இரா.முருகனின் அரசூர் வம்சம்

இரா.முருகனின் இரண்டு புத்தகங்களையும் (மூன்று விரல், லண்டன் டயரி) படித்து, அவர் வசனம் எழுதியத் திரைப்படத்தையும் (உன்னைப் போல் ஒருவன்) பார்த்து அவரின் எழுதிற்கு நான் ஒரு ரசிகனாகிவிட்டேன். அதனால் தேடி வாங்கிய அவரின் முந்தைய நாவல் தான் இந்த ”அரசூர் வம்சம்”. இந்த நாவல் திண்ணை இணையத்தளத்தில் தொடராக வந்தது என்று அறிகிறேன்.

சுமார் நூறு/நூற்றியம்பது ஆண்டுகளுக்கு முன் அரசூர் என்ற சிறு ஊரில் நடக்கும் கற்பனைக் கதை. அந்த ஊரில் உள்ள புகையிலை விற்கும் சுப்பிரமணிய அய்யரின் விட்டையும், அருகில் இருக்கும் செல்வாக்கிழந்த ஜமின்தார் அரண்மனையும் சுற்றி வரும் கதை. இதை தவிர மலையாளத் தேசத்தில் அம்பலப்புழையில் உள்ள கரண்டி பிடிக்கும் குடும்பம், சென்னைப்பட்டினத்தில் வைத்தி சார் விடு இவர்களையும் சேர்த்துக் கொண்டுச் செல்கிறது கதை. இதற்கு நடுவில் சுப்பம்மாள் கிழவி, அடிக்கடி வந்து போகும் மூத்தக்குடிப் பெண்கள், இறந்தும் ராஜாவைப் படுத்தும் புஸ்தி மீசைக் கிழவன், பின் காலத்திலிருந்து மனத்தில் நினைத்தமாத்திரத்தில் ஆஸ்டின் காரில் வந்துப் போகும் பனியன் சகோதரர்கள் அவர்கள் கொண்டு வரும் ஒப்பாரி பாடல்கள் பாடும் பழுக்காத்தட்டு பாட்டுப் பெட்டி என்று ஆழமான கதாப்பாத்திரங்கள் . இவர்களைத் தவிர பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை உருட்டி யந்திரம் செய்துக் கொடுக்கும் அரண்மனை ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார்,  சாவக்காட்டு கிறிஸ்தியானி பிராமண கிழவன், அவர்களின் நீள அங்கி அணிந்த தோமையன், கொட்டக்குடித் தாசி, தஸ்தகீர் ராவுத்தரின் பையன் சுலைமான், பிஷாரடி வைத்தியர் என்று பலப்பல நபர்கள் வந்துப் போனாலும் ஆசிரியரின் தெளிவான காட்சியமைப்பால் எல்லோரையும் நம் கண்முன் நிறுத்துகிறார். பல ஊர்கள், நான்கைந்து கலாச்சாரங்கள், இரண்டு மூன்று தலைமுறைகாரர்கள் என்று கதைச் சென்றாலும் கொஞ்சம் கூடத் தொய்வில்லை.

என்னைப் பொருத்தவரை இந்த நாவலின் சிறப்பே அதன் ஆழமான கதாப்பாத்திரங்களும், தெளிவான காட்சிகளும் தான், அதனால் ஒரு வரிக்கூட விடாமல் படிக்க வேண்டி இருந்தது. சில பக்கங்களை நான் இரண்டு/மூன்று முறைக்கூடப் படித்தேன், அப்படி படித்து உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நாம் எதையோ விட்டுவிடுவதுப் போல் தோன்றுகிறது. ஆசிரியர் நிஜமாகவே எல்லா இடத்திலும் இருந்துக் கேட்டு எழுதியதுப் போல உள்ளது வசனங்கள் – அது பிரமாணர்களின் தமிழ் ஆகட்டும், மலையாளம் ஆகட்டும், முன்னோர்கள் சொல்லும் சமஸ்கிரத பாடல்கள் ஆகட்டும், கப்பலில் வரும் அமொரிக்கர் பேசும் ஆங்கிலமாகட்டும்,  கிறிஸ்தியானிகள் பேச்சாகட்டும் ஒருவரால் எப்படி இவ்வளவு நடைகளைச் சுலபமாக எழுதமுடிகிறது?.

470 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலைப் படிக்க பிடிக்கும் என்றால் படிக்க வேண்டிய புத்தகம். தமிழில் இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

இணையத்தில் தேடியதில் இந்த நாவலை பற்றிய வேறு சிலரின் வலைப்பதிவுகள் –  நினைவுத்தடங்கள்,  யுவகிருஷ்ணா

Categorized in:

Tagged in:

,