சென்னையில் தமிழ் எஃப்எம் ரேடியோ தொகுப்பாளர்கள் பேசும் ஒவ்வொரு மூன்று வார்த்தைகளில், இரண்டு ஆங்கிலத்தில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் தமிழில் பேசினால் சாமானியனுக்கு எளிதாக விளங்கம்.

ஆங்கில கலப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை – இன்று சென்னையில் ஆங்கில வார்த்தைகள் (லெஃப்ட், ரைட், ஸ்லோ, ரேடியோ, டிவி, கார்) போன்றவை தெரியாமல் வாழமுடியாது. ஆனால் எளிதான தமிழ் வார்த்தைகள், நம் வீட்டில், தெருவில் அன்றாடம் புழங்கும் வார்த்தைகளுக்கு எதற்கு ஆங்கில திணிப்பு- ஆங்கில வழி கற்ற நான் இதை சொல்கிறேன் என்றால் எனக்கே சிரிப்பாக (பாசாங்குத்தனமாக) தான் இருக்கிறது, ஆனால் இவர்களின் கூத்து நாளாக நாளாக தாங்க முடியவில்லை.

இதற்கு இவர்கள் முழுவதுமே ஆங்கிலத்தில் பேசலாமே?. கூடவே ஆங்கில பாடல்களும் போட்டால் எல்லோரின் ஆங்கில அறிவும் அதிகமாகும்.

எஃப்எம் ரேடியோ நிறுவனங்கள் செய்யும் கருத்து கணிப்புகள் எதிலுமா பயனர்கள் இந்த கருத்தை (ஆங்கிலம் புரியவில்லை என்று) சொல்லவில்லையா? சென்னைவாசிகள் அனைவருமா லண்டன் பள்ளிகளில் படித்திருக்கிறார்கள்? இல்லை இது எனக்கு தான் சங்கடமாக தோன்றுகிறதா?

இதை சொல்வதால் தமிழ் அழிக்கிறது என்று நான் பயப்படவில்லை. நமக்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக அன்னியர் ஆக்கிரமிப்பை எல்லாம் பார்த்த மொழி, தமிழ், அது, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிச்சயம் இருக்கும். என் வருத்தம் சாதாரண மக்களுக்கு போய் சேர வேண்டிய விஷயங்கள் சரியாக போவதில்லை என்பது தான் – அரை குறை ஆங்கிலத்தால் தவறாக புரிதல் தான் அதிகம்.

என் ஐயம் இது தான், மக்கள் இதை ஏற்று கொண்டுவிட்டார்களா? இதை தான் எதிர்ப்பார்க்கிறார்களா? தனியார் சேவைகள் மக்களுக்கு வேண்டியதை தானே தங்களின் லாபத்தை கருத்தில் கொண்டு செய்வார்கள். அப்படி என்றால் இது தான் தேவையா?

விளக்கம்: தமிழ் மட்டும் என்று நான் சொல்லவில்லை. ஆங்கில கலப்பு தப்பில்லை. முழுவதும் ஆங்கிலமாவது பயனர்களுக்கான சேவையில் குறை.

Categorized in:

Tagged in: