செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உலகில் கூகுளின் அதிரடிகள் ஓயாமல் தொடர்கின்றன. நேற்று கூகுள் ‘போமேலி’ (Pomelli) என்கிற சோதனை முயற்சியைப் பற்றிப் பார்த்தோம். இன்றைக்குக் கூகுளே எப்படி ஓர் இசையமைப்பாளராக, பாடலாசிரியராக, பாடகராக இருந்து ஒரு பாடலை முழுவதுமாக உருவாக்குகிறது என்பதைப் பார்ப்போம்.
இந்தப் புது வசதியை இயக்குவது அவர்களது லைரியா (Lyria) என்கிற இயற்றறிவு (Generative AI) மாதிரி. இதுவும் ஜெமினி செயலியின் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு என்னென்ன செய்யலாம்?
- உங்கள் செல்பேசியில் எடுத்திருக்கும் படமொன்றைக் கொடுத்து ஒரு பாடலைப் பெறலாம். அந்தப் படம் வெளிப்படுத்தும் மனநிலைக்கு ஏற்ப அந்தப் பாடல் அமைந்திருக்கும்.
-
ஏற்கனவே இருக்கும் பாடல் வகைமைகளில் (Genre) இருந்து ஒன்றைத் தேர்வு செய்து, அதோடு உங்கள் விருப்பங்களைச் சேர்த்துப் புதுப் பாடலை உருவாக்கலாம். உங்களுக்குப் பிடித்த வரிகளை, நீங்கள் எழுதிய வரிகளைக் கொடுக்கலாம். உங்கள் வரிகளை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், அதை அடிப்படையாகக் கொண்டு புதுப் பாடலை லைரியா உருவாக்கும்.
இயற்றறிவு இசையமைத்துப் பாடல்களை உருவாக்கும் வசதி சுனோ ஏஐ, சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோ-பைலட் செயலிகளில் மூன்று நான்கு ஆண்டுகளாக இருக்கிறதே? ஜெமினி வழங்குவதில் அப்படி என்ன புதுமை என்று கேட்டால், “அவற்றையெல்லாம் விட நேர்த்தியான பாடல்களை வழங்குகிறோம்” என்கிறார்கள் கூகுள் பொறியாளர்கள். அதோடு மற்ற செயலிகளை விட உங்கள் கட்டளைகளுக்கு ஏற்பப் பாடலின் பகுதிகளைத் துல்லியமாக உங்களால் நிர்வகிக்க முடியும் என்கிறார்கள்.
இன்றைக்கு நான் முயற்சித்ததில் கூகுள் லைரியா உருவாக்கிய மூன்று பாடல்கள் இங்கே:
🎼 நாம் செல்லும் இடங்களிலெல்லாம் செல்பேசித் தொல்லை, கோயில்களில் கூடச் செல்பேசிப் பயன்பாடு. இதைத் தெய்வமே தடுப்பது போன்ற கருத்தைச் சொல்லும் எனது கவிதையை (ஒன்றிரண்டு மட்டும் எப்போதோ தெரியாமல் எழுதிவிட்டேன்!) கொடுத்து, “இதற்கு இசையமைத்துப் பாடவும்” என்றேன். அதுவே நீங்கள் கேட்கும் “திருமுருகக் கடவுள்” பாடல். எனது கவிதையின் முழு வரிகள் இங்கே.
🎼 மாணவர்களுக்குத் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியைப் பற்றிய ஒருவரிக் கவிதை (இது 2020-இல் எழுதியது). எனது கவிதையின் முழு வரிகள் இங்கே. இந்தக் கவிதைக்குப் பாடல் வரிகளை எழுதி, இசை அமைத்து, ஒரு பாடலை உருவாக்கச் சொன்னேன்.
🎼 பாரதியாரின் “சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா!” பாடல் வரிகளுக்கு மெட்டுப் போடச் சொன்னேன். அதில் பதிப்புரிமைச் சிக்கல் இருக்கலாம் என்பதால் “முடியாது” என்று கைவிரித்துவிட்டது. சரி, எம்.ஜி.ஆர் அவர்களை வாழ்த்திப் பாடல் அமைக்கச் சொன்னேன். அதற்கும் மறுத்துவிட்டது. “வாழ்ந்த, வாழும் கலைஞர்களின் வரிகளையோ, அவர்களைப் பற்றிய பாடல்களையோ இசைக்க மாட்டேன்” என்றது. சரி, “சின்னஞ் சிறு கிளியே” பாடலின் கருத்தை மட்டும் கொண்டு நீயாக ஒன்றை உருவாக்கு என்றேன்; அதுவே நீங்கள் கேட்கும் மூன்றாவது பாடல்.
இதில் முக்கியமான செய்தி, இப்படி வரும் பாடல்களுக்கு நீங்களே ராஜா! வேறு எந்த ‘ராஜா’வும் அந்தப் பாடலில் உரிமை கொண்டாட வாய்ப்பில்லை.
தற்போது 30 நொடிகளுக்கே பாடல்கள் வருகின்றன; வருங்காலத்தில் இது அதிகப்படுத்தப்படலாம்.
லைரியா உருவாக்கும் எல்லாப் பாடல்களிலும் கூகுளின் சிந்த்-ஐடி (SynthID) கட்டாயம் இருக்கும். இது கண்ணுக்குத் தெரியாத (நம் காதால் தனியாகப் பிரித்து உணர முடியாத) டிஜிட்டல் அடையாளக் குறி (நீர்க்குறி). இந்தக் குறியைக் கொண்டு ஏ.ஐ. உருவாக்கிய பாடல்களை இனம் கண்டுகொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பாடலைக் கூகுள் ஜெமினியிடம் கொடுத்தால், அது ஏ.ஐ. பாடலா இல்லையா என்பதை இந்தச் சிந்த்-ஐடி இருப்பதை வைத்துக் காட்டிக் கொடுத்துவிடும்.
இதுவரை இந்தச் சிந்த்-ஐடி பாதுகாப்பு முறையைத் தீர்மானமாக உடைக்கும் வழிகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதற்காக இந்த நீர்க்குறியை நீக்கவே முடியாது என்று அர்த்தமில்லை; இதுவரை செய்யவில்லை என்றே கொள்ள வேண்டும்.
குறிப்பு: சிந்த்-ஐடி எப்படி வேலை செய்கிறது? ஒரு பாடல் கோப்பில் இருக்கும் ஒலி அலைகளை ஸ்பெக்ட்ரோகிராமாக (ஒலி அதிர்வெண் படமாக) மாற்றி, அதில் கேட்க முடியாத சமிக்ஞையை மறைவாகப் பொதிந்து, மீண்டும் ஒலியாக மாற்றிவிடுகிறது. கூகுள் தங்களின் முறையை வெளிப்படையாகப் பகிரவில்லை என்பதால், இது இத்துறை வல்லுநர்களின் ஊகமே.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

