வல்லுநருக்கும் (?) வழுக்கும், மறக்கும்.
நேற்று மாலை 7 மணிக்கு ஒரு வீடியோ கால் இருந்தது. அதற்குப் பத்து நிமிடம் முன்புதான் வீட்டுக்கு வந்திருந்தேன். அவசர அவசரமாக டீம்ஸ் காலில் சேரப் போனால் என் மடிக்கணினியில் காமிராவே இல்லை என்று சொன்னது. அடுத்த இரண்டு நிமிடம் எனக்குத் தெரிந்ததைச் செய்து பார்த்தேன், சரியாகவில்லை. நேரமாகிவிட்டதே என்று இணைப்பில் சேர்ந்து, என் முகம் தெரியாததற்கு மன்னிப்புக் கேட்டுப் பேசியே முடித்தேன்.
பின் எனக்குத் தெரிந்த விண்டோஸ் அமைப்புகள், கணினி அமைப்புகள் என எல்லாவற்றையும் நோண்டிப் பார்த்தேன். காமிரா இல்லை என்றே வந்தது. சரி, அமேசான் தளத்திற்குச் சென்று புதிதாக ஒரு யு-எஸ்-பி-சி காமிரா வாங்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன்.
அதற்கு முன்னர் ஒருமுறை தேடிப் பார்க்கலாம் என்று கூகுள் ஜெமினிக்குப் போய் என் கணினியின் பெயர், மாடல் எண்ணைக் கொடுத்தேன். அதன் முதல் பதிலே எனக்கான விடையாக அமைந்தது.
அதாவது, இந்த மாடல் மடிக்கணினியில் வலது பக்கவாட்டில் காமிராவைத் துண்டிக்க ஒரு விசை இருக்கிறது. இந்தக் கணினியில் இருக்கும் பாதுகாப்புக்கான ஒரு சிறப்பு வசதி. எப்படியோ அந்த விசையில் கை பட்டு அணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மடிக்கணினியை நான் வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன, இருந்தாலும் எப்பொழுதோதான் இதை இயக்குகிறேன். பெரும்பாலும் நான் பயன்படுத்துவது மேசைக் கணினியை, அதனால் இது இருப்பதை நான் கவனிக்கவில்லை, அல்லது மறந்துவிட்டிருக்கிறேன்.

இந்த விசையை எதிர்ப்புறம் தள்ளியவுடன் காமிரா பளிச்சென்று என் முகத்தைக் காட்டியது. இருந்தும் என்ன செய்ய, முக்கியமான கால் முடிந்துவிட்டது.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

