
சென்னை தெற்கு உஸ்மான் சாலை போக்குவரத்து மாற்றம்
ஓர் பகுதியில் போக்குவரத்து மேம்பாட்டு வேலை (நல்ல விஷயம்) நடக்கிறது என்றால் அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற முக்கிய சாலைகளை முன்பைவிட நல்ல முறையில், எந்தவித இடையூறும் இல்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நம் பெருநகர சென்னை மாநகராட்சியோ, உலகத்துக்கே முன்மாதிரியாக யோசிக்கிறது. ஏற்கனவே தி. நகர் பனகல் பூங்கா சந்திப்பில் மெட்ரோ வேலை நடைபெறுவதால், ஜி. என். சாலையிலிருந்து மேற்கு மாம்பலம் போவது கிரிவலம் போல ஆகிவிட்டது. மற்றும் வெங்கட்நாராயணா சாலை / பர்கிட் சாலை / அண்ணா சாலை சந்திப்பில் மெட்ரோ வேலை நடைபெறுவதால், அண்ணா சாலைக்குச் செல்வது இமயமலை ஏறுவது அளவுக்குக் கஷ்டமாகிவிட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் இருக்கும் அடுத்த முக்கிய சாலையையும் சென்னை மாநகராட்சி அடைத்து அப்போது தான் மேம்பாலம் கட்டுகிறது.
தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலைக்குத் தெற்கு உஸ்மான் சாலையில் நேராகச் செல்லமுடியாது, மேம்பாலம் கட்டுப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து தி. நகர் பேருந்து நிலையம் வரலாம். அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்து அண்ணா சாலைக்குச் செல்ல கண்ணமா பேட்டை, சவுத்-வெஸ்ட் போக் சாலை, லிங்க் சாலை எனச் சுற்றிச் செல்ல வேண்டும். இந்த மேம்பாலத்திற்கு இப்போது என்ன அவசரம், பத்து ஆண்டுகளுக்கு மேலாக யோசனையில் இருந்த திட்டம் இது, இரண்டு ஆண்டுகள் மெட்ரோ வேலை முடிந்தவுடன் கட்டினால் ஒன்றும் ஆகாது. என்ன செய்ய?
அந்தச் சாலைகளை முற்றிலும் முடிந்தால் தவிர்க்கலாம். இல்லை வொர்க்-ஃப்ரம்-ஹோம் செய்ய அனுமதிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லலாம், அந்த பக்கத்தில் கல்யாணம், கருமாதி சடங்குகள் நடந்தால் வர மாட்டேன் என்று சொல்லிவிடலாம், நண்பர்கள் உறவுகள் மன்னிப்பார்களாக!


