சுந்தர ராமசாமியின் (Sundara Ramaswamy) – ஒரு புளியமரத்தின் கதை (Oru Puliyamarattin Katai)  

1960களில் வந்த இந்த புத்தகத்தை இது நாள் வரை படிக்காமல் இருந்தது என் இழப்பு. மறைந்த திரு.சுந்தர ராமசாமி அவர்களின் முதல் நாவல் இது, 1959இல் எழுத ஆரம்பித்து, ஒவ்வொரு வார்த்தையாக அவர் செதுக்கி முதல் பதிப்பை 1966இல் வெளியிட்டுள்ளார், அப்போதும் அவருக்கு திருப்தியில்லை போல. தமிழர்கள் மட்டுமல்லாமல் கதைகளின் மேல் ஆர்வமுள்ள அனைவரும் இந்த புத்தகத்தை அவரவர் மொழியில் படிக்கலாம், கட்டாயம் விரும்புவர். 

முச்சந்தியில் நின்று கொண்டிருக்கும் ஒரு புளியமரத்தைச் சுற்றி நடப்பவைத் தான் இந்த நாவல். அப்படி என்ன நடந்துவிடப் போகிறது என்று எண்ணினால், சுமார் இருநூறு ஆண்டுகளில் நாட்டில், ஊரில் நடப்பவற்றை நமக்கு காட்டிவிடுகிறார் ஆசிரியர். ஊரின் ஓரம் பாழ்மண்டபம் ஒன்றில், யாழ்ப்பாணம் புகையிலையும், ஈத்தாமொழி வெற்றிலையும் போட்டுக் கொண்டு பழங்கால நிகழ்வுகளை, தன் கற்பனை கதைகளையும் சேர்த்து அவிழ்த்துவிடும் எண்பது வயது தாமோதர ஆசானிடம் இருந்து ஆரம்பிக்கிறது இந்த “ஒரு புளியமரத்தின் கதை”. அது செல்லத்தாயி என்ற பெண் புளியமரத்தில் உடுத்தியிருந்த சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டு இறப்பதில் போய், பூரம் திருநாள் மகாராஜா வரும் போது துர்நாற்றம் அடித்த காரணத்திற்காக அருகில் இருந்த புளிக்குளம் நிரப்பட்டு ரோடு போடப்படுவதை தொட்டுக்காட்டிவிட்டு,  புளியமரத்தை சுற்றிய இடம் முக்கிய ஜங்கஷனாக மாறி  அருகே இருந்த காற்றாடி மரத்தோப்பு நகரப் பூங்காவாக உருமாறியத்தைச் சொல்லி, பஜாரில் இருந்த இரு வியாபாரிகளின் வளர்ச்சியை/வீழ்ச்சியையும் சொல்லி, இதற்கு மேல் ஒரு நாவலில் சொல்ல எதுவுமே இல்லை நிலையில் நிறைவு பெருகிறது.

கதை நடக்கும் வட்டார வழக்கை,  அது இஸ்லாமிய காதரானலும் சரி, கூலி ஐயப்பனாலும் சரி, குழித்துறை தாமுவனாலும் சரி,  வெவ்வேறு ஜாதி மதத்தினரின் அவரவர்களின் வழக்காடல்களை  மிக இயல்பாக ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார். 

எழுத்தாளரின் கூர்மையான கவனித்தலின் எடுத்துக்காட்டு, தஞ்சாவூர் இளைஞனின் மேற்பார்வையில் உருவான நகரப் பூங்காவை அவர் வர்ணிக்கும் பக்கங்கள். அங்கே இருக்கும் பூக்களில் ஆரம்பித்து, சிறு மிருகக்காட்சிசாலையாக காட்சிதரும் வெட்டப்பட்ட செடிகளைச் சொல்லி, மூலையில் அலறிக்கொண்டிருந்த ரேடியோவின் ஒலியை நமக்கு கேட்க வைத்து, அங்கே வரும் காதலர்களை நம் கண்முன்னே நிறுத்தி, புல்தரையில் பேசப்படும் அரசியல் விமர்சனங்களை நம் காதில் போட்டு, நடக்கும் பொதுக் கூட்டங்களை பார்க்க வைத்து, சர்வதேச சங்கம் அமைத்த குழந்தைகள் விளையாட்டு அரங்கின் விளையாட காத்திருக்கும் குழந்தைகளின் க்யூவையும் காட்டிவிடுகிறார்.      

இந்த புத்தகம் ஒரு சிறுகதை தொகுப்பில்லை, ஒரு முழு நீள நாவல். அப்படி இருந்தும் பலப்பல கதைகளை , காதாபாத்திரங்களை, காலங்களை ஒரு எழுத்தாளாரால் ஒரே புத்தகத்தில் எங்கேயும் ஒரு சிறு தோய்வுக்கூட இல்லாமல எப்படிச் சொல்ல முடிந்தது என்பது எனக்கு பெரிய ஆச்சரியம். ஒரே நாவலில் அரச முறையும் நையாண்டி செய்கிறார், எகாதிபத்தியத்தையும் சீண்டுகிறார், இடது வலது பக்க அரசியலையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார், ஜனநாயக முறையின் விநோதங்களையும் கேலி செய்கிறார், ஆனால் எதுவுமே எந்த தனி நபரையோ ஒரு சமூகத்தையோ வருந்த வைக்கும்படி இல்லை. இப்போது வளர்ந்து வரும்  நுகர்வோர் காலச்சாரத்தையும் கூட ஆசிரியரின் கிண்டல் பார்வையில் இருந்து தப்பவில்லை, ஆச்சரியம் இது இந்த அளவு வளர்ந்திராத அறுபதுகளில் எப்படி அவரால் இதை இந்தளவு தொலை நோக்கிப் பார்க்க முடிந்தது?. 

இன்னொரு ஆச்சரியம் கதையின் நாயகன் ஒரு ஆண் என்று மட்டும் தான் நமக்கு தெரிகிறது, அவரோடு தான் நாம் இருநூறு ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கேட்டு பிரயாணம் செய்கிறோம், ஆனால் நாயகன் யார், அவரைப் பற்றி எதுவுமே நமக்கு சொல்லப்படவில்லை,  அப்படி இருந்தும் அவருக்கு ஒரு முகம் நம் மனதில் எப்படியோ தோன்றிவிடுகிறது, அதுவே  திரு.சுந்தர ராமசாமியின் எழுத்திற்கான சான்று. 

oru-puliyamarathin-kathai

Categorized in:

Tagged in:

,