தமிழக கோயில்களில் கேமரா செல்பேசிகளுக்கு தடை

இதை எதற்காக மதிப்பிற்குரிய தமிழக அரசு செய்துள்ளது என்னும் காரணத்தைப் புரிந்துகொள்வது எனக்கு சிரமமாக இருக்கிறது. பாதுகாப்பு காரணம் என்றால் கேமரா இல்லாச் செல்பேசிகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன? ஏற்கனவே பெருந்தொற்றுக்குப் பிறகு எல்லா பிரபல கோயில்களிலும் கட்டுக்கடங்காக் கூட்டம், இப்போது செல்பேசிக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பெரும் கூட்டம் நிற்கும். இது தேவையில்லாத இடைஞ்சல்.

வயதானவர்களே அதிகமாகக் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களால் அதிகத் தூரம் நடக்க முடியாது. ஆட்டோவையோ, அல்லது அவர்கள் வந்த வேறு வண்டியையோ அழைக்க செல்பேசி மிக அவசியம் அதனால் அதை வீட்டில் வைத்துவிட்டு வர முடியாது. தமிழகத்தில் பல கோயில்களிலும் மக்கள் வண்டிகளில் இருந்து இறங்கி, ஏற இடமே கிடையாது. நடு சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, ஹாரன் சத்தத்தில், அவசரம் அவசரமாகவே, உயிரை பிடித்துக்கொண்டே இறங்க வேண்டும். உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன், சென்னை தி.நகர் திருப்பதி பாலாஜி, திருப்பதி தாயார் கோயில்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சூழலில் இப்போது இது வேறு கூடுதல் தொந்தரவு.

செல்பேசியைத் தடை செய்யும் முன்னர், கோயில் வாயிலில் பொது தொலைபேசிகளையும் ஊபர், ஓலா, ராபிடோ நிலையங்களையும் அமைத்துவிட்டு இதைச் செய்திருந்தால் அதைப் பாராட்டி இருக்கலாம். சிங்கப்பூருக்கு சென்றால் ஒவ்வொரு வணிக வளாகங்களிலும் டாக்சிக்களுக்கென்று ஒரு வரிசை இருக்கும், அதை மாதிரி செய்தால் பயனுள்ளதாக இருக்கும். அரசு வாகனங்களில் வந்தால் கோயில் வாசலில் இறங்கலாம் என்கிற எழுதப்படாத சட்டத்தைத் தடைச்செய்திருந்தால் அரசை மனதாரப் பாராட்டலாம்.

இப்படி சொல்லும் நான், கோயிலுக்குள் செல்பேசியினால் வரும் தொந்தரவை மறுக்கவில்லை. இது இன்று இந்தியாவின் சமூகப் பிரச்சினை.

இன்று பலருக்கும் எங்கே செல்பேசியில் பேசலாம், பேசக் கூடாது என்பதில் தெளிவே இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், இயற்கைக் கொஞ்சும் கேரளாவின் குமரகோம் பகுதியின் அழகான ஏரியில் நாங்கள் ஒரு சிறு படகில் சுற்றுலா போகிறோம். ரம்மியமான மாலை சூழலில், எங்களுக்கு நடுவில், அதே படகில் ஒரு வயலின் கலைஞர் மிக அற்புதமாக வாசித்துக்கொண்டுவருகிறார். எனக்கு முன்னால் இருந்த என் சக இந்தியர், அவரது செல்பேசியில் அந்த முப்பது நிமிட பயணத்திலும் பேசிக்கொண்டே வந்தார் – அவரும் இசையை இயற்கையை ரசிக்கவில்லை, பணம் செலவுச் செய்து போன எங்களையும் ரசிக்கவிடவில்லை. இனி சுற்றுலா படகுகளில் போகும் யாருமே செல்பேசியேக் கொண்டுவரக் கூடாது என்றா சொல்ல வேண்டும்?

வேறு சிலர் எப்போதுமே பொதுவெளியில் ஒலிப்பெருக்கி வழியாக சத்தமாகக் கேட்டுக்கொண்டே பேசுகிறார்கள். தனி மனிதருக்கு சுதந்திரம் என்பது ஒரு சிறு வட்டம், அடுத்தவருக்கு தொந்தரவு என்பது அதற்கு வெளியில் இருந்து தொடங்குவதை பலரால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

எப்படியும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், இனி கேமரா இல்லாச் செல்பேசிகளை வாங்கி, அதை எடுத்து வந்து இதே கோயில்களில் பேசிக்கொண்டே இருக்கப் போகிறார்கள்.

தமிழக அரசு மக்கள் மீது அக்கறை உணர்வோடு இந்தத் தடையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading