விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட் (Rocket) குழுவினருக்கு வாழ்த்துகள்!
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், அதன் இறுதிக்கட்ட உந்துதலை முடித்து, அது எடுத்துச் சென்ற சரக்கை ஏறத்தாழ 450 கி.மீ. சுற்றுப்பாதையில் கச்சிதமாகச் செலுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு இதே நிறுவனம் அவர்களது சிறிய ராக்கெட்டைச் செலுத்தி சோதனை செய்தது, ஆனால் இன்று செலுத்தப்பட்டது செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் அளவு சக்திவாய்ந்தது.
ஸ்கைரூட் குழுவினர், த்ரஸ்டர்களை (Thrusters) இயக்கிய விதத்தை, “சாரே ஜஹான் சே அச்சா” என்ற கவிஞர் முகமது இக்பால் எழுதிய நம் தேசபக்திப் பாடலின் இசைக்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறார்கள் என்று யு-ட்யூப்பில் பார்த்தபோது உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன்.
இந்திய அரசின் இஸ்ரோ (ISRO) எப்படி நாட்டின் பெருமையோ, அதேபோல நம் நாட்டுத் தனியார் நிறுவனங்களின் சாதனைகளும் நமக்குப் பெருமையே. அரசும், தனியாரும், மக்களும் சேர்ந்து செயலாற்றினால் நாம் வல்லரசு ஆகும் நாள் விரைவில் வரும்.
விவரங்கள்:
இன்று சனிக்கிழமை, ஜூலை 18, 2026 மதியம் 12:05 மணிக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து “விக்ரம்-1” ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதுவரை நம் நாட்டில் ராக்கெட் ஏவுவது என்பது இஸ்ரோ மட்டுமே செய்யக்கூடிய காரியமாக இருந்தது. இன்று முதல் முறையாக, ஒரு தனியார் நிறுவனம் தானே முழுமையாக வடிவமைத்து உருவாக்கிய ராக்கெட்டை, அது சுமந்து சென்ற சிறு செயற்கைக்கோள்களைப் பூமியைச் சுற்றிவரும் பாதையில் செலுத்தியுள்ளது.
இந்த ராக்கெட்டை உருவாக்கியது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற ஐதராபாத்தைத் தளமாகக் கொண்ட ஒரு துளிர் நிறுவனம். இதை நிறுவியவர் இஸ்ரோவில் பணியாற்றிய இளம் பொறியாளர் — பவன் குமார் சந்தானா மற்றும் நாகா பரத் டகா.
விக்ரம்-1 குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

