🌍 உலக வரைபடம் என்றாலே டிஜிட்டல் யுகத்திற்கு முன்னர் பள்ளியில் படித்தவர்களுக்கு நினைவிற்கு வருவது மேர்கடர் (Mercator) முறை மேப் தான். 1569-ஆம் ஆண்டு இந்த முறையை அறிமுகம் செய்தது ஒரு டச்சு (பிளெமிஷ்) வரைபட நிபுணர்.
இந்த வகை வரைபடங்களில் ஆப்பிரிக்கா, ஏன் இந்தியாவும் கூட உண்மையில் இருப்பதைவிட சிறியதாகத் தெரியும். காலனிய ஆதிக்கக் காலத்தில் தொடங்கி, பல நூறு ஆண்டுகளாக ஐரோப்பியர்கள் அதிகமாக வாழும் நாடுகளை மட்டும் பெரியதாக இந்த முறையில் காட்டப்பட்டது. கடல் வழி பயணங்களுக்கு உதவவே இந்த முறை உருவாக்கப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த மேர்கடர் முறையை மாற்ற ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனி சமமான பூமி வரைபடம் (Equal Earth Map) போன்ற உண்மையான நிலப்பரப்பு அளவுகளைக் காட்டும் வரைபடங்களைப் பயன்படுத்த ஐ.நா. பரிந்துரைத்துள்ளது. 164 நாடுகள் இதற்கு ஆதரவாகவும், அமெரிக்கா எதிர்த்தும் வாக்களித்துள்ளது. ஆறு நாடுகள் வாக்களிக்கவே இல்லை. இது ஒரு பரிந்துரை மட்டுமே, எந்த நாட்டையும் இது கட்டுப்படுத்தாது.
இது வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. ஐ.நா. சபைக்கு வாழ்த்துகள். இருந்தாலும் ஒரு வருத்தம், உலகில் இரண்டு முக்கிய போர்கள் நடந்துக் கொண்டிருக்கிறது, வானிலை மாற்றங்கள் அதிவேகமாக நடக்கிறது, இதையெல்லாம் கையாள முடியாமல் தவிக்கும் ஐ.நா., ஒரு வரைபடத்தை மாற்ற முயன்றுள்ளது. இதற்கு காரணம் வல்லரசு நாடுகள் ஐ.நா. சொல்வதைக் கண்டு கொள்வதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறது மதிப்புமிக்க ஐ.நா.வின் இப்போதைய நிலைமை.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

