இன்றைக்கு என்னுடைய கணினிகளில் என் முதல் வலை உலாவியாக இருந்த விவால்டியை நீக்கிவிட்டு, ஜோகோவின் உலாவை நிறுவிக் கொண்டுள்ளேன். என் முதல் வலை உலாவியில்தான் பொதுவாக ஒரு தளத்திற்குச் செல்வது, பத்திரிகைகளைப் படிப்பது, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யு-ட்யூப் போன்றவற்றைப் பார்ப்பது எனச் செய்வேன்.

என் கணினிகளில் எப்போதும் இரண்டாவதாக ஒரு வலை உலாவி இருக்கும் – அது பெரும்பாலும் மைக்ரோசாப்ட் எட்ஜ் அல்லது கூகுள் குரோமாக இருக்கும். இப்பொழுது வீட்டில் மேக் மினி கணினியைப் பயன்படுத்துவதால் கூகுள் குரோமைப் பயன்படுத்துகிறேன். இதில்தான் எனது வங்கிச் சேவைகளை, அரசுச் சேவைகளை, அலுவலகப் பணிகளை, நான் சந்தா கட்டிப் பயன்படுத்தும் செயலிகளை, செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துகிறேன். இந்த இரண்டாவது வலை உலாவியில் சமூக வலைத்தளங்களுக்குச் செல்ல மாட்டேன்.

பெரும்பாலும் இப்படி நான் பயன்படுத்தும் குரோமில் ஒன்றிரண்டு முக்கிய வலை உலாவி நீட்சிகளைத் தவிர வேறெதையும் நிறுவ மாட்டேன். இப்படிச் செய்வதால் ஓர் ஒழுக்கம் என் பயன்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன். அதோடு சில பாதுகாப்புப் பயன்களும் உண்டு.

I rotate my web browsers. I stay safe? [AI-generated artwork.]
I rotate my web browsers. I stay safe? [AI-generated artwork.]
இப்போது முதல் பத்திக்குத் திரும்பி, எனது முதல் வலை உலாவித் தேர்வைப் பற்றி அலசுவோம். ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை எனது கணினிகளில் நான் பயன்படுத்தும் முதல் வலை உலாவியை மாற்றுவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபயர்பாக்ஸ், பிறகு விவால்டி, பிறகு ஓப்ரா, பிறகு பிரேவ், அதன்பிறகு வாட்டர்பாக்ஸ், ஜோகோவின் உலா, திரும்பக் கடந்த ஓர் ஆண்டாக விவால்டி. இப்படி மாற்றிக்கொண்டே இருப்பேன்.

பெரிய காரணம் இல்லையென்றாலும், ஏதோ புதிதாக வந்தது போன்ற உணர்வு கிடைக்கும். அதோடு இப்படி வலை உலாவிச் செயலியை கணினியிலிருந்து நீக்கும்போது, அதுவரை நாம் அதில் சேமித்த தரவுச் சுமைகள் நீக்கப்பட்டுவிடும். பிறகு நாம் புதிதாக நிறுவும் இன்னொரு வலை உலாவி புதுப் பக்கத்திலிருந்து தொடங்கும், பல மாதங்களுக்கு வேகமாக ஓடும்.

இன்னொரு பயன், பெரும்பாலான நேரம் நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை வலை உலாவியில் மட்டும் சேமித்து வைத்திருந்தால், புது வலை உலாவியை நிறுவி அந்தத் தளத்திற்குப் போகும்போது மாட்டிக்கொள்வோம். அப்போது அதை நினைவுபடுத்தி, புதிதாக உள்ளீடு செய்து இப்போது சேமிக்கும் வாய்ப்பைப் பெறுவோம்.

கடவுச்சொல் மேலாண்மைச் செயலியை (Password Manager) அல்லது பாஸ்கீ (Passkey) போன்ற வசதிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மாற்றம் சற்று எளிதாக இருக்கும். இப்படி நான் ஒரு வலை உலாவியை நீக்கும்முன், அது என் கணினியிலும் அவர்களது மேகக் கணிமையிலும் சேமித்துவைத்துள்ள எனது தரவுகளை நீக்கிவிடுவேன்.

ஒவ்வொரு வலை உலாவியும் ஒவ்வொரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்படுகிறது. ஃபயர்பாக்ஸ் (Firefox) இணையச் செந்தரங்களை ஒழுங்காகச் செயல்படுத்துகிறது. விவால்டி (Vivaldi) உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லா வசதிகளையும் மாற்றியமைப்பதை உறுதிசெய்கிறது. பிரேவ் (Brave) விளம்பரத் தடுப்பில் கவனம் செலுத்துகிறது. ஜோகோ உலா (Zoho Ulaa) நம் சென்னைத் தயாரிப்பு என்பதால் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

எச்சரிக்கை: இந்த மாதிரி வலை உலாவியை மாற்றுவது எல்லோருக்கான முறை அல்ல. செயலிகளை நிறுவுவது, தரவுகளை – முக்கியமாக உங்களின் கடவுச்சொற்களை – ஒழுங்காகச் சேமித்துவைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமான முறை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்படிச் செய்து உங்களுக்கு மிக முக்கியமான தளத்திற்குள் நுழைய முடியாமல், தேர்விற்குத் தாமதமாக வந்த மாணவர் வெளியில் நிற்கவைக்கப்பட்டு ஓர் ஆண்டைத் தவறவிட்டது போல் நடந்தால் நிர்வாகம் பொறுப்பில்லை.

#firefox #vivaldi #brave #zohoulaa #waterfox #googlechrome #microsoftedge


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading