ஒரு காலத்தில் உலகையே கட்டியாண்ட, இரு பெரும் உலகப் போர்களின் களமான ஐரோப்பாவின் இன்றைய நிதி நிலைமை, இராணுவ நிலைமையும் மோசமாக இருக்கிறது. இந்த நிலைக்கு, வெளியில் இருந்து வரும் தாக்குதல்களைத் தாண்டி பல பிரச்சனைகள் உள்ளிருந்தே, தனக்கு தானே சூன்யம் வைக்கும் செயல்கள் என்று DW News சானலில் நான் பார்த்த காணொலி சொல்கிறது.
முக்கியமாக ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு நாடும், தங்களுக்கான சட்டங்களை, உப்புச் சப்பு பெறாத விஷயங்களில் பின்பற்றப்படும் முறைகளை சீர் அமைத்தாலே வெளியில் இருந்து வரும் பத்து சதவிகித வரி விதிப்பினால் வரும் பாதிப்பின் அளவைவிட வளரலாம் என்கிறது இந்த காணொலி.
இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ஐரோப்பாவை நகையாடலாம். ஜெர்மன் மொழியில் Schadenfreude என்றுச் சொல்வதைப் போல, ஐரோப்பாவின் கஷ்டங்களைப் பார்த்து மகிழலாம். ஆனால், இந்த வீடியோவில் ஐரோப்பாவிற்குச் சொல்லப்படுவதைப் போலவே இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது வெளியில் இருந்து வருவதை விட உள்ளுக்குள் இருந்து வருவதே அதிகம். வெளியில் இருந்து நம்மீது போடப்படும் வரிகளால் (Tariff) வருவதை விட நமக்கு நாமே உருவாக்கி வைத்துள்ள பிரச்சனைகளே அதிகம். இவற்றை களைந்துவிட்டால் இந்தியா வல்லரசாகும் நாள் இன்னும் விரைவிலேயே வரும், நம் மக்கள் அனைவரும் செழிப்பாக வாழ்வார்கள்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவந்தப் பிறகு இந்தியாவில் மாநிலத்திற்கும் மாநிலத்திற்கும் வியாபாரம் செய்வது மிகப் பெரியளவில் எளிதாகிவிட்டது. இந்தியா ஒரே நாடு என்பதால் இங்கே கல்வி தகுதிகள், பொருளின் தரக்கட்டுப்பாடு போன்றவைகளில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே முறை தான், அதில் சிக்கல் இல்லை. ஆனால், இங்கே இருக்கும் பெரிய சிக்கலே தேவையில்லாத சிவப்பு நாடாவும், தேவையில்லாத சட்டத்திட்டங்களும் தான்.
உதாரணமாக சென்னையில் ஆட்டோ கட்டணத்தை சீரமைக்க கடந்த பல பத்தாண்டுகளில் எந்த அரசாலும் முடியவில்லை – இப்படி செய்ய முடியாத சட்டங்களை எடுத்துவிடலாம். சட்டம் இருந்தும் முறைப்படுத்த முடியாமல் இருப்பது சட்டத்தின் மாட்சிமையைக் குலைக்கிறது, இலஞ்சத்தை ஊக்குவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆட்டோ சங்கங்களே இதை அவர்களுக்குள் முடிவு செய்துக் கொண்டு அரசிற்கு தெரிவிக்கலாம் என்றுச் சொல்லிவிடலாம். இதே போலவே இன்னும் பல பல சட்டங்கள். பல சாதாரண விதிமீறல்களுக்கு இன்றும் கைது, கிரிமினல் தண்டனைகள், சிறையடைப்பு, இவற்றை நீக்கி, எளிதாக்கலாம்.
தண்டனைகள் கடுமையாவதைவிட சட்டங்கள் பின்பற்றப்படுவதே முக்கியம்.
ஆனால் இவற்றைச் செய்ய மனதளவில் மாற்றங்கள் வேண்டும். எல்லா அரசும் இவற்றைச் செய்வதாகச் சொல்கிறது, ஆனால் செய்வது குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசுத் துறைகளும், நம்மை ஆண்ட, ஆளும் இரு பெரும் தேசிய கட்சிகளும், எல்லா மாநில கட்சிகளும் என அனைவருமே இன்னும் வியாபாரிகளை கெடுக் கெட்ட சுயநலவாதிகளாகப் பார்க்கிறார்கள். எப்படி ஒவ்வொரு விவசாயியும் நாட்டிற்கு முக்கியமோ, அதே போலவே தான் ஒரு பூ வியாபார பெண்மணியும், ஒரு சிறு பெட்டிக் கடை நடத்துபவரும், ஒரு சிறு சேவை நிறுவனம் நடத்துபவரும். ஆனால் நாம் விவசாயியை கடனாளி ஆக்கி, கடன் தள்ளுபடிக்காக அவனை அரசை எதிர்பார்க்க வைக்கிறோம். அவனை பெரிய தொழில் அதிபராக, முதலாளியாக வளரவிடாமல் நம்முடைய காலனியக் கால சட்டங்களைக் கொண்டு அடக்குகிறோம். சிறு வியாபாரிகளை முடிந்தளவு வரிகளால், குழப்பமான சட்டங்களால், உதவாத அரசு துறைகளால், அவர்களின் வியாபாரத்தை வளரவிடாமல் தடுக்கிறோம். எங்கும் பெரிய தொழிற்சாலைகளை நிறுவ விடாமல், அவர்களிடம் முதலிலேயே இலஞ்சம் கேட்கிறோம்.
இந்த சிக்கல்களை என்று இந்தியா உண்மையில் உணர்ந்து, கையாள்கிறதோ அன்று நம்மை மிஞ்ச எந்த நாடும் இல்லை – “சாரே ஜகான் சே அச்சா”. ஆனால் நம்முடைய எதிரிகள் கவலைப்பட தேவையில்லை, இதையெல்லாம் இந்த நூற்றாண்டில் நாம் சரி செய்ய வாய்ப்பேயில்லை. இந்த விஷயத்தில் என் தலைமுறை என் பிள்ளைகளுக்கு பெரும் தீங்கு இழைத்துவிட்டோம் என்று நான் அடித்துச் சொல்லுவேன்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

