சேப்பியன் ஜீனோ ஓடையின் முக்கியமான காணொலி இது. எல்லோரும் குறிப்பாகப் பெற்றோர்கள், பூமர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய வீடியோ. ஏ.ஐ.யைக் கொண்டு இப்போது வழக்கில் இருக்கும் போலிகள் எப்படி இருக்கும், அவற்றால் அன்றாட வாழ்வில் என்ன பாதிப்பு வரலாம் என்பதை எச்சரிக்கும் உரையாடல். நண்பர் ஷான் தெளிவாக, எளிதாக உதாரணங்களோடு விளக்குகிறார்.
பொய்களும் போலிகளும் என்றுக்குமே இருக்கிறது. புகைப்படங்கள் வந்தவுடன் அரசாங்கங்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு (உதாரணம் சோவியத் யுனியன், சீனா) போலிகளைத் தயாரிக்கத் துறைகளை அமைத்து வரலாற்றை மாற்ற முயன்றார்கள். கணினியில் போட்டோஷாப் வந்தவுடன் இவற்றை உருவாக்கத் தேவையான கருவிகள் எல்லோருக்கும் கிடைத்தது, பொய் படங்களைத் தயாரிக்கும் கலை பரவலாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இது நிழற்படங்களோடு நின்றது. பொய்யான காணொலிகளை உருவாக்கப் பெரிய திரைக்கூடங்களும் தேர்ந்த வல்லுநர்களும் தேவைப்பட்டார்கள்.
ஏறத்தாழ 2017ஆம் ஆண்டுவாக்கில் முதல் முதலாக டீப்-ஃபேக் (Deepfake) என்கிற வார்த்தை இணையத்தில் பேசப்படுகிறது. இதற்கான மென்பொருட்கள் திறமூலமாக வரத் தொடங்குகிறது. தமிழில் மெய் புனைவு, என்கிற இந்த முறையில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஓரளவு உண்மையாக இருப்பது போன்ற மிகச்சிறிய நேரம் ஓடக்கூடிய போலி காணொலிக்கள் வரத் தொடங்குகிறது. எல்லாத் தொழில்நுட்பத்தை போலவும் முதலில் ஆபாச வீடியோக்களே வெளிவந்து பேசப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நடிகர்கள், அமெரிக்க அதிபர், புனிதத் திருத்தந்தை போப் ஆண்டவர் போன்ற பிரபலங்களைக் கொண்டு மெய்புனைவுக் காணொலிகள் வரத் தொடங்கியது. இவற்றைச் செய்யப் பெரிய கணினிகள் தேவைப்பட்டது, செலவு அதிகமாக ஆனது, அதிக நேரமும் எடுத்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்யறிவு (Generative AI) நுட்பம் அசுர வளர்ச்சி அடைய, மெய்புனைவு வீடியோக்களைச் செய்ய தேவையான செயலிகளும் கணினி வசதிகளும் எல்லோருக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. Google Veo3 போன்ற தளங்களில் இன்று இவற்றை ஓரிரு நிமிடங்களில் செய்யலாம். பிரபலங்களின் பெயர்களை, அல்லது தனிப்பட்ட மனிதர்களின் படங்களைத் தந்து ஆபாசமான, ஆபத்தான காணொலிகளைக் கேட்டால் கூகுள் செய்ய மறுக்கும். ஆனால் திரு எலாம் மஸ்க் எதற்கும் கட்டுப்பட்டவர் இல்லை என்பதால் அவரின் X நிறுவனத்தின் Grok AIஇல் நீங்கள் கேட்கும் எதை வேண்டிமென்றாலும் செய்யும். வெறும் வீடியோக்களோடு இந்தப் பிரச்சனை நிற்கவில்லை, மெய்புனைவாக நேரடியாக நடக்கும் வீடியோ அழைப்பாகவும் செய்ய முடியும். இதைக் கொண்டு உங்களின் நண்பரைப் போலவோ, மகளைப் போலவோ, அலுவலக மேலதிகாரியைப் போலவோ அவரின் அசல் உருவத்தில், குரலில் பேச வைக்க முடியும், அதற்குப் பின்னால் இயக்க மனிதர்கள் தேவையில்லலை, செயற்கை நுண்ணறிவே இயக்கவும் செய்யும். இதனால் சகலமானவர்களுக்கும் நாம் செல்வது – காதால் கேட்பதும் பொய், கண்ணால் பார்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
ஷான் சொல்லும் செய்தியின் சுருக்கம்: யார் பணம் கேட்டு எந்தச் சூழ்நிலையிலிருந்து பேசுவதாகச் சொன்னாலும் நிறுத்தி நிதானமாக யோசிக்கவும், சரி பார்க்கவும். அடுத்து உங்களுக்கு வேண்டியவர்கள் உருவில் ஆபாச காணொலிகள் வந்தால் அவர்களுக்குத் தைரியம் சொல்லுங்கள். இதில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல பாதிக்கப்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். முக்கியமான விசயம்: மானம், மரியாதை, கௌரவம், கற்பு என்பதெல்லாம் உடல் அங்கங்களில் இல்லை, நிச்சயமாகப் போலி படங்களிலும் இல்லை.
பின் குறிப்பு: இப்படியான வீடியோக்கள் உங்களுக்கு வந்தால் தயவு செய்து அதை அடுத்தவர்களுக்கு இது உண்மையா உண்மையா எனக் கேட்டுப் பகிர்ந்து, நீங்களே அந்தப் போலியின் அடுத்த விநியோகஸ்தராக மாறாதீர்கள். உடனடியாக அதை அழித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகவும். சொல்வது எளிது, தனிப்பட்ட முறையில் இதையெல்லாம் செய்வது மிகக் கடினம் என்று புரிகிறது. ஆனால் மனிதச் சமூகம் தொடர்ந்து இயங்க, வளர வேறு வழிகள் இல்லை. வரம் கொடுத்த தொழில்நுட்பமே இந்தச் சாபத்திற்கான விடையையும் அளிக்கலாம், ஆனால் அப்படி எதுவும் இன்று இல்லை என்பதே நிலைமை.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

