ஒருவரால் இவ்வளவு சாப்பிட முடியமா?

தற்போது அதிகமாகப் பேசப்படும், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை இன்று ஜாஸ் சினிமாஸில் பார்த்தேன் [படத்தின் விமர்சனம் அடுத்த பதிவில்]. எனக்கு வலதில் இருந்த முப்பது வயது இளைஞர், அவரை ‘அன்பு’ என்று அழைக்கலாம், எனக்கு முன்பே வந்திருந்தார். அன்பை தாண்டிப் போய் அமர்ந்தேன். நான் எப்போதும் போல், என்-95 மாஸ்க் அணிந்திருந்தேன். அன்பு மாஸ்க் எதுவும் அணியவில்லை, போடச் சொல்லி வேண்டலாம் என்று சொல்ல முற்பட்டேன், அப்போது குனிந்து பாப்கான் பொட்டலத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். சரி, சாப்பிடுபவர் மாஸ்க் போட முடியாது, சாப்பிடுபவரை நிறுத்த சொல்வது (தமிழர்) பண்பாடு இல்லை என்று தயங்கி மௌனமானேன், இன்னும் ஓர் ஐந்து நிமிடத்தில் முடித்துவிடுவார் என்று நினைத்தேன்.

ஒரு மணி நேரமாகியும் அவர் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார், நடுநடுவில் கோக் பானம் வேறு, அதைச் சத்தம் போட்டு வேறு உறிஞ்சினார், பெரிய பெரிய கொட்டாவி, ஏப்பம் வேறு, எல்லாம் நிர்வாணமான வாயை வைத்து. எனக்கா என்னைச் சுற்றி வைரஸ் வைரஸா சுற்றுவதுப் போல் இருக்கிறது. அப்போது தான் கவனித்தேன், பாப்கான் பொட்டலம் ஒன்றரை அடி இருக்கும், இவ்வளவு பெரியதெல்லாம் இருக்கா? இதற்குள் இடைவேளை வந்துவிட்டது. நானும் எழுந்துப் போய் திரும்பினேன் – இனி அன்பு மாஸ்க் போட்டுவிடுவார் என்ற நம்பிக்கையில்.

இப்போதும் அவர் எனக்கு முன்னே வந்திருந்தார். மாஸ்க் இல்லை. இந்த முறை சொல்லியே விடுவது என்ற திரும்பினால், மீண்டும் குனிந்து எதையோ எடுத்தார். ஒரு பெரிய அட்டை டப்பா, என்ன என்று பார்த்தால் – ஏன் படத்தைப் பார்க்காமல் இவரையே கவனித்தேன் என்று தெரியவில்லை – இரண்டு பெரிய சாண்டுவீச்சு, இடை இடையே இன்னொரு ஒரு பெரிய கோக், அதை உறிஞ்சுவது என்று தொடர்ந்தார் அன்பு. இறுதிக் காட்சிக்கு வந்துவிட்டோம், எனக்கு இடது பக்கத்தில் இருந்த தாத்தா, திரையில் வரும் கொடுமைகளை (நிஜ ரத்த ஆறு) தன்னால் பார்க்க முடியவில்லை என்று உறக்கச் சொல்லி எழுந்து நடந்தார். தாத்தா போனப் பின், அன்பு, மீண்டும் எதையோ எடுத்தார், இந்த முறை சரியாக தெரியவில்லை, ஆனால் அது இன்னொரு டப்பா, அதிலிருந்து எதையோ எடுத்து எடுத்துச் சாப்பிட்டார், என் பக்கம் திரும்பி இந்தக் கைபிடியில் சொருகி வைத்திருந்த மில்க் ஷேக்கை எடுத்து உறிஞ்சினார்.

எனக்கு வயிறு அடைத்து, கண்ணை கட்டியது, நல்லவேளை படமும் முடிந்தது.அரங்கிலிருந்து வெளியில் வந்தால், முதல் உணவு கவுண்டரில், முதல் ஆளாயிருந்தது அன்பு.

அடுத்து நான், பயந்து போய் வெளிய வந்த தாத்தாவைத் தேடினேன், ஓரமாக இருந்த இருக்கையில் அவர் அமர்ந்து அழுதுக் கொண்டியிருந்தார்!

குறிப்பு: நல்ல சாப்பாட்டை ரசிப்பவன் நான், உடம்பைக் குறைக்க பட்டினி இருப்பவன் இல்லை நான், இருந்தாலும், கொரோனாக் காலங்களில் இது கொஞ்சம் அதிகம், அதனால் தான் இந்த நகைச்சுவையானப் பதிவு, யாரையும் புண்படுத்துவது என் நோக்கமில்லை. நன்றி.

Categorized in:

Tagged in:

,