எழுத்தாளர் திரு இரா முருகன்

எழுத்தாளர் திரு இரா முருகன் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்.

நான் அதிகமாகப் புனைவுகளைப் படிப்பவனில்லை. இருந்தாலும் கிழக்குப் பதிப்பகத்தின் (அப்போதைய) வெளியிட்டான இரா முருகன் அவர்களின் புதினமான மூன்று விரல் நூலை 2009ஆம் ஆண்டு வாங்கினேன். அதைத் தேர்வு செய்யக் காரணம் திரு பத்ரி அவர்களின் பரிந்துரையாக இருந்திருக்க வேண்டும். வாங்கிய புதினத்தை எப்படியோ உடனே படிக்கவும் தொடங்கினேன். அதைவிட ஆச்சரியம் முழுவதும் படித்து முடிக்கும் வரை கீழே வைக்கவே முடியவில்லை. ஓரிரு நாட்கள் இந்தப் புதினத்தின் உலகிலேயே நான் பயணித்தேன் என்றே சொல்ல வேண்டும். அந்தளவு நூல் என்னை வசீகரித்துவிட்டது.

நாய் வளர்ப்போர் சங்கத்தின் மென்பொருளை லண்டனில் நிறுவப் போகும் கதாநாயகன் என்று தொடங்கி, என் துறையின் அன்றைய நிலையை அப்படிப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் இரா முருகன். தொழில்நுட்பத்தைப் பின்னணியாக வைத்து ஒரு காதல் கதையை இப்படியும் சொல்ல முடியுமா என்றும் ஆச்சரியமாக இருந்தது.

அடுத்தது நான் படித்தது அவரின் லண்டன் டயரி. இது லண்டனின் சரித்திரத்தை ரோமானியரின் ஆரம்பகால ஆட்சியிலிருந்து நமக்குத் தெரிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரை சுவாரஸ்யம் குறையாமல் சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.

இவை இரண்டையும் தூக்கிச் சாப்பிடும் அளவு இருந்தது அவரின் அரசூர் வம்சம். என் குறைந்த வாசிப்பில், தமிழில் வந்துள்ள மேஜிக்கல் ரியலிசம் (Magical realism) வகைப் புனைவுகளில் ஒரு சிறப்பான முயற்சி இந்தப் புதினம். 470க்கும் அதிகமான பக்கங்களை எப்படிப் படித்தேன் என்றே தெரியவில்லை, அந்தளவு விறுவிறுப்பு. இறந்த காலம், வாழும் காலம், வரும் காலம் என எல்லாக் காலங்களில் இருந்தும் கதாபாத்திரங்கள் ஒரே காட்சியில் யதார்த்தமாக வந்து போவார்கள் – எங்கேயும் எவர் எந்தக் காலம் என்று பிரித்துப் பார்க்கவே தேவையில்லாமல் இரா முருகனின் எழுத்து தெளிவாக நம்மைக் கொண்டு செல்லும்.

அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியான விஸ்வரூபம் நூல் அந்தளவு என்னைக் கவரவில்லை. அதே போல இருந்ததால் நான் அதைத் தொடர்ந்து படிக்கவில்லை.

என்னையும் தமிழ்ப் புனைவுகளைப் படிக்க வைத்த இரா முருகன் அவர்களுக்கு நன்றி. அவரின் எழுத்தின் ரசிகன் நான் என்பது எனக்குப் பெருமை.

திரு இரா முருகன் அவர்களின் எழுத்துகள் தமிழ் இலக்கியத்தில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவிற்கு மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த அஞ்சலி.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading