சில ஆண்டுகளாக சென்னையின் பிரபலமான ஐஸ் கிரிம் (இங்கே ஜெலட்டோ வகை மட்டுமே) உணவகமாக மாறியுள்ளது லெ அமிஸ் (Les Amis). இது ஆழ்வார்பேட்டையில் அடையார் கேட் ஹோட்டல் இருந்த இடத்திற்கு அடுத்து இருக்கிறது. மந்தவெளியில் இருந்து வந்தால் போட் கிளப் தெருவிற்கு இடது பக்கம் திரும்பும் முன், டி.டி.கே. சாலைக்குத் திரும்பும் முன்னர், வலது பக்கத்தில் இருக்கிறது.
எனக்கு சென்னையில் பனிக்கூழ் என்றாலே அது அருண் ஐஸ் கிரிமின் ஐபாகோ மட்டுமே. சுவையும் தரமும் விலையும் எனக்கு ஏற்றார் போல் இருக்கும்.
பல முறை அந்த வழிப் போனாலும் இதுவரை லெ அமிஸில் சாப்பிட்டதில்லை. சில தினங்களுக்கு முன்னர் நண்பர் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நாங்கள் போனது இரவு 10:45 மணிக்கு. அப்போதும் கூட வாசலில் விலையுயர்ந்த வாகனங்கள் வரிசையாகக் காத்திருந்தது. வாசலிலிருந்து நுழையும் போது கண்ணில் பட்டது: (காதல்) ஜோடி ஒன்று தற்படம் (செல்பி) எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மனதில் வாழ்த்து சொல்லிவிட்டு, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் நகர்ந்து உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற போதும் கூட்டம், எங்களுக்கு உட்கார சற்று இடம் கிடைத்தது.

ஒரு பக்கம் குச்சி ஐஸ், இன்னொரு பக்கம் பல தோட்டிகளில் பல சுவைகளில், வண்ணமிகுந்த ஜெலட்டோக்கள். விருப்பமான சுவையை கேட்டு, சேர்த்து, மேலே தூவ விரும்புவதைத் தூவி வாங்கிக் கொள்ளலாம். நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு குச்சி, ஆளுக்கு அரை கரண்டி சாப்பிட்டோம் என்று வைத்தால் ஒருவருக்கு ஏறக்குறைய முந்நூறு ரூபாய் ஆனது. சுவையாக இருந்தது, ஆனால் எனக்கு ஜெலட்டோவை விட ஐஸ் கிரிம் தான் பிடிக்கும் என்பதால் என்னை அந்தளவு கவரவில்லை.
அது என்ன ஜெலட்டோ? இது இத்தாலியர்களின் பிரபலமான பனிக்கூழ். முக்கியமாக ஜெலட்டோவில் பால் அதிகமாக, பால் ஏடு (கிரீம்) குறைவாக இருக்கும். ஜெலட்டோ தயாரிப்பிக்கும் போது ஐஸ் கிரீமை விட மெதுவாக அடிக்கப்படுகிறது, அதனால் காற்று குறைவாகக் கலந்திருக்குமாம். பொதுவாக ஐஸ் கிரிம்களை தயாரிக்கும் முறையிலிருந்து, இவர்கள் ஜெலட்டோ தயாரிக்கும் முறை வித்தியாசப்படுகிறது என்று சொல்கிறார்கள். பதப்படுத்த எந்தவித ரசாயனமும் கிடையாது, ஒவ்வொரு முறையும் ஒரு சில லிட்டர் அளவே செய்கிறார்கள், அதுவும் ஒரு கலைஞர் ஓவியத்தை வரைவது போலவாம் – அப்படியென்றால் என்னவென்று என்னைக் கேட்கக் கூடாது. ஐஸ் கிரிமைவிட உடம்பிற்கு நல்லது என்றும் சொல்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை, இரண்டிலுமே கொழுப்பு, சர்க்கரை அதிகமாகவே இருக்கும். ஆரோக்கிய விசயத்தில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது, அதனால் இரண்டையுமே எப்போதாவது ஒரு முறை குறைவாகச் சாப்பிட்டு மகிழலாம். அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம்.



இந்த உணவகத்தின் பின்னணி என்னவென்று இணையத்தில் தேடிப் பார்த்தால். இது பிரவிண் ராஜகோபால் என்பவரால் 2020 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பாவில் படித்து முடித்து, வேலை செய்து அங்கே அவர் சாப்பிட்டு ரசித்த அனுபவத்தில் தொடங்கப்பட்டது. முதலில் அவராகவே தயாரித்து, இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரப்படுத்தி விற்று வந்திருக்கிறார். விற்பனை அதிகரிக்க இந்த உணவகத்தைத் தொடங்கியுள்ளார்.
லெ அமிஸ் கீழ்த்தளத்தில் ஜெலட்டோ. மாடியில் ஒரு சிறப்பு அடுமனை (பேக்கரி) மற்றும் ஆடம்பரக் காபி கடையும் உள்ளது. இவர்களுக்குத் தேவையான காபிக் கொட்டைகளைத் தென் இந்தியாவில் இருக்கும் சிறு காபி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குவதாகச் சொல்கிறார்கள். இந்த முறை நான் மேல் தளத்திற்குச் செல்லவில்லை.
அந்தப் பக்கம் போனால் லெ அமிஸில் ஜெலட்டோக்களைச் சாப்பிட்டுப் பார்க்கத் தவறாதீர்கள். நன்றி.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

