சென்னை பெருநகரில் எங்கேயும் போவதற்கே கடுப்பாக, பயமாக இருக்கிறது! மெட்ரோ (மின்சார இரயில் கூட) இருப்பது மட்டுமே ஆறுதலான விசயம். எந்த காலத்திலும் எங்கள் நகரத்து ஓட்டுநர்கள், அது கார், இரண்டு சக்கரம், ஆட்டோ, பஸ் என எந்த வகையான வாகன ஓட்டுநர்களும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு, அதுவும் ஊரெல்லாம் குழித்தோண்டி வைத்திருக்கும் நிலையில் யாருக்குமே பொறுமை என்பது சுத்தமாக இல்லை. இடித்துவிட்டுச் செல்வது என்பது சர்வ சகஜமாகி விட்டது.

ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் என்றால் கட்டாயம் இடது தோளில் செல்பேசியை இடுக்கிக் கொண்டு, அதுவும் சாலையில் எதிர்புறம் தான் வேகமாக செல்ல வேண்டும் – எல்லோருமே அமெரிக்காவில் வாழ்ந்து திரும்பியவர்கள் போல் – சாலையில் வலதுபுறம் மட்டுமே ஓட்டுவது என் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சிக்னல் எங்கேயுமே கிடையாது, வேலை செய்தாலும் யாருமே அதை பொருட்டாக மதிப்பதில்லை.

இரண்டு காரில் ஒன்றை விற்றுவிட்டேன், இருக்கும் ஒன்றை எடுக்கவே பிடிக்கவில்லை. எங்கே போவதென்றாலும் ஆட்டோ மற்றும் மெட்ரோ தான். இதுவும் நல்லது தான் போல. ஆட்டோ தவிர்த்து சைக்கிள் அல்லது மின்சார ஸ்கூட்டர் வாங்கி போக ஆசை, ஆனால் குண்டு-குழிகளைப் பார்த்தால் உயிருக்குப் பயமாக இருக்கிறது – காயமே இது பொய்யடா என்கிற பக்குவம் வரப் பிரார்த்திக்கிறேன்.

இந்தளவு சென்னையில் என் முப்பதாண்டு வாகனங்கள் ஓட்டிய அனுபவத்தில் பார்த்ததில்லை – நான் பேசிய சில ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த கணிப்பை ஒப்புக் கொள்கிறார்கள். இது சரியா, உங்கள் பார்வை என்ன?

 

 

Categorized in:

Tagged in: