பதினைந்து ஆண்டுகளுக்குப் (2011, 2026) பிறகு ஆப்பிள் மேக் கணினி ஒன்றை வாங்கியுள்ளேன்.

  • ரூபாய் 59,900 விலைக்குக் கிடைக்கும் ஆரம்ப வகை மேக் மினி கணினியையே வாங்கியுள்ளேன். இந்த விலையில் கிடைக்கும் மேஜைக் கணினிகளிலேயே சிறப்பானது இது என்று ஐயமில்லாமல் சொல்லலாம்.
  • என்னிடம் ஐபோன்-16e இருப்பதால், புதிய கணினியைப் பிரித்து எனக்காக அமைப்பது மிக எளிதாக இருந்தது. என் ஆப்பிள் கணக்கு, வீட்டு வைஃபை (Wi-Fi) கடவுச்சொல், என் விருப்ப மொழித்தேர்வுகள், விசைப்பலகை அமைப்புகள் எனப் பலவும் செல்பேசிக் காமிராவில் ஒரு படமெடுத்தவுடன் அதுவாகவே வந்துவிட்டது. இதையே விண்டோஸ், லினக்ஸ் உலகங்களில் செய்ய அரை மணி நேரம் எடுக்கும்.
  • கடந்த சில மணி நேரமாகப் பயன்படுத்திப் பார்ப்பதில் மேக் மினி கணினி வேகமாகவே இருக்கிறது. இணையதளங்கள் உடனடியாகத் தரவிறங்குகின்றன. யு-ட்யூப் காணொலிகள் தங்கு தடையின்றி ஓடுகின்றன; ஒலியும் தெளிவாக இருக்கிறது.
  • ஐபோனில் இருக்கும் படங்கள் மேக்கில் இருக்கும் ‘போட்டோஸ்’ செயலியில் உடனடியாகத் தெரிகின்றன. ஐபோன் திரையை மொத்தமாக இங்கிருந்தே பார்க்கவும் இயக்கவும் முடிகிறது. எஸ்.எம்.எஸ். (SMS) குறுஞ்செய்திகள் இங்கேயே வருகின்றன. தொலைபேசி அழைப்புகளை மேக் கணினியில் இருந்தே பேச முடிகிறது. இவற்றில் சிலவற்றை விண்டோஸிலும் செய்யலாம் என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளால் மைக்ரோசாப்ட் விண்டோஸில் இருந்து ஐபோனை இணைக்கத் தயாரித்திருக்கும் செயலிகள் சுமாராகவே இயங்கும்; பல சமயங்களில் செல்பேசிக்கும் கணினிக்கும் இடையேயான இணைப்பு விண்டோஸில் துண்டிக்கப்பட்டுவிடும். இங்கே மேக், ஐபோன் இரண்டும் ஆப்பிள் தயாரிப்பு என்பதால் இந்த இணைப்புகளில் சிக்கல்கள் இல்லை

வரும் நாட்களில் இதைப் பயன்படுத்தும்போது எனக்குக் குறிப்பிடும்படியாகத் தெரியும் சாதக, பாதகங்களைப் பகிர்ந்துகொள்ள நினைத்துள்ளேன். நீங்கள் மேக் பயனரா அல்லது விண்டோஸ் பயனரா என்பதைக் கீழே கருத்தில் சொல்லவும். இரு தரப்பு ரசிகருக்குமான சண்டைகள் முடிந்து தசாப்தங்கள் ஆகிவிட்டன; இரு பெரும் நிறுவனங்களும் இரண்டு இயங்குதளங்களுக்கும் பல செயலிகளையும் சேவைகளையும் வழங்கிப் பணம் பார்க்கிறார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நான் வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் கணினிகளையே. காரணம், அதில் எந்தப் பிரச்சினை வந்தாலும் பிரித்துப் போட்டுச் சரி செய்துவிடலாம்; இயங்குதளத்தில் எது எங்கே இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதோடு எனக்கான செயலிகள், அன்றாடம் நான் செய்யும் வேலைகளைச் சுலபமாக்க நான் எழுதி வைத்துள்ள பல ‘பாட்ச் பைல்கள்’ (Batch Files).

ஆனால் சமீபத்திய ஓபன் கிளா (OpenClaw) மோகத்தில் பலரும் மேக் மினி கணினிகளை வாங்கி வருகிறார்கள். அமெரிக்காவிலும் சீனாவிலும் இதற்கு ஏக கிராக்கியாம்; இந்தியாவில் எளிதாகக் கிடைக்கிறது. நான் இணையத்தில் வாங்கிய இரண்டு வாரங்களில், நேற்று எனது புதிய மேக் மினி வந்தது. பார்க்க இரண்டு ‘மில்க் பிக்கிஸ்’ பிஸ்கட் பாக்கெட்டுகளைச் சேர்த்துப் பக்கத்துப் பக்கத்தில் வைத்ததைப் போல இருக்கிறது; அதே அளவுதான். இந்தச் சிறிய அளவில் ஒரு சக்திவாய்ந்த கணினி என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

வீட்டு உபயோகத்திற்காகவே மேக் வாங்கியுள்ளேன். அதனால் அதிகம் செலவு செய்யாமல் மேக் கணினியை முயன்று பார்க்கத் திட்டம். நான் வைத்திருக்கும் திரையகம் (Monitor), விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse) எல்லாமும் மேக் கணினியிலும் வேலை செய்கின்றன. விண்டோஸில் இருக்கும் விசை வரிசைகள் இங்கே மாறும், பழகச் சில நாட்கள் ஆகும். இது எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கக் கூடாது, பார்க்கலாம்.

என் அலுவலகத்தில் என் நிரலாக்கங்களுக்கும், பயணங்களில் மேடைப்பேச்சுகளுக்கு நான் எடுத்துச் செல்லும் மடிக்கணினி ஆகிய இரண்டுமே விண்டோஸ் தான். இவை நன்றாக இருப்பதால், இந்த ஆண்டு இவற்றை மாற்றும் எண்ணம் இல்லை. ஏ.ஐ. தரவு மையங்களின் தேவைகளால், புதிய கணினி மற்றும் நினைவகங்களின் விலைகள் எங்கேயோ போய்விட்டன. அதனால் எனக்குத் தேவையான சக்திவாய்ந்த கணினிகள் இப்போது யானை விலை, குதிரை விலை.

இப்படி வீட்டில் மேக், அலுவலகத்தில் விண்டோஸ் பயன்படுத்துவது என்பது சற்றே சிக்கலாக இருக்கும். இதே முறையை நான் முன்பும் செய்திருக்கிறேன். 2011-ஆம் ஆண்டு முதல் முறையாக மேக் கணினி, தட்டைத் திரை ஐ-மேக் வாங்கினேன். ஆனால் இப்போது நான் பயன்படுத்தும் செயலிகள் பலவும் இணைய வலையுலாவிகளிலிருந்தே (Browsers) இயக்கப்படுகின்றன. அதோடு மைக்ரோசாப்ட் வோர்டு, எக்சல், ஆபிஸ் செயலிகள் மேக்கிற்கும் மைக்ரோசாப்ட் 365 சந்தாவிலேயே கிடைப்பதால் அந்தச் சிக்கல் இல்லை. இவற்றோடு என் கோப்புகள் அனைத்தும் மேகக் கணிமை சேவைகளில் (மைக்ரோசாப்ட் ஒன்-டிரைவ், டிராப்-பாக்ஸ்) இருப்பதால், என்னுடைய எல்லாக் கோப்புகளும் என் எல்லாக் கணினிகளிலும் வந்துவிடும்.

வரும் மாதங்களில் மேக் – விண்டோஸ் இரண்டையும் பயன்படுத்திப் பார்க்கத் திட்டம். பார்ப்போம்.

Mac mini with Apple M4 chip 10-core CPU, 10-core GPU, 16GB unified memory, and 256GB SSD
Mac mini with Apple M4 chip 10-core CPU, 10-core GPU, 16GB unified memory, and 256GB SSD
Three Thunderbolt 4 ports, HDMI port, Ethernet port. Two USB-C ports  in the front
Three Thunderbolt 4 ports, HDMI port, Ethernet port. Two USB-C ports in the front
Opening setup screen Mac OS, April 2026
Opening setup screen Mac OS, April 2026
My desktop with Mac Mini M4, LG 80cm 4K UHD Monitor, Lenovo Ergonomic Keyboard and Incase Bluetooth Ergonomic Mouse
My desktop with Mac Mini M4, LG 80cm 4K UHD Monitor, Lenovo Ergonomic Keyboard and Incase Bluetooth Ergonomic Mouse

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading