வருடக் கடைசியில் விருந்துகளுக்கும் விடுமுறைக்கும் இடையே, சில மணி நேரம் எடுத்து நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை இங்கே பார்க்கலாம்.

இன்று பலருக்கும் செல்பேசி அவர்களின் அலுவலகம், பாதுகாப்பு பெட்டகம், நினைவுகளின் குறிப்பேடு. போன வாரம் ஒருவர் தனது செல்பேசியைக் கோயில் உண்டியலில் தவறவிட்டுப் படும் சிக்கலைப் பார்க்கிறோம்.

இதற்கான தீர்வு என்ன? நமது செல்பேசியிலும் கணினியிலும் இருக்கும் தரவுகளை, கோப்புகளை, படங்களைச் செல்பேசிக்கு வெளியே வேறு இடத்தில், பதிகள் எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது. இதைச் செய்ய இரண்டு முறைகளைப் பார்க்கலாம்.

முதலாவது முறை

நம் செல்பேசியில் கணினியில் இருக்கும் கோப்புகளை நாம் மேக கணிமையகங்களில் (Cloud) பாதுகாத்து வைக்க வேண்டும். இதற்கு அந்தந்த செல்பேசி இயங்குதளத்தின் நிறுவனங்களில் ஒரு கணக்கு வேண்டும் – நீங்கள் ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் வைத்திருந்தால் அல்லது ஜி-மையில் வைத்திருந்தால், கூகுள் கணக்கு ஏற்கனவேயிருக்கும், அதே போல ஐ-போன் என்றால் ஆப்பிள் கணக்கு ஏற்கனவேயிருக்கும். அடுத்து அந்தக் கணக்கில் உங்களுக்கென்று தரவுகளைச் சேர்த்துவைக்க இடம் வேண்டும். இந்த நிறுவனங்கள் முன்னர் இலவசமாகக் கொடுத்தார்கள், இப்போது எல்லோரும் இலவச அளவைக் குறைத்து எல்லோரையும் சந்தாவிற்குத் தள்ளிவிட்டார்கள். 100 ஜி.பி. என்கிறளவு இடத்தைச் சுமார் ரூபாய் 110 மாதக் கட்டணத்தில் கொடுக்கிறார்கள் – இதைப் பெறக் கூகுள் ஒன் (Google One) என்று இணையத்தில் தேடவும். நீங்கள் ஐ-போன் வைத்திருந்தால் ஆப்பிள் நிறுவனம் 50 ஜி.பி. என்கிறளவு இடத்தைச் சுமார் ரூபாய் 75 மாதக் கட்டணத்தில் கொடுக்கிறது.

ஆன்ட்ராய்ட் செல்பேசி என்றால் கூகுள் ஒன், ஐ-போன் என்றால் ஐ-கிளவூட் (iCloud) என்று சந்தா கட்டிவிட்டு, அந்தந்த செல்பேசியின் அமைப்புகளுக்கு (Settings) சென்று சேமிப்பை (Backup) தொடங்கவும் என்று நிறுவிவிடுங்கள். அடுத்தது, பொதுவாக எல்லாப் பிரபலச் செயலிகளும் அவற்றினுள் நீங்கள் உருவாக்கும் விசயங்களை அவர்களின் மேகக் கணினிக்கு அல்லது உங்கள் செல்பேசியின் அமைப்புகளில் இருக்கும் மேகக் கணக்கிற்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கு விலக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்-ஆப் (WhatsApp), இது அவர்களின் ரகசியங்கள் பாதுகாப்பு முறையின் காரணமாகச் செய்யப்படுகிறது காரணத்தை இங்கே விட்டுவிடலாம். அதனால் நீங்கள் வாட்ஸ்-ஆப்பைத் திறந்து சாட் (Chat) அமைப்புகளுக்குச் சென்று மேகக் கணக்கு சேமிப்பை இயக்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். முதன்முதலில் இதைச் செய்யும் போது உங்கள் வீடு அல்லது அலுவலக வைஃபை (WiFi) இணைப்பில் செய்யவும், நிறையத் தரவுகள் ஒரே சமயத்தில் வேகமாகச் செல்ல இது உதவும். அதற்குப் பிறகு உங்கள் செல்பேசியில் தரவுகளை மாற்ற மாற்ற உடனுக்குடன் அல்லது அன்றைய தினமோ அல்லது அந்த வாரத்திலோ அவற்றின் ஒரு பிரதி உங்களின் மேகக் கணினி சேமிப்புக் கிடங்குக்குச் சென்றுவிடும்.

அடுத்ததாக வாட்ஸ்-ஆப் செயலியில் இருக்கும் மிக முக்கிய (அதாவது உங்கள் குடும்ப/அலுவலகப் படங்கள், வேறு யாரிடமும் அவை இருக்காது என்பனவற்றை) படங்களை, வீடியோக்களை மட்டும் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அவற்றைக் கூகுள் போட்டோஸ் அல்லது ஆப்பிள் போட்டோஸ்ஸில் சேர்க்கவும். இப்படித் தனியாக இந்தச் செயலிகளில் வைப்பது, பின்னர் இவற்றைத் தேடி எடுப்பதைச் சுலபமாக்கும். அதே போல முக்கியமான எண்கள் சரியாக உங்கள் செல்பேசியிலிருந்து உங்களின் மேகக் கணிமைக்குச் சென்றிருக்கிறதா என்று Google Contacts, அல்லது iCloud இணையத்தளத்திற்கு வலை-உலாவியில் (Google Chrome or Safari) சென்று பார்த்து உறுதி செய்து கொள்ளவும். இதனால் அடுத்த முறை இந்தச் செல்பேசியிலிருந்து அடுத்ததற்கு மாறும் போது உங்கள் எண்கள், படங்கள், வாட்ஸ்-ஆப் அரட்டைகள் அனைத்தும் திரும்ப வந்துவிடும்.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் அவர்களது சந்தா தாரர்களுக்குச் சலுகைவிலையில் அவர்கள் ஜியோ-கிளவூட் வசதியை வழங்கத் தொடங்கியுள்ளது. இது கூகுள் ஒன் (Google One) போன்றது, அதே வசதிகள் இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் ஜியோ பயனர் என்றால் இதன் விவரங்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் கேட்கலாம்.

நினைவில் கொள்ள, உங்கள் செல்பேசி எண்ணுக்கு மாதக் கட்டணம் போல இந்தச் சந்தாவையும் மாதாமாதம் கட்ட வேண்டும். இனி உங்கள் தரவுகளைச் செல்பேசி காணாமல் போனாலோ, வெள்ளமோ, நெருப்போ, திருட்டோ அதையோன்றும் செய்ய முடியாது.

இரண்டாவது முறை

இந்த முறையில் செல்பேசியில் இருக்கும் எல்லாத் தரவுகளையும், எண்களை, வாட்ஸ்-ஆப் அரட்டைகளைக் கணினி நுட்பங்கள் தெரியாமல் சேமிக்க முடியாது. ஆனால் சுலபமாக படங்களை, வீடியோக்களைச் சேமிக்கலாம். இதற்குத் தேவை எக்ஸ்டர்னல் டிரைவ் (External Hard drive) என்கிற மின்னணு கருவி. இதன் விலை சுமார் மூன்றாயிரம் ரூபாய் இருக்கும். இதை வாங்கி உங்கள் செல்பேசியோடு, கணினியோடு இணைத்து இருக்கும் கோப்புகளைச் சேமித்துவிடலாம். இது உங்களின் சொந்தக் கருவி, அதனால் மாதச் சந்தா கிடையாது, ஆனால் அவ்வப்பொழுது இதை மாட்டி நீங்கள் தான் சேமிக்க வேண்டும், தானாக நடைபெறாது.

இந்த விடுமுறைக் காலத்தில் உங்கள் செல்பேசி விசயங்களை இப்படி மேகக் கணிமையில் சேமித்து வைத்து நிம்மதியாக இருக்கவும். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

குறிப்பு: இதைப் போன்று ஜம்பத்திற்கும் அதிகமான செல்பேசி தகவல்களுக்கு எனது ‘நுட்பம்’ நூலை வாங்கி வாசிக்கவும், நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading