நம்ம ஊர் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுள் கலக்குகிறது. 2022 இறுதியில் அதிரடியாக வெளிவந்த சாட்ஜிபிடி (ChatGPT) தந்த சந்தைத் தாக்குதலை முதலில் சமாளிக்க முடியாமல் திணறிய கூகுள், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மீண்டும் கலக்குகிறது. கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு ஒரு புது வசதியை, ஒரு புதுத் திறனை வெளியிடுகிறார்கள். இதைப் பார்த்து அமெரிக்கப் பங்குச் சந்தையும் கூகுள் பங்கின் மதிப்பை உயர்த்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் வெளியிட்ட ஒரு சோதனை வசதி – கூகுள் போமேலி (Pomelli). இது உங்கள் இணையதள முகவரியை வைத்துத் தானாகவே விளம்பரங்களை உருவாக்கும் ஒரு சோதனை முயற்சி. ஆர்வமுள்ளவர்கள் கூகுள் லேப்ஸ் (Google Labs) இணையதளத்தில் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் (இணைப்பு இங்கே). தற்போது இந்த வசதி அமெரிக்காவிற்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.
இதைப் பற்றி கடந்த சில தினங்களாகப் பல குழப்பமான பதிவுகளைப் பார்க்கிறேன். அதனால், இது என்னவென்று உங்களுக்குப் புரியும்படித் தெளிவாக விளக்கவே இந்தப் பதிவு.
இந்தக் கூகுள் போமேலியைக் (Pomelli) கொண்டு எனது ‘மாங்கோ இடியட்ஸ்’ (mangoidiots) வலைத்தளத்திற்கு அது உருவாக்கிய சந்தைப்படுத்தல் (Marketing) படைப்புகளைத்தான் முதல் ஆறு படங்களில் நீங்கள் பார்க்கிறீர்கள். இதைச் செய்ய நான் கொடுத்தது எனது வலைத்தளத்தின் இணைய முகவரியை மட்டுமே. அதுவாகவே என் வலைத்தளம் என்ன, யாருக்காக எழுதப்பட்டுள்ளது, அதை எப்படிப் பிரபலப்படுத்துவது என எல்லாவற்றையும் கணித்து (யோசித்து) இவற்றைத் தயார் செய்துள்ளது.



போமேலியில் இருக்கும் இன்னொரு வசதி ‘போட்டோஷுட்’ (Photoshoot). இதன் மூலம் உருவாக்கிய உணவுப் படங்களைத்தான் நீங்கள் வரிசையில் எட்டாவதிலிருந்து பார்க்கிறீர்கள். இவற்றை உருவாக்க மூலமாக நான் கொடுத்தது ஏழாவதில் இருக்கும் அந்தச் சாதாரணப் படம் – அது இன்று நான் வீட்டில் உண்ட காய்கறிகளின் படம். எந்தவிதமான பிராம்ப்ட் வடிவமைப்புகளும் (Prompt Engineering) நான் கொடுக்கவில்லை. தானாகவே உணவுப் படத்தைப் பார்த்து, அதற்கு ஏற்ற விளம்பரப் படங்களை உருவாக்கிவிட்டது.
இப்போது இருக்கும் இயற்றறிவு (Generative AI) தளங்களில் (சாட்ஜிபிடி, ஜெமினி) இருந்து இந்த போமேலியின் சிறப்பு – இது மிக மிகக் குறைவாகவே மதிமயங்கும். உங்கள் தளத்தில் இருக்கும் உங்கள் தயாரிப்புகளைப் பற்றி மட்டுமே பேசும்; அங்கிருக்கும் அதிகாரப்பூர்வமான படங்களை மட்டுமே பயன்படுத்தும்.
இனி மார்க்கெட்டிங் குருக்கள் தேவையில்லை, ஸ்டுடியோக்கள் தேவையில்லை, கேன்வாவும் (Canva) தேவையில்லை என்கிற சூழ்நிலை விரைவில் வந்துவிடும். கூகுள் ஜெமினி சந்தா மட்டுமே போதும்!
குறிப்பு: போமேலி தயாரித்துள்ள படங்களைப் பார்த்து இதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். விரைவில் இதனை கூகுள் தனது விளம்பரக் கட்டமைப்பில் (Advertisement Platform) செயல்படுத்திவிடும் என்று எதிர்ப்பார்க்கலாம். அப்படிச் செய்தால், உங்கள் சேவையைப் பற்றி அல்லது தயாரிப்பைப் பற்றி நீங்கள் ஓரிரு வரிகள் எழுதினால் போதும்; கூகுள் ஏ.ஐ.யே உங்களுக்காக விளம்பரங்களை உருவாக்கி, அவற்றை வெளியிட்டு, அதன் முடிவை உங்களுக்கு வழங்கும். அல்லது அந்த முடிவை வைத்து மீண்டும் புதிய விளம்பரங்களை உருவாக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூகுளுக்குப் பணம் கட்டிக் கொண்டிருப்பது மட்டுமே.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

