்ரோக் ஏஐ என்னைக் குழப்பிவிட்டது.
இது செய்யறிவு செய்யும் பிழை மட்டுமல்ல. நாமேகூட எழுதும்போதும் இவற்றைச் செய்துவிடுவோம். அதனால், குழப்பம் வராமல் இருக்க, முடிந்தவரை தமிழ்ச் சொற்களை, வழக்கில் இருக்கும் சொற்களை, சில சமயம் நன்கு தெரிந்த வேறு மொழிச் சொற்களை (உதாரணமாகத் தொழில்நுட்ப விசயங்களில் ஆங்கிலச் சொற்களை) தேர்ந்தெடுப்பது நல்லது.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

