டம்மீஸ் டிராமா நாடகக்குழுவின் மின்மணிகள் நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் இன்று நாரத காண சபாவில் அரங்கேறியது. ஒருவரிக் கதையை வைத்து ஒரு முழு நாடகத்தையும், நன்றாக இயக்கியுள்ளார் திரு பிரசன்னா.

கோவிந்த் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளர், அவனுக்கு அன்பான பெற்றோர்கள்.கோவிந்துக்கும் அவர்கள் மீது அதித பாசம். எல்லா மென்பொருள் பொறியாளர்கள் போல் அவனுக்கும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆவல், அவனின் பெற்றோருக்கும் பையன் வெளிநாட்டில் இருக்கிறான், அங்கிருந்து இதை அனுப்பினான், அங்கே பல இடங்களுக்குச் சென்று அனுப்பிய படங்கள் இவை, என்று காட்டி பெருமைப்பட ஆசை. இவனுக்கு வர வேண்டிய ஒரு ‘பாரிஸ்’ பயண நியமனம், இவன் எதிர்ப்பார்த்த மாதிரி அமையவில்லை. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் கதை.

நாடகம் நகைச்சுவையாக செல்கிறது, பல இடங்கள் சிரிக்கும்படி இருந்தது, வசனங்கள் காலத்திற்குப் பொருத்தமாக நன்றாக இருந்தது. கோவிந்தாக வந்த இளைஞரும், மின்சார வாரிய ஆனந்தன், லிங்கம் கதாபாத்திரத்தில் வந்தவர்களும், பெற்றோராக வந்தவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.

கதையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பெரிய பங்காக வருகிறது. அதில் வேலை செய்பவர்கள், எப்படிக் கடமையோடு, கடினமாக, மக்களுக்காக வேலை செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பல வசனங்கள், மின்சாரம் சமந்தமாகவும், மென்பொருள் (பிளாக்செயின் உட்பட) பேச்சாகவும் வருகிறது. எனக்குப் புரிந்தது, நன்றாகவும் இருந்தது, ஆனால் மற்ற ரசிகர்களுக்கு விளங்குமா என்பது சந்தேகம். நாடகத்தில் பெரும்பாலும் ஓர் அலுவலக நடப்புக்குறிப்பு மாதிரி செல்வது ஒரு சோர்வு. ஒரு காதலாலோ அல்லது நட்பாலோ திருப்பங்கள் வந்திருந்தால், சுவையாக இருந்திருக்கும்.

குழுவினருக்கு வாழ்த்துகள்.

Dummies Drama Minmanigal - Karthik Fine Arts

Dummies Drama Minmanigal – Karthik Fine Arts

Tagged in:

,