ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் அவரது மின்சார வாரியக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதற்காக ஓர் இணைய முகவரியைக் கொடுத்தார்கள். ஒரு சிலர் மின்சாரக் கணக்கையும் ஆதாரையும் இணைக்கும் பணியை எளிதாகச் செய்தபோதிலும் பெரும்பாலானவர்களுக்குச் சிக்கல்தான். அரசு உத்தரவு என்பதால் வேறு வழியின்றிப் பலர் நேரடியாகச் சென்று இணைப்பு வைபவத்தை நிறைவேற்றிவிட்டு வந்தார்கள். இது ஒன்றிரண்டு இடங்களில் நடந்ததல்ல. மாநிலம் முழுதும்.

விஷயம் என்னவென்றால் இது இப்போது நடக்கும் பிரச்னை அல்ல. அரசுத் துறை சார்ந்த எந்த ஒரு இணைய நடவடிக்கையும் சிக்கலுக்குரியதாகத்தான் உள்ளது. சென்ற ஆண்டு இந்திய அரசின் நேரடி வருவாய்த் துறையின் இணையத் தளத்தை இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தயாரித்தது. என்ன பயன்? பல மாதங்கள் வரை அந்தத் தளம் தொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஐ.ஆர்.சி.சி.சி என்கிற இந்திய இரயில்வே பதிவுத் தளத்தைப் பயன்படுத்த நீங்கள் ஒரு முனைவர் பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். இன்னொரு உதாரணம். ஆதாரில் திருத்தங்கள் செய்வதை நாமே செய்ய முடியும் என்கிறார்கள். அதற்கொரு இணையத்தளம் இருக்கிறது. அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழ்ப் பிரதி தனியே அருகில் வரும். ஆனால் தப்பும் தவறுமாக மட்டுமே வரும். அதில் திருத்தம் செய்தால் ஆங்கிலத்தில் சொதப்பும். இரண்டையும் பிழையில்லாமல் டைப் செய்து உள்ளிட இன்றுவரை ஒரு வழி கிடையாது. முகவரியிலோ, பெயரிலோ ஒரு பிழையுமே இல்லாத ஆதார் அட்டை கொண்ட ஓர் இந்தியர் இருப்பாரானால் அவருக்கு முடி சூட்டியே விடலாம்!

இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். நிகரம் ஒன்றுதான். அரசுத் தளங்கள், அரசுச் செயலிகள் எல்லாம் பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும்படியாக இருப்பதில்லை.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது ஏழைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதற்கொரு இணையத்தளம் தொடங்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அது செயல்பட முடியாமல் திணறித் திண்டாடிப் போனது. பின்னர் சிலிகான் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுநரை வெள்ளை மாளிகையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்து சில மாதங்களில் சரி செய்தார்கள். இந்த இணையத் தளத்தின் குளறுபடிகளை அலசி ஹார்வர்ட் பல்கலைக்கழக முதுகலை வணிக மேலாண்மை மாணவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

உலகளவிலும் ஏன் இப்படி அரசாங்கங்களின் இணையத் தளங்கள் தடுமாறுகின்றன? அதற்கு முக்கியக் காரணங்கள் என்ன? தடுமாறும் செயலிகளை தட்டிக் கொடுத்து நம் வேலையை முடித்துக் கொள்ள ஏதாவது வழிகள் உண்டா? ஒழுங்காக வேலை செய்யும் அரசுச் செயலிகள் என்று ஏதாவது இருக்கிறதா?

இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் பார்க்கலாம்.

Categorized in:

Tagged in: